“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நாளைக்கே பெண் பார்க்க போகலாம்னு தரகர் சொல்லிட்டார். நானும் ஓகே சொல்லிட்டேன். நாளைக்கு நாள் நல்லாயிருக்கு. போயிட்டு வந்துடலாம்” பசுபதி சொல்ல, “நான் ரெடிங்க. உங்க பிள்ளை பிரபு, மாப்பிளை, பெண்ணைக்கேளுங்க. அவங்க இன்னைக்கு ஊருக்கு போகனுங்கறாங்க” என்றாள் கமலம்.
“அவங்களை நான் ரெடி பண்றேன். இந்தக் காலத்திலே பெண்ணே கிடைக்க மாட்டேங்குது. கிடைச்ச உடனே ‘சட்டுபுட்டு’னு முடிச்சிடனும். எங்கே மாப்பிளை?” பறந்தார் பசுபதி.
“அவரு காலையிலே எந்திரிச்சு அடுத்த தெரு பசங்களோட கிரிக்கெட் விளையாட போயிட்டாரு”, சின்னப்பிள்ளை மாதிரி...” குறைபட்டாள்.
“அவர் பெரிய ஸ்போர்ட்ஸ் மேனாச்சே! சரி, வரட்டும். கீதா எங்கே?”
“உங்க பெண் கீதா வந்ததிலேயிருந்து பாட்டு டீச்சர் வீட்டிலேயே இருக்கா. புகார் படித்தாள்”
“இப்ப வீட்டிலே யாருமே இல்லையா?” கடுப்பாகி கேட்டார் பசுபதி.
“ஏம்பா நானிருக்கேன்” என்றபடி வந்தான் பிரபு.
“நாளைக்கு நீ ஃப்ரீயாயிருந்தா நமச்சிவாயம் பெண் மீராவை உனக்கு பெண் பாத்துட்டு வந்துடலாம்”
“என்னப்பா ஐ.டி. கம்பெனியெல்லாம் சனி,ஞாயிறு லிவு தானே.”
“ஓ! நாளைக்கு சன்டே. அப்ப மாலை 6 மணிக்கு மேலே போய் பார்க்க ரெடியாகு. பேன்ட், ஷர்ட் புதுசா வேணும்னா வாங்கிக்க” என்றவர் பெண் கீதா உள்ளே வருவதை பாத்து “அம்மாடி! இப்படி வா. நாளைக்கு நமச்சிவாயம் பெண் மீராவை பிரபுவுக்கு பெண் பார்க்கலாம்னு ஐடியா. நீயும், மாப்பிளையும் கூட வந்தா நல்லாயிருக்கும்” என்றார்.
“கண்டிப்பா. நாளைக்கு மாப்பிளையும் ஃப்ரீதான் ஜமாய்ச்சுடலாம்” என்றாள். “அம்மா இனிமே வீட்டிலே ஆனந்த பைரவி தான்” - கிண்டலடித்தாள் கீதா.
“முகாரியா இல்லாம இருந்தாச் சரி” என்றார் பசுபதி.
நண்பன் ரகுவையும் அவன் காரோடு ஒரு பந்தாவிற்கு கூட்டி வந்தான் பிரபு.
பெண்ணின் அப்பா தமிழாசிரியர். பரம்பரையாய் தமிழ் பண்டிதர்கள் உள்ள குடும்பம்.
பெண் பார்க்க வந்தவர்களை சகல மரியாதையுடன் வரவேற்று, அன்புடன் உபசரித்தார், டிஃபன், காபி முடித்து பரம திருப்தியாய் பசுபதி “வயிறு நிறைஞ்சிடிச்சு. பெண்ணை வரச்சொல்லுங்க. பாத்து மனசும் நிறையட்டும்” என்றார்.
“நல்ல வார்த்தையா பேசறீங்க. சந்தோஷம். இருங்க மீராவை அழைத்து வரச்சொல்றேன்” நமச்சிவாயம் சொல்ல, மீரா ரொம்ப சிம்பிளாய், நீட்டாய் டிரஸ் செய்து ஒரு பூங்கொத்து போல் நிற்க, பசுபதியும், கமலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க...
“என்ன ஃபேஸியல் பண்ணலையா?” பொறுக்காமல் கீதா கேட்டாள்
“எதுக்கு? என்னைப்பாக்கத்தானே வந்திருக்கீங்க. எப்பவும் எப்படியிருப்பேனோ அப்படித்தானிருக்கேன். தேவையில்லாத அலங்காரம் செய்து உங்களை ஏமாத்த விரும்பலை” மீரா பணிவாய் சொன்னாள்.
கமலம் அசந்து விட்டாள்.
நிமிர்ந்து உட்கார்ந்தார் நமச்சிவாயம்.
“ஏம்மா என்ன படிச்சிருக்கே?” மாப்பிள்ளை ஆம்பித்தார்.
“டிகிரி இன் சைக்காலஜி.”
“அப்படியா? நல்லது. கிரிக்கெட் தெரியுமா? டி20 உலக கோப்பை வின்னர் யார்?”
தெரியாது”
“என்ன உன் வயசு பெண்கள் கிரிக்கெட்னா பைத்தியமா இருக்காங்க. உனக்கு நியூஸே தெரியலையே!”
“அதானே” என்றாள் கீதா “ஏம்மா மியூசிக் தெரியுமா?”
“தெரியாது”
“போச்சு போ!”. கீதா கை உதற
பிரபு “கம்ப்யூடர் தெரியுமா?” என்று கேட்க
“தெரியாது”
“பச்” என்றான் பிரபு
“ஏம்மா டிவி சீரியல் பாப்பியா?”கமலம் கேட்டாள்
“இல்லைங்க”
“ஏன்?”
“அதிலே வீட்டுக்குள்ளே இருக்கறவங்களை கெடுக்கறா மாதிரி தானே சீன் வருது”
“அப்ப ஒன்னும் தெரியாது” கமலம் அலுத்துக்கொள்ள
“ஏங்க ஒரு பெண்ணுக்கு கிரிக்கெட், சங்கீதம், கம்ப்யூடர் எல்லாமே தெரிஞ்சிருக்கனுமா? நல்ல கேரக்டர், படிப்பு, பணிவு, தேவையான துணிவு, அன்பான உள்ளம், அட்ஜஸ்ட் பண்ற தன்மை, பிறத்தியார் மனம் புண்படாத பேசறது, நடந்துக்கறது இதுதான் வேணும். எங்கப்பா இதைத்தான் எனக்கு சொல்லித்தந்திருக்கார். இதிலே நீங்க எதுவுமே கேட்கலையே, உங்க வீட்டிலே உள்ளவங்க எல்லாருடைய விருப்பமும் எனக்கிருக்குமா? நான் நானா இருக்கேன். என்னை மாப்பிளைக்கு பிடிச்சிருக்கனும், எனக்கு அவரை பிடிச்ருக்கனும். அவ்வளவுதான்!” அமைதியாய், ஆனால் தெளிவாய் சொன்னாள்.
“ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வாய் ஆகாது” கமலம் கோபப்பட, மீரா “உங்க ஃபேமிலிக்கு நான் மேட்ச்சாக மாட்டேன் என்று எழுந்து சென்றாள்.
“நல்லா வளர்த்திருக்கீங்க பெண்ணை! கமலம் கேலி பேச,
“இது தான் பாரதி சொன்ன நேர்பட பேசுங்கறது. என் பெண்ணுக்கு கராத்தே தெரியும், ப்ளாக் பெல்ட். உங்க வீட்டில் யாருக்காவது கராத்தே தெரியுமா?” என்று நமச்சிவாயம் சிரித்தபடி கேட்க...
ஏகப்பட்ட சிந்தனையுடன் பசுபதி “வரேங்க” என்று கைகூப்பி தன் குடும்பத்தோடு எழுந்து சென்றார்.