How did a, a, e, e come about? m.facebook.com
கல்கி

அ, ஆ, இ, ஈ வந்தது எப்படி?

சொல்வதெல்லாம் தமிழ்

இரவிசிவன்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ - ஆகியன தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் என்பது சிறு வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

பேச்சு வழக்கில் அனா, ஆவன்னா என நம்மால் சொல்லப்படும், இந்த வரிசை அமைப்பு பிற்காலத்தில் 'நெடுங்கணக்கு' எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், இந்த ஒலிகள் எப்படித் தோன்றின? எந்த வழிமுறையைப் பின்பற்றி நம் முன்னோர் இதனை வடிவமைத்தனர்? - என்பது நம்மில் பலர் அறியாததாகும்.

அ முதல் ஔ வரையிலான 12 ஒலிகளும் எழுத்துக்களாகத் தோற்றம் பெறுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, அவை ஒலிக்குறிப்புகளாக பேசப்பட்டவை ஆகும்.

காடுகளில் சைகை மொழியில் எண்ணங்களை பரிமாறத் தொடங்கிய ஆதிமனிதன் முதன்முதலில் ஆ, ஈ, ஊ போன்ற மூன்று ஒலிகளையே முதன்மையாகப் பயன்படுத்தினான்.

உயிர் எழுத்துகள்

தொலைவில் இருப்பவற்றைக் குறிக்க... அ ஆ!
அருகில் இருப்பவற்றைக் குறிக்க... இ ஈ!
இடையில் இருப்பவற்றைக் குறிக்க... உ ஊ! - என மிக எளிமையாக ஒலியெழுப்பி, தனது எண்ணங்களை அடுத்தவருக்கு கடத்தினான்.

இதனடிப்படையிலேயே தன்னால் இயன்ற சிறிய சொற்களை அமைத்துப் பேசத் தொடங்கிய பின், மொழி என்னும் மாபெரும் விளைவு  மலர்ந்தது.
மனிதனின் முதல் மொழி மிக எளிதாக தொண்டையில் இருந்து பிறக்கும் வளியின் மூலம் உருவானதாக இருக்கவேண்டும் என்ற இன்றைய மொழியியலாளர்களின் கருத்து தமிழ் மொழியோடு, தமிழ் மொழியின் முதல் ஒலிக்குறிப்புகளான மெய்யொலிகளோடு மிகவும் ஒத்துப்போகிறது என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
இதனால்தான் பிற்காலத்தில் அ, இ, உ ஆகிய மூன்றும் சுட்டொலிகள் என்றழைக்கப்பட்டன. சுட்டிக்காட்டும் ஒலி = சுட்டொலி.

நம் தமிழ் மொழியை இப்பொழுது நீங்கள் உற்று கவனித்தால்...அ - என்ற ஒலியின் வழி பிறந்த சொற்கள் படர்க்கை எனப்படும். அதாவது, கண் பார்வைக்கு அப்பால் சேய்மையையே (தொலைவில் உள்ளவை) குறிக்கும். (அது, அதோ, அப்போது, அங்கு, அங்கே, அப்படி, அப்புறம், அப்பால், அவன், அவள் , அவர்கள்...).
இ - என்ற ஒலியின் வழி பிறந்தவை தன்னிலை எனப்படும், அதாவது அண்மையைக் (அருகில் இருப்பவை) குறித்தது. (இது, இதோ, இப்போது, இங்கு, இங்கே, இப்படி, இப்புறம், இப்பால், இவன், இவள், இவர்கள்).
உ - எனும் ஒலியின் வழி பிறந்தவை முன்னிலை எனப்பட்டது. அதாவது சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்டுக் கண்ணுக்குத் தெரிவதைச் சுட்டிக்காட்டும் நோக்கில் அமைந்தது. (உது, உங்கே, உவன்,உவள், உவர்கள்...).

இவ்வாறு  சுட்டொலிகளாக முதலில் தோன்றிய அ,இ,உ ஆகிய ஒலிகள் மூன்றையும் பின்வருமாறு மாற்றி மாற்றிச் சேர்த்து மேலும் புதிய ஒலிகளை உருவாக்கினான் ஆதிமனிதன்.
அ + இ > அய் = ஐ
இ + அ > இய = எ
அ + உ > அவ் = ஔ
உ + அ > உவ = ஒ
இங்ஙனம் உருவான ஒலிகளே பிற்காலத்தில் குறில், நெடில் என மென்மேலும் வகைப்படுத்தப்பட்டன.
அ, இ, உ, எ, ஒ  = குறில்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள = நெடில்.
பின்னர் அவ்வொலிகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ - என இன்றைக்கு நாம் காணும் அமைப்பில் வரிசைப்படுத்தப்பட்டன.
மொழி, எழுத்து உருவாக்கத்தில் இந்த முறையையே பின்னர் உருவான அனைத்து இந்திய மொழிகளிலும் பின்பற்றப்பட்டது.


சரி, இவற்றை ஏன் உயிர் எழுத்துகள் என்றழைக்கிறோம்?

யிருக்கு முதன்மையானது காற்று. இதனடிப்படையில் காற்றை மட்டும் கொண்டு உருவாகும் இந்த ஒலிகள் உயிர் எழுத்துகள் / ஒலிகள் எனப்பட்டன. தொண்டையின் ஊடாக வரும் காற்று, நாக்கு கீழே படிந்திருக்க எவ்வித தடையுமின்றி வெளியேறும்போது உருவாவதே உயிர் ஒலிகள்!

உயிர் எழுத்துகள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனும் உயிர் எழுத்துகள் நாக்கின் துணையின்றி, அதாவது நாக்கு வாயின் மேல் அண்ணத்தில் படாமல் வெறும் காற்றின் துணையால் மட்டுமே உருவாகும் ஒலிகள் ஆகும். 
ஆனால், க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனும் மெய் எழுத்துகள் நாக்கின் துணைகொண்டு உருவாகும் எழுத்துகள் ஆகும். அதாவது, இந்த ஒலிகளை வெளிப்படுத்தும்போது, நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்.  காற்றின் பங்கு மற்றும் உதவியை விட, மெய்யாகிய உடலின் பங்கே மிகுந்திருப்பதால் -   இவை மெய் எழுத்துகள் / ஒலிகள் என்று பெயர் பெற்றன.

இவ்வாறு உயிரும் மெய்யும் இணைந்துருவான நம் உடலைப் போல,  உயிரும் மெய்யும் இணைந்துருவானதே தமிழ் மொழி!

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT