TN Bus Seats 
கல்கி

இருக்கை விஷயத்தில் இறங்கி வாங்க சார்...! நாங்க என்ன புரூஸ்லியா?

கல்கி டெஸ்க்

- தா.சரவணா

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், புதிதாக பதவியேற்றுள்ள அரசு செய்யும் பல பணிகளில் ஒன்றாக, புதிய பஸ்கள், புதிய பளபள நிறத்தில் மாநிலம் முழுவதும் இயக்கப்படுவதைக் காண்கிறோம். இது நல்ல நடைமுறைதான். ஆனாலும் இந்தப் பஸ்களை ஆர்டர் கொடுக்கும்போது, இதற்கான அதிகாரிகள் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பஸ் பயணம் என்பது 10 நிமிடங்களில் முடிந்து விட்டால் ஒரு பிரச்னையும் இல்லை. மாறாக, 2 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரப் பயணம் என்றால், பஸ்சில் இருக்கைகள் எப்படி உள்ளன? என்பதைப் பார்த்துதான் ஏற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், ‛ஒபீசிட்டி’ எனப்படும் உடல் பருமன் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இப்போதுள்ள பஸ்களில் இப் பிரச்னை இருப்பவர்களால் நிம்மதியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக அரசு பஸ்களில் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் 3 பேர் அமரும் இருக்கைகள், அதன் எதிர்புறத்தில் 2 பேர் அமரும் வகையில் இருக்கைகள் இருக்கும். இதில் சற்றே உடல் பருமனானவர்கள் அமர்ந்தால் அவ்வளவுதான். பிரயாணம் முடியும் வரையில், முதுகை முன்பக்கமாக சாய்த்தபடிதான் பயணிக்க வேண்டியிருக்கும். இதனால் பஸ் பிரயாணத்தில் முதுகு வலி வருவதுதான் மிச்சம். இதற்குக் காரணம், இருக்கைகளின் அளவு சிறிதாக இருப்பது.

பஸ்சில் பயணிக்கும் அனைவரும் புரூஸ்லி போன்ற உடல் அமைப்புடன்தான் வருவார்கள் எனக் கூறமுடியாது. உடல் பருமனானவர்கள் பஸ்சில் பயணிக்கும்போது, அவர்கள் அடையும் இன்னல் சொல்லி மாளாது. அதனால் இனியாவது, புது பஸ்களை வழித்தடத்தில் இயக்குவதற்கு முன்னர், இருக்கைகளைச் சற்று பெரிய அளவில் அமைத்தால், அனைவருக்கும் இனிமையான பயணமாக இருக்கும். அதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள், இருக்கை விஷயத்தில் சற்றே யோசித்தால் நன்றாக இருக்கும்.

இது தவிர்த்து, சில பஸ்களின் படிக்கட்டுகள் அதிக உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதனால், அந்த பஸ்களில் ஆண்கள்கூட ஏறுவதற்குச் சிரமப்படுவார்கள். பெண்களும் குறிப்பாக சேலை அணிந்த பெண்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு கூச்சப்படும் நிலை உள்ளது.

பஸ் ஜன்னல்களில் இப்போது கண்ணாடிகள் பொறுத்தப்படுகின்றன. ஆனால், சில பஸ்களில் கண்ணாடிகள் சரிவரப் பொருத்தப்படாமல் இருப்பதால், காற்றுக்காக அதை இழுப்பதோ, தள்ளுவதற்கோ 3 ஆட்கள் பலம் தேவைப்படுகிறது. பெண்கள், மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கும் நிலையும் காணப்படுகிறது. சில பஸ் ஜன்னல்களில் பொறுத்தமற்ற முறையில் கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. இதனால் அந்த ஜன்னலில் இருந்து யாருக்கும் காற்று வரமுடியாத சூழலில் முழுப் பிரயாணத்தையும் அனுபவிக்க வேண்டி உள்ளது.

பஸ்களின் இயக்கத்தில் இருக்கும் பிரச்னைகளும் உண்டு. நேர மேலாண்மை, பஸ்களின் பராமரிப்பு, டிக்கெட்டுகள் விநியோகம் போன்ற பிரச்னைகள் ஒருபுறம் என்றால் இந்த இருக்கைகள், ஜன்னல்கள், படிக்கட்டுகள் போன்றவற்றில் குறைபாடுகள் வேறு!

இப்படியாக அதிகளவு பொது ஜனம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து வாகனமான அரசு பஸ்களில், குறைபாடுகள் உள்ள நிலையில் அதை சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால், இன்னும் அதிகம் பேர், அரசு போக்குவரத்து பஸ்களின் போட்டி போட்டுக்கொண்டு உபயோகிக்கத் தொடங்குவர். போக்குவரத்து துறையும் நஷ்டத்தில் இருந்து மீளும்...

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT