ஓவியம்: தமிழ்
அந்த வீட்டைச்சுற்றி மரணக்காற்று வீசிக் கொண்டிருந்தது. இன்று நேற்றல்ல... கடந்த ஆறு மாத காலமாக. அந்தக் காற்று வீசக் காரணமான ராமசாமி, வீட்டின் நடுவில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். படுக்க வைக்கப்பட்டிருந்தார் என்று சொல்லியதால் இறந்துவிட்டார் என்று அர்த்தம் கற்பித்துக்கொள்ள வேண்டாம். உடல் அசைவின்றி, மெல்லிய உணர்வுடன், பக்கவாதம் தாக்கியன் விளைவாக, கிட்டத்தட்ட ஒரு பிணம் போலவே கிடந்தார். ஏறி இறங்கும் மார்பும், அவ்வப்போது இலக்கின்றி சுழலும் கரு விழியும், வெளியேறும் மலமும், சிறுநீருமே அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தன.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வரை, காட்டிலும், தோட்டத்திலும், அறுபது வயதிலும் ஒரு இளைஞனைப் போல சுற்றித்திரிந்த அவருக்கு, இன்று இந்த நிலமை வரும் என்று யார் சொல்லியிருந்தாலும் அவரின் வீட்டாரும், ஊராரும் நம்பியிருக்கவே மாட்டார்கள்.
இராமபிரானின் அம்பறாத்தூணி போல, தோட்டத்துக்குள் சுற்றி வரும் அவரின் தோளில் எப்போதும் ஒரு மண்வெட்டி தொங்கும். பத்தாம் வகுப்பு முடிந்ததும், விவசாயம்தான் ராமசாமிக்கு என்று முடிவானவுடன் அவன் அப்பா ஆசீர்வதித்துக் கொடுத்த சீதனம்தான் அந்த மண்வெட்டி. கோடை வெயிலின் கடுமையிலிருந்து தப்பிக்க ராமசாமியின் தலையில் வீற்றிருக்கும் கிரீடம் போன்ற உறுமால்கட்டு. நிரந்தரமாய் சேறும், மண்ணும் ஒட்டிக் கிடக்கும் திரண்ட, கருத்த கால்கள். உரம் வாய்ந்த உடலில் சூரிய ஒளிபட்டு, வைரம் போல் மின்னும் வேர்வைத் துளிகள். காலையிலிருந்து இரவு வரை அந்தக் காட்டில் எங்கும் நிரந்தரமாக வியாபித்திருக்கும் ராமசாமியின் வியர்வை நாற்றம் இல்லாத நாட்க ளில், அவரின் ஆடு மாடுகள் அவர் வரும் வழியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும்.
அருமையான மனைவியை அவனுக்குத் தேடிக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டனர் ராமசாமியின் பெற்றோர்கள். வந்து வாய்த்த மனைவி பூங்கோதை குணத்திலும், நடத்தையிலும் சொக்கத் தங்கம். அவள் பெற்றுக் கொடுத்ததும் அழகான இரண்டு பெண்கள். இரண்டு பெண்களுக்கும் பக்கத்து ஊர்களில் இருக்கும் நல்ல வசதியுள்ள விவசாய மாப்பிள்ளைகளையே பார்த்து, சீரும், சிறப்புமாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டார் ராமசாமி.
நல்ல விளைச்சல் கொடுக்கும் அவரின் பூமி, கணவன் மனைவி இருவரின் உழைப்பிற்கும் மரியாதை கொடுத்து நல்ல பலன் கொடுத்ததில், பெண்கள் இருவருக்கும் நல்ல முறையில் சீர் செய்யவும், பண்டிகை செலவுகளுக்குச் சேமித்து வைக்கவும் அவர்களால் முடிந்தது. இப்படி வாழ்க்கை அவர்களின் விருப்பப்படி போய்க் கொண்டிருப்பதை விரும்பாத விதி தன் வேலையைக் காட்டியது. தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ராமசாமி, அந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்து கட்டிலில் படுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூங்கோதை பதபதைப்புடன் அருகில் வந்தபோது அவர் கடைசியாகப் பேசிய முழு வார்த்தை,
' எப்படியோ இருக்குது.. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா..'
தண்ணீரைச் சுட வைத்துக் கொண்டு வந்தபோது ராமசாமியின் உடலின் ஒரு பகுதி இழுத்துக் கிடந்தது.
அதற்குப் பின் பெண்களும், மாப்பிள்ளைகளும் ஓடி வந்து அவரை நகரத்து மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று, மிகச் சிறந்த நரம்பியல் மருத்துவரின் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனாலும் தெளிவில்லாமல், குளறிக் குளறியே பேச முடிந்தது ராமச ராமசாமியின் நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், தேவையான சிகிச்சைகள் அனைத்தும் கொடுத்துவிட்டதா ல், இனி வீட்டிற்குச் சென்று நல்ல சத்துள்ள ஆகாரம் சாப்பிட்டு, சிறிய உடற் பயிற்சிகளையும் செய்தால் தேற வாய்ப்பிருப்பதாகவும் கூறிவிட்டு, மற்றொரு எச்சரிக்கையையும் கொடுத்து விட்டார். அதாவது அடுத்த ஒரு ஆறு மாதத்திற்கு மீண்டும் இது போன்ற ஒரு அட்டாக் வரக்கூடாது. அப்படி வந்தால் ராமசாமியின் உடல்நிலை இதை விட மோசமாகப் போய் விடக்கூடும்.
'பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழியை எவனோ நன்கு அனுபவித்தவன்தான் சொல்லியிருக்கிறான். இல்லாவிட்டால், டாக்டர் எச்சரித்தபடியே, அடுத்த பதினைந்தே நாட்களில் மற்றொரு அட்டாக் வந்து, ராமசாமியை கட்டை போல் படுக்க வைக்குமா?. கம்பீரமாக அந்த காட்டையும், தோட்டத்தையும் சுற்றிச் சுற்றி வந்த மனிதனை, மலமும், சிறுநீரும் மணக்கும் கட்டிலில், ஈக்கள் மொய்க்க கிடக்க வைக்குமா?
எல்லோருடைய கேள்வியும் இதுதான்… இவ்வளவு நல்ல மனிதனுக்கு ஏன் இந்த தண்டனை? (இந்தக் கேள்விக்கு உங்களுக்கும் பதில் தெரிய வேண்டுமென்றால்... கடைசி வரை படிக்கவும்.)
மனைவி பூங்கோதையின் பார்வையில் ராமசாமி…
கட்டிலில் இருந்து வெளியில் நீண்டு கிடக்கும் குச்சி போன்ற கால்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்கோதை. இந்த குடும்பம் செழிக்க எத்தனை நடை நடந்திருக்கும் இந்தக் கால்கள்? அவளுக்கும், அவருக்கும் திருமணம் நடக்கும்போது அவளுக்கு பதினெட்டு வயது, அவருக்கு இருபத்தைந்து. மணமேடையில் அவள் கைகளைப் பிடித்து நடக்கும்போது கூட வலிக்காமல், மென்மையாக அவர் கை பிடித்த பிடியில் தெரிந்தது அவரின் அன்பு.
மணம் முடிந்து கணவன் வீட்டிற்கு வந்த பின், அவரின் ஒவ்வொரு செயலிலும் முழுமையாகத் தெரிந்தது அவரின் சிறந்த குணம். அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள், இதெல்லாம் பெண்களின் வேலை என்று ஒதுக்கி வைத்திருந்ததெல்லாம், அவர் அவளுக்காகச் செய்தார். மாடுகளுக்கு பருத்திக்கொட்டை ஆட்டும் வேலை, வீட்டில் இட்லி மாவு ஆட்டும் வேலை என்று எல்லா வேலைகளுக்கும் பொறுப்பெடுத்து அவளுக்கு வேலைப் பளுவைக் குறைத்தார்.
கல்யாணமாகி வந்த புதிதில், அவருடன் காதலைப் பகிர்ந்து கொண்ட இடங்களைப் பார்க்கும் போதெல்லாம் இன்று கூட வெட்கம் அவளைச் சூழ்ந்து கொள்ளும். தோட்டத்தில், வேப்ப மரத்து நிழலில் போடப்பட்டிருந்த அந்தக் கயிற்றுக் கட்டிலும், குருவிகளை விரட்டுவதற்காக உயரத்தில் போடப்பட்டிருந்த பரணும், அடர்ந்த கரும்புத் தோட்டமும் அவர்களின் காதலுக்கு சாட்சியாக இருந்ததை நினைத்துப் பூரித்தாள் பூங்கோதை.
பெண்கள் வளர, வளர அவரின் உழைப்பு அதிகமாயிற்று. இரவு, பகல் என்பதெல்லாம் கடந்து, உழைப்பே வாழ்க்கை என்றானது அவருக்கு.
ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம், கருப்பசாமி நாடாரின் தோப்புக்குச் சென்று அளவாக ஒரு மொந்தை கள் குடித்து வருவார். அதுவும் பூங்கோதையின் அனுமதியுடன் மட்டுமே. இதைத் தவிர அவள் வேறு எந்தக் குறையும் அவரிடத்தில் கண்டதில்லை.
ஒரு நல்ல கணவனாக, ஒரு நல்ல தகப்பனாக இருந்த ஒரு நல்ல மனிதனுக்கு ஏன் இந்த தண்டனை?
மூத்த மகள் கலாவதியின் பார்வையில் ராமசாமி...
கட்டிலில் அசைவின்றி கிடந்த அப்பாவைப் பார்த்துக் கொண்டே கலாவதி அம்மாவிடம் கேட்டாள்,
'அப்பா எங்களுக்கு சொத்தைப் பிரித்து உயில் ஏதாவது எழுதி வைத்திருக்காராம்மா? அப்படி இருந்தா, பள்ளக்காடு (செழிப்பான பூமி) எனக்குத்தான். இல்லேன்னா கேஸ் போடுவேன் பாத்துக்க'.
அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் மறுபடியும் பேசினாள்,
'அப்பாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா நாந்தான் தேர் கட்டுவேன். லீலா போட்டிக்கு வந்தா... அவ்வளவுதான் பார்த்துக்கோ..' (தேர் கட்டினால் அதற்கு சன்மானமாக தாய் வீட்டிலிருந்து மூன்று பவுன் கொடுப்பார்கள்)
அந்த சுயநலமான மகள் வெளியே போகும்போது முனகிக்கொண்டே போனாள்,
பிறப்பிலேயே சுயநலம் மிக்கவளாகப் பிறந்து விட்டாள் கலாவதி. அவளின் திருமணத்தின்போது ராமசாமி அவளால் பட்ட அவஸ்தையை நினைத்துப் பார்த்தாள் பூங்கோதை. மாப்பிள்ளையின் பெயரை உபயோகித்து அவள் எத்தனை சாதித்துக் கொண்டாள்?
வெளியே போகும்போது மனசுக்குள் கேட்டுக் கொண்டே நடந்தாள் கலாவதி,
'கேட்டதெல்லாம் கொடுத்த நல்ல அப்பன் தானே? இவருக்கு ஏன் இந்த தண்டனை?'.
இளைய மகள் லீலாவதியின் பார்வையில் ராமசாமி...
அப்பாவை படுத்த நிலையில் பார்க்கவே பிடிக்கவில்லை லீலாவதிக்கு. அவளென்றால் அவ்வளவு இஷ்டம் ராமசாமிக்கு. அவளைத் தோளில் தூக்கி வைத்து அவர் சுற்றாத இடமே இல்லை. அவளின் மென்மையான பேச்சும், புத்திசாலித்தனமான செயல்களும் அப்படியே அப்பாவை உரித்து வைத்திருந்தது. கொஞ்சம் வளர்ந்த பிறகு, அம்மாவை வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்து முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள் லீலாவதி. களைத்து வரும் அப்பாவிற்கு சூடாக கருப்பட்டிக் காப்பி போட்டுக் கொடுத்து குளிக்கச் சொல்வாள். குளிக்கும் அறையில் அவருக்கு அளவான சூட்டில் வெண்ணீர் தயாராய் இருக்கும். சோப்பும், துண்டும், மாற்றுத் துணிகளும் தயாராய் இருக்கும். எதுவும் கேட்க வேண்டியதே இல்லை. குளித்துவிட்டு வந்தவுடன் சாப்பிட சுடச்சுடக் களியும், கீரையும் தயாராய் இருக்கும். அதை முடித்தவுடன், அரிசிச்சோறும், கெட்டித்தயிரும் தட்டுக்கு வந்துவிடும். சாப்பிட்டு முடித்துவிட்டு களைப்புடன் படுக்கச் சென்றால் படுக்கை விரிக்கப்பட்டு தயாராய் இருக்கும். பக்கத்தில் இரவில் குடிப்பதற்கு தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கும். மனைவி பூங்கோதை கூட இதுபோல அவருக்குப் பணிவிடை செய்ததில்லை என்பதை ராமசாமியின் மனது சொல்லியது. அக்கா கலாவதியின் கல்யாணத்தின் போது கொஞ்சம் பணப்பற்றாக்குறை வந்தபோது, லீலாவதிக்கென்று சேர்த்து வைத்திருந்த சேமிப்பிலிருந்து கட்டாயப் படுத்தி எடுத்துக் கொடுத்து அவர் சிரமத்தைக் குறைத்தது என்றுமே மறக்க முடியாதது.
கல்யாணம் முடிந்து லீலாவதி கணவன் வீட்டிற்குப் போன மூன்றாம் நாள் நள்ளிரவில் கட்டிலில் உட்கார்ந்து ராமசாமி குலுங்கி அழுது கொண்டிருப்பதைப் பார்த்துப் பதைத்து விட்டாள் பூங்கோதை.
' என்ன உடம்பு சரியில்லையா? நெஞ்சு வலிக்குதா? ' என்றாள்.
'ம்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல... நேத்திலிருந்தே எனக்கு லீலாக் குட்டியை பாக்கணும் போல இருக்கு.'
அவருள் புதைந்து கிடந்த புதிய ராமசாமியை அன்றுதான் பார்த்தாள்.
' அதுக்கெதுக்கு அழுவாச்சி? விடிஞ்சதும் போய் பார்த்துட்டு வாங்க,' என்று குழந்தையைச் சமாதானப் படுத்துவது போல ஆறுதல் கூறியவுடன், அவர் தெளிவாகி, விடிவதற்கு முன்பே கிளம்பி விட்டார்.
அசைவற்றுக் கிடக்கும் அவளின் அப்பா... தினமும் இருமுறை குளிக்கும் அவளின் அப்பா.. வயதுக்கு வந்த பின்னும் கூட 'லீலாக்குட்டி' என்று ஓடி வந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, 'நீ என் அம்மாடா' என்று கொஞ்சும் அப்பா…. மேலும் அங்கே இருந்தால் கதறிவிடுவோம் என்று கனத்த மனதுடன் வெளியேறினாள் லீலாவதி.
அன்பைத் தவிர ஒன்றும் அறியாத அப்பாவுக்கு ஏன் இந்த தண்டனை? குழம்பினாள் லீலாவதி.
வெங்கான் என்ற வெங்கடாசலத்தின் பார்வையில் ராமசாமி...
மூன்று தலைமுறையாக அந்த ஊரில் சவரத்தொழில் செய்து வருபவர்கள் வெங்கானும் அவன் முன்னோர்களும். வழி வழியாகக் கற்றுக்கொண்ட கை வைத்தியமும், நாடி பிடித்து ஆயுள் சொல்வதுவும் கூடுதல் வருவாய்க்கு என்று ஆக்கிக்கொண்டான் வெங்கான்.
நோய்வாய்ப் பட்டுக் கிடக்கும் வயதானவர்களுக்கு வெங்கான் நாடி பிடித்துக் குறிக்கும் நாள் தப்பவே தப்பாது. தப்பாமல் பார்த்துக் கொள்வான் என்பதுதான் உண்மை. இன்னும் சிலர் மறைமுகமாகக் கேட்பார்கள்,
' அடுத்த வாரம் நெல் அறுப்பு.. அது வரை பெரிசு தாங்குமா? நாடி பிடிச்சுப் பார்த்து சொல்லேன் ' .
அடுத்த நாள் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டுச் சொன்னான்,
' நாடி விழுந்துவிட்டது.... நாளைப் பொழுது தாண்டாது..' என்ற நற்செய்தியைக் கேட்டவுடன் அந்த வீட்டினரின் முகம், பெளர்ணமி வெளிச்சம் போல் போல் மின்னியது. கணிசமான தொகை கையில் கிடைத்தவுடன் அடுத்த நாள் காலையில் வருவதாகக் கூறிக் கிளம்பினான் வெங்கான். அவன் எந்த வீட்டிற்கு நாடி பிடிக்க வந்தாலும், அடுத்த ஓரிரு நாட்களில் அந்த வீட்டில் சாவுக்கொட்டின் சத்தம் கேட்கும் என்பது உறுதி.
ராமசாமியின் வீட்டிற்குள் நுழைந்தான் வெங்கான். அவரைப் படுக்க வைத்திருந்த அறைக்குள் சென்று கதவைச் சாத்தினான். அவன் நாடி பிடிக்கும்போது எப்போதும் கதவைச் சாத்திக்கொண்டே பார்ப்பது வழக்கம். டார்ச் வெளிச்சத்தை அவர் முகத்தில் அடித்து உறுமினான்,
' டேய் என்னைத் தெரியுதா?'
ராமசாமியின் கருவிழிகள் தாறுமாறாய் சுழன்றன. காலன் வெங்கான் ரூபத்தில் வந்து நிற்பதை உணர்ந்தார். வெங்கான் அவரின் காதுக்கருகில் குனிந்து வெறுப்புடன்,
' நீ பாவமே பண்ணாதவன்னு எல்லோரும் நம்பறாங்க. ஆனா நீ செய்த பாவம் எனக்கும், உனக்கும் தெரியும். 'தூ' நீயெல்லாம் ஒரு மனுசன்?' என்று அவர் முகத்தில் காரித் துப்பினான்.
ராமசாமிக்கு அவர் முதலும், கடைசியுமாகச் செய்த பாவச் செயல் திரைப்படம் போல் மீண்டும் கண் முன் ஓடியது.
மனைவி முதல் பிரசவத்திற்காக பிறந்த வீடு சென்றிருந்தாள். மூன்று மாதமாக வீட்டையும், காட்டையும் ஒரு மாதிரி நிர்வகித்து வந்துகொண்டிருந்தார் ராமசாமி. மிளகாய் பறித்து சந்தைக்குக் கொண்டு போக வேண்டும். இரண்டு பெண் கூலிகளை வரச்சொல்லி இருந்தார். ஆனால் வெங்கானின் மனைவி மல்லிகா மட்டுமே வந்தாள். சலவைத் தொழிலாளியின் மனைவி சுந்தரி வரவில்லை.
' நாளைக்கு கண்டிப்பா சந்தைக்கு மிளகாய் கொண்டு போகோணும், சரி.. இரு நானும் வருகிறேன். பொழுதுக்குள் ரெண்டு பேரும் பறித்து விடலாம்.' என்று தானும் களத்தில் இறங்கினார் ராமசாமி.
இருவரும் அடுத்தடுத்து நின்று, பழுத்த மிளகாயை ஒருகூடையிலும் , பச்சை மிளகாயை ஒரு கூடையிலும் பறித்துப் போட ஆரம்பித்தனர். சளசளவென்று பேசிக்கொண்டே இருந்தாள் மல்லிகா. நேரம் போகப் போக, பேச்சில் நெருக்கம் கூடி தன் இளவயதுக் காதலெல்லாம் பற்றி பேசியதுடன், அவரின் சிறுவயது பள்ளிக் காதலைப் பற்றியும் ராமசாமியைப் பேச வைத்துவிட்டாள். இளகிய தருணத்தில், மனைவி பூங்கோதையிடம் பகிராத காதல் ரகசியத்தைக் கூட மல்லிகாவிடம் பகிர்ந்துகொண்டார் ராமசாமி. மாலை நெருங்கி, வேலை முடியும் தருணத்தில் அவரின் உடலில் இச்சையைத் தூண்டும் பொருளாகிவிட்டாள் மல்லிகா. மனைவியைப் பிரிந்து மாதக் கணக்கில் தனித்திருந்த ராமசாமி காமனின் அஸ்திரத்தில் சிக்குண்டார். அடுத்தடுத்து நின்று வேலை செய்யும்போது அவர்களின் உரசிய கைகள் வழியாக உறவுக்கான அஸ்திவாரம் போடப்பட்டது. என்ன செய்வது? வெறும் சாப்பாடு மாத்திரம் போதவில்லையே இந்த பாழும் உடம்புக்கு.
சாலைக்குள்ளிருந்து ராமசாமியும், மல்லிகாவும் வெளியே வரும்போது வாசலில் வெங்கான் நின்றிருந்தான். தலையி லிருந்து கால் வழியாக மின்சாரம் பாய்ந்தது போல அசையாமல் நின்றிருந்தான். அடுத்து என்ன என்ற கேள்விக்குக் கூட அவன் மூளை பதில் சொல்ல முடியாமல் மரத்துக் கிடந்தது. தலை குனிந்தவாறு குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துப் பக்கம் சென்றார் ராமசாமி. இதழோரத்தில் இகழ்ச்சிப் புன்னகையுடன் வெங்கானைக் கடந்து சென்றாள் மல்லிகா. சுய உணர்வு வந்தவுடன், எப்போதும் இடுப்பில் இருக்கும் சவரக்கத்தியை நோக்கி அவன் கை சென்று பின் விலகியது. ஒரு நொடியில் இருவரையும் பிணமாக்கி விடலாம். அதற்குப் பின்? இரட்டைக் கொலைக்காக ஜெயிலுக்குப் போகவேண்டும். வயதான தாய் தெருவில் பிச்சை எடுக்க வேண்டிவரும். ஆறு வயதிலும், எட்டு வயதிலும் உள்ள அவனின் பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் அநாதைகளாய்த் தவிக்கும். தவறு செய்தவர்கள் அவர்கள். தண்டனை எதற்கு தனக்கும், தன் குடும்பத்திற்கும்? வெங்கானின் ஆறாவது அறிவு வேலை செய்தது. அமைதியாகத் திரும்பி நடந்தான்.
படுத்திருந்த ராமசாமியின் காதருகில் குனிந்து வெறுப்புடன் சொன்னான் வெங்கான்,
' எல்லோரும் நம்பிக்கிட்டிருக்காங்கள்ள.. உனக்கு வியாதி வந்திருச்சின்னு.. அது, தானா வருல...நாந்தான் வரவழைச்சேன். ஆறு மாசத்துக்கு முன்ன கேரளா போய், அங்க தத்தமங்கலத்தில இருக்கற என் பெரியப்பா பையனப் பார்த்தேன். அங்கே அவன் பிரசித்தி பெற்ற நாட்டு வைத்தியன். அவன்கிட்ட, ஒருத்தன துடிச்சு சாகறமாதிரி கொல்லனும். ஆனா சாவு இயற்கையா இருக்கனும். நான் காரணம்னு வெளிய தெரியக் கூடாது, அப்படின்னேன். முதலில் தயங்கிய அவன், என் கதையைக் கேட்டதும் மனசு இரங்கி இரண்டு பொட்டலம் சூரணம் கொடுத்தான். ராமசாமி சாப்பிடும் பொருளில் ஏதாவது ஒன்றில் ஒன்றைக் கலந்து கொடுத்து விட்டு ஒரு பத்து நாள் கழித்து மற்றொன்றையும் அதே போல் கொடுக்கவேண்டும். உடனடியாக எந்த விளைவும் ஏற்படாது. ஆறு மாதம் கழித்து மருந்து தன் வேலையைக் காண்பிக்கும். எந்த டாக்டராலும் காரணத்தைக் கண்டு பிடிக்கவே முடியாது.
முதல் மருந்தை, ஒரு முறை உன் வீட்டிற்கு வந்த போது நீ குடிக்க வைத்து இருந்த காப்பியில் கலந்தேன். இரண்டாவதை நீ வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கருப்புசாமி நாடாரிடத்தில் குடிக்கும் கள்ளில் கலந்தேன்.
இரந்து குடிக்கும் சாதிதானே? இவன் என்ன பண்ணுவான்னுதானே இருந்தே? எப்படி பழி எடுத்தேன் பாத்தியா? நல்ல வேளை... அவ என்கிட்ட இருந்து தப்பிச்சு காய்ச்சல்ல போய் சேர்ந்திட்டா...'
திடீரென்று அவன் கண்களில் வெறி ஏறியது. அத்தனை காலம் அடங்கி இருந்த சைத்தான் உயிர் பெற்றது போல கட்டிலைச் சுற்றி சுற்றி வந்தான். அவரின் தொய்ந்து கிடந்த ஒரு கையை இழுத்துப் பிடித்து, குரல்வளையில் தன் கால் பாதத்தைக் கொடுத்து, நெட்டை எடுப்பதைப் போல் இழுத்தான். கழுத்தில் ' படக் ' என்ற சப்தம் கேட்டவுடன், ' போ ' என்று மீண்டும் காரித் துப்பி விட்டு கதவைத் திறந்தான்.
வெளியே நின்றிருந்தவர்களிடம்,
' நாடி அடங்கிக்கிட்டிருக்கு.. பாக்கறவங்க பாத்துக்குங்க... காத்தால நாடி அடங்கிடும். கூப்பிடுங்க வாரேன் '.
கிளம்பினான். இனி நாளைக்குத்தான் சாவு வீட்டில் அவனுக்கு வேலை.
அடுத்த நாள் காலை ராமசாமியின் வீட்டிற்கு முன்பு சாவுக் கொட்டு ஒலிக்கத் தொடங்கியது.