காலிங் பெல் அடித்தது. அதைக் கேட்ட வீட்டுக்காரர் வந்து கதவைத் திறக்கிறார்.
வாசலில் விஞ்ஞானி தலைமையிலான ஒரு தகர்க்கும் படை வந்து நின்று கொண்டிருக்கிறது.
அயர்ந்து போன வீட்டுக்காரர், “என்ன விஷயம்?” என்று கேட்கிறார்.
படை: நாங்கள் உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம். ஏதோ தப்பாய் இருக்கிறது.
வீட்டுக்காரர்: “இந்த வீட்டில் நான் பல வருடங்களாக வசித்து வருகிறேன். இது எனது சொந்த வீடு! இதில் எந்த விதத் தவறும் இல்லை. என்ன தப்பைக் கண்டீர்கள்?”
படை: எங்களுக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் வேலையை முடித்து விட்டால் என்ன என்று தெரிந்து விடும்.”
வீட்டுக்காரர்: வீட்டை இடித்த பிறகு ஒரு தவறும் இல்லை என்று கண்டுபிடித்து விட்டால் அதை மீண்டும் கட்டித் தருவீர்களா?”
படை: உண்மையாகச் சொல்லப் போனால் முடியாது. (ஒரு விஞ்ஞானி எப்போதுமே எளிமையாக, நேர்மையாகத் தான் பதில் சொல்வார்.) மீண்டும் எப்படிக் கட்டுவது என்பது எங்களுக்குத் தெரியாது.
வீட்டுக்காரர்: தப்பான ஒரு காரணத்திற்காக இப்படி இடித்து விட்டு, இடித்தது தப்பு என்று உணர்ந்து விட்டீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?
படை: எங்களது கண்டுபிடிப்பு தற்காலிகமான ஒன்று தான். அது மாறக்கூடியது! என்றாலும் கூட எங்களது அருமையான இடித்தல் வழியைப் பாருங்கள். அனுபவியுங்கள். ஒவ்வொரு செங்கல்லாக இதை இடிப்பதைப் பாருங்கள். எங்களது இடித்தல் உத்தியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். முடிவில் அல்ல.”
இது தான் விஞ்ஞான ஆய்வுகளின் தன்மை. ஆய்வுகளில் அன்றன்று தோன்றிய அல்லது கிடைத்த முடிவுகளை அறிவித்து விட வேண்டியது.
500 பேரிடம் கேள்வி கேட்டு அதற்குக் கிடைத்த பதிலை வைத்து, “மனித குலம் முழுவதற்குமான உண்மைகளை” பெரிதாகத் தம்பட்டம் அடித்துச் சொல்லி விட வேண்டியது.
இன்னொரு ஆய்வில் 1000 பேரிடம் அதே கேள்வியைக் கேட்டு இதற்கு நேர் எதிர்மாறான முடிவு கிடைத்தால், அதை இன்னும் பெரிதாகத் தம்பட்டம் போட்டுப் பெருமையாகக் கூற வேண்டியது.
எத்தனை ஆய்வுகள்! எத்தனை முடிவுகள்! தலை கிறுகிறுக்கிறது!!
நியூட்டன் புவி ஈர்ப்பு விசை பற்றி, “ஆப்பிளிலிருந்து கிரகங்கள் நட்சத்திரங்கள் வரை அனைத்துப் பொருள்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கிறது” என்று சொன்னார். ஆஹா! நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார் என்று புகழ்ந்து தள்ளினார்கள்.
ஆனால் புத கிரகம் பற்றிய விஷயத்தில் அவர் கூறியது தவறாக இருந்தது.
அதில் தவறைக் கண்ட ஐன்ஸ்டீன் தனது கொள்கையைச் சொன்ன போது, “ஆஹா! ஐன்ஸ்டீன் சரியாகச் சொல்லி விட்டார்” என்று புகழ்கிறார்கள். ஐன்ஸ்டீன் தத்துவத்தில் உள்ள தவறுகளைக் காண்பவர்கள் ப்ளாக் ஹோல் பற்றி ஆராயத் தொடங்கி இருக்கிறார்கள்.
இது தவிர, எந்த ஒரு நவீன கண்டுபிடிப்பிற்கும் அதன் விளைவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு போலீஸ் படை, அல்லது ஒரு தற்காப்புப் படை தேவையாக இருக்கிறது!
உதாரணங்கள்? ஏராளம்!
அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உலகமே நடுங்குகிறது. அடுத்தது விழுந்தால் என்ன செய்வது. கிறுக்கனான இன்னொரு ஹிட்லரோ அல்லது முஸோலினியோ அதைக் கையில் வைத்து எந்த நாட்டிலாவது போட்டால்...?
மொபைல் போன் வந்தாலும் வந்தது – சைபர் கிரைம் படைகள் ஆங்காங்கே முழு நேர வேலையில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
இண்டர்நெட் வந்தது – அது தீவிரவாதிகள் விரும்பி ஏற்கும் ரகசிய தகவல் பரிமாற்ற தளமாக உபயோகப்படுகிறது. இதைக் கண்காணிக்க இணையதள துப்பறியும் படை தயாராக இருக்கிறது!
மார்ஃபிங் வந்தது. குடும்பப் பெண்மணிகள் பயப்படுகிறார்கள். எங்கே தங்கள் தலையை நிர்வாண கவர்ச்சிப் பெண்ணின் உடம்பில் ஒட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவார்களோ என்று!
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. வந்து விட்டது.
ஆகப் பெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் சொன்னது போல மனித குல அழிவிற்கே வழி வகுக்கிறோமோ என்ற பயமும் வந்து விட்டது.
செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்கும் ரொபாட்டுகள் தங்களுக்குள் பேசிக் கொண்டு தங்கள் எஜமானர்களான மனிதர்களை ‘ஒரு வழி செய்து விட்டு’ ரோபாட் ராஜ்யத்தை அமைத்து விட்டால்....
இப்படி ஒரு எழுத்தாளர் அறிவியல் புனைகதை தானே எழுதி இருக்கிறார் என்று சமாதானப்படுத்த வேண்டாம்.
ஏனெனில் அப்படி ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்க்க மனிதர்கள் யாரும் இருக்கமாட்டோம்!
விஞ்ஞானத்தின் போக்கு இப்படி என்றால் மெய்ஞானத்தை எடுத்துக் கொள்வோம்.
அது கூறும் உண்மைகள் நித்தியமானவை, சத்தியமானவை. அவற்றை மேற்கொள்பவன் யாரையும் நிந்திக்கமாட்டான்; அழிக்க மாட்டான்.
மாறாக அன்பான உலகத்தை என்றும் இருக்கும் படி நிறுவி அன்பே தெய்வம் என்று தெய்வ மயமாக வழி கோலுவான்.
சரியாகத் தான் திருமூலர் சொன்னார்:
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது சொல்லுங்கள்!