Ambush 
கல்கி

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 1

வீரமணி.ஜி

ந்த அடர்ந்த காட்டுக்குள் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 37 புரட்சியாளர்கள் சுட்டுக் கொலை, 55 பேர் சரண், 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல், புரட்சிக் குழுவின் முகாம் தரைமட்டம், முக்கிய புரட்சிப்படை தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தடதடக்கின்றன.

மத்தியப் படைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மின்சாரம், தண்ணீர் எதுவுமில்லாத ஒரிசாவுக்கும் ஆந்திராவுக்கும் நடுவில் உள்ள இந்த பெரிதும் சிறிதுமாய் பரவிக்கிடக்கும் மலையடிவாரத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் புழு, பூச்சி, பாம்புகளுடன் கடந்த 2 வருடமாய் பாடாய்ப்பட்ட 77வது பட்டாலியனின் 120 பேர்கள் கொண்ட இந்தப் பிரிவிற்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இந்த வெற்றிக்கு 77வது படைப்பிரிவு நிறைய விலை கொடுத்திருக்கிறது. இந்த சண்டையோடு சேர்த்து இதுவரை 30  சிப்பாய்களின் உயிர் போயிருக்கிறது. கை, கால், செவித்திறன், கண் என தொலைத்தவர்கள் எண்ணிக்கை ஐம்பத்தைத் தாண்டும்.

மொத்த பட்டாலியனும் போய் 2 வருடமாகிறது. கடிதம் வருவதிலும் போவதிலும் ரொம்ப சிரமம். போன் இல்லை, குடும்பம் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். உணவு தயாரித்து சாப்பிடுவது முதல் காலைக்கடன் கழிப்பது வரை படும் வேதனைகள் எல்லாம் விளக்கிச் சொல்லவே முடியாத ஒன்று.

நகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த அந்தரான காட்டிலிருந்து இனி விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சிப்பாய் முதல் அதிகாரிகள் வரை மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்தப் போர்ப் படையில் வாழ்வோ, சாவோ அங்கு மது ஒன்றே தேவன். தலைமை அதிகாரி மது விருந்துக்கு உத்தரவிடுகிறார். ‘‘குடிக்காத பசங்க 4 பேர் இருப்பார்களே, அவங்க பேர் என்ன? டோப்பு மேஜர், இஸ்மாயில், சிவநேசன், கிஷன் சிங். அவங்களை பாதுகாப்புக்கு நிறுத்திடுங்க” மது விருந்தை ஆரம்பிக்கச் சொல்கிறார் அதிகாரி. எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

இந்த 4 பேரும் பட்டாலியனின் செல்லப் பிள்ளைகள். இவர்களுக்கு ‘தியாகி டீம்’  என்ற பட்ட பேர்.  மைனஸ் 15 டிகிரி குளிரில் கூட இவர்கள் குடிப்பதில்லை. டோப்பு ஹவில்தாருக்கு 55 வயதாகிறது. மெஸ் கமாண்டர் - அண்ணாபூரணி.

மற்ற மூவரும் சிப்பாய்கள். கிஷன் சிங் தண்ணி வண்டியின் ஹெல்ப்பர். பக்கத்து கிராமத்தில் போய் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இஸ்மாயிலும் சிவநேசனும் எல்லோருக்கும் டூட்டி போடுவது, லீவ் கணக்கு, சம்பளக் கணக்கு என அலுவலக வேலை.

இவர்கள் எப்போதாவது இதுபோன்ற தருணத்தில் பட்டாலியனை பார்த்துக்கொள்வார்கள். இவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் மொத்த பட்டாலியனும் தூங்குகிறது. நாலு பேரும் நாற்பது பேருக்கு சமம்.  ஈ, எறும்பு கூட உள்ளே நுழைய முடியாது.

நாலு பேரும் நல்ல நண்பர்கள். டோப்பு மேஜர் ராஞ்சியை சேர்ந்தவர். கிஷன் சிங் பாட்னா, இஸ்மாயிலும் சிவநேசனும் தமிழ்நாடு. நாலு பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இணைப்புப் பாலம் குடும்ப பாசம், அக்கறை. நாலு பேர் வீட்டிலும் நாலு விதமான பிரச்னைகள் இவர்களை தூங்க விடுவதில்லை.

இஸ்மாயிலுக்கு கல்யாணமாகி மனைவி உம்ராவும், ஒரு பெண் அப்ரின், ஒரு ஆண் மசூத் என இரண்டு பிள்ளைகளும் சொந்த ஊரான நாகூரில் இருக்கிறார்கள். முதலில் பிறந்த பெண் குழந்தை அப்ரினுக்கு மூளை வளர்ச்சியில்லை. 14 வயதில் மூன்று வயது குழந்தைக்கான அறிவே அவளுக்கு உள்ளது. வலது காலும் இடது கையும் சூம்பிப் போய் பலமற்று வீழ்ந்து கிடக்கிறது. வாயிலிருந்து அவளையறியாமல் உமிழ் நீர் ஒழுகிக்கொண்டே இருக்கும். பெரிய நைட்டி ஒன்றை மாட்டிக்கொண்டு அங்குமிங்குமாக வலம் வருவாள். எத்தி தத்தி  நடைபோட்டு பாத்ரூம் வரை ஒருவர் துணையோடுதான் அவளால் வர முடிகிறது.

Ambush

உம்ராதான் அப்ரினை கவனித்துக்கொள்கிறாள். ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு நொடி கூட உம்ரா சுணங்கியது, தயங்கியது இல்லை. ‘சொந்த தாய்மாமன் இஸ்மாயிலை  திருமணம் செய்து கொண்டதால்தான் குழந்தை இப்படிப் பிறந்துவிட்டது’ என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

‘அப்ரின்’ என்றால் ஆசீர்வாதம் என்று பொருள். அப்ரினை நமக்குக் கொடுத்து அல்லா நம்மை ஆசிர்வதித்து இருப்பதாக இஸ்மாயிலும் உம்ராவும் நம்புகிறார்கள். வார்த்தைகளற்ற நீண்ட ஒரு அகோர ஒலிதான் அப்ரினின் பேச்சு. வலி, பசி, கோபம்,  சிரிப்பு, அழுகை எதுவாயிருந்தாலும் அவள் வெளிப்படுத்துவது அந்த ஒற்றை சப்தம் மட்டும்தான். ஆனால், இஸ்மாயிலை மட்டும் ‘வாழ்ப்பா, வாழ்ப்பா’ என்று வாப்பாவை  கொஞ்சம் குளறியபடி அழைப்பது எல்லோருக்கும் பெரும் ஆச்சர்யம். இஸ்மாயிலை  பார்த்தாலோ, அவன் குரல் கேட்டாலோ அப்ரினுக்கு ஒரே உற்சாகம். ‘வாழ்ப்பா… வாழ்ப்பா…’ என வாயில் எச்சில் ஒழுக நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே இருப்பாள். அதுதான் இஸ்மாயிலின் உயிர் நாடி.

ஆனால், அந்த உயிர் நாடிக்கு எந்நேரமும் உயிர் போகலாம் என்ற நிலை. இதயத்திற்குப் போகும் இரத்தத்தின் அளவு மிகக் குறைவாக உள்ளது. குழந்தை வளர வளர அது குறைந்துகொண்டே போகிறது. ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும். அதுவும் ரிஸ்க்தான், உடல் தாங்காது.

இஸ்மாயில் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் விசாரித்து வைத்துள்ளான். 15 லட்சம் செலவு ஆகும். உம்ராவின் நகைகள் இருக்கிறது, பி.எப். கடன், நண்பர்கள் உதவி என்று பணம் ரெடி பண்ணிவிடலாம். ஒரு மாதம் சென்னையில் தங்கி அப்ரினுக்கு இந்த ஆபரேஷனை செய்ய வேண்டும். ஒரு மாதம் விடுப்பு வேண்டும்.

உம்ராவுக்கு நாகூரில் தனது வீடு இருக்கும் தெருவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இஸ்மாயில்தான் உலகம். அல்லாவும் - இஸ்மாயிலும் அவளுக்கு சமம். இஸ்மாயில் சொல்வதே குர்-ஆன்.

அவளுடைய ஒரே ஆசை, வேண்டுதல் எல்லாம், எப்போது வேண்டுமானாலும் உயிர் போய்விடும் இந்த பட்டாளத்து  வேலையிலிருந்து இஸ்மாயிலை உயிருடன் திருப்பி எடுத்து, நாகூர் தர்கா தெருவில் ஒரு பேன்சி ஸ்டோர் வைத்து முதலாளி ஆக்க வேண்டும் என்பதுதான்.

இந்த உலகத்தில் எங்கு சண்டை நடந்தாலும் இவளுக்கு இஸ்மாயில் பற்றிய பயம். எங்காவது துப்பாக்கி சண்டை என டிவியில் பார்த்தாலோ, பேப்பரில் படித்தாலோ உம்ராவுக்கு படபடவென்று வந்து கட்டிலில் சாய்ந்து விடுவாள். இஸ்மாயிலிடமிருந்து  போன் வந்தால்தான் ஆச்சு.

இஸ்மாயில் பட்டாளத்திற்கு போய் 15 வருடம் ஆகிவிட்டது. எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார்கள், உம்ராவின் பயம் மட்டும் போகவில்லை. இஸ்மாயிலுக்கு உம்ராவும் ஒரு குழந்தைதான். ‘இன்னும் 5 வருடம் பொறுத்துக்கொள். நான் விருப்ப ஓய்வில் வந்து விடுகிறேன். அதன் பின் நம் மரணம் வரை நமக்குப் பிரிவில்லை’ என உம்ராவுக்கு வாக்குக் கொடுத்து சமாதானம் செய்து வைத்து  இருக்கிறான்.

‘இதோ இந்த சண்டை முடிந்துவிட்டது. கொஞ்ச நாள் அமைதி கிட்டும். பட்டாலியன் இங்கிருந்து நகரத்தை நோக்கிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அங்கே போய் விடுப்பு எடுத்துக்கொண்டு அப்ரின் ஆபரேஷனை நல்லபடியாக முடிக்க வேண்டும்’ இஸ்மாயில் தனக்குத்தானே பேசிக்கொண்டு துப்பாக்கியில் லேசாக தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.

சிவநேசனின் கதை வேறு. திருமணமாகி 10 வருடம் ஆகிவிட்டது. சிவநேசனின் சொந்த ஊர் திருச்சி துவாக்குடி. மனைவி கீர்த்தி எம்.எஸ்சி., கணிதம் படித்தவள். மகாபுத்திசாலி. கீர்த்திக்கு தெரியாத உலக விஷயமே இல்லை. இருந்தாலும் குறைவாகப் படித்த தம்மை திருமணம் செய்து கொண்டு கிராமத்து வீட்டில் மாடு கன்றுகள் பராமரித்து சாதாரண பெண்மணியாக வாழ்வது அவனுக்கு பெரிய ஆச்சர்யம்.

‘மாதாமாதம் சீட்டு கட்டு, சீட்டு கட்டிய பணத்தை எடுத்து நகை வாங்கு, நகையை அடகு வைத்து ஒன்றுக்கு இரண்டாய் இடம் வாங்கு, ஒரு இடத்தை விற்று  இன்னொரு இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விடு, நிரந்தர வருமானம் வரும். முதலீடும் பல மடங்கு பெருகும்’ இப்படி நிதி ஆலோசனை சொல்வதாகட்டும், இரண்டு நாளாய் வயிறு வலிக்கிறது என்று சொன்னால், ‘சிக்கன் மட்டன் சாப்பிடுவதை உடனே நிறுத்து. தொப்புளில், உள்ளங்கை, உள்ளங்காலில் நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு படு’ என வைத்தியம் சொல்வதாகட்டும் கீர்த்திதான் சிவாவின் குரு. சொந்த விஷயம் மட்டுமல்ல, வேலை இடத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கும் மிக எளிதாக தீர்வு சொல்லுவாள்.

Ambush

‘ஒரு அதிகாரி நான் என்ன செய்தாலும் குறை சொல்கிறான். எப்போதும் என் மீது கோபப்படுகிறான். என்ன செய்வது கீர்த்தி?’ என்று கேட்பான். ‘நீ அவனைப் பாராட்டிக்கொண்டே இரு. அவன் உடையை, அவன் நடையை, அவன் செயலை அது பாராட்டும்படி இல்லை என்றாலும் ‘அருமை சார்’ என்று சொல்லிப்பார்’ என்பாள். அது சக்சஸ் ஆகிவிடும்.

சிவநேசனுக்குக் கிடைத்த பொக்கிஷம் கீர்த்தி. எல்லாம் இருந்தும் இவர்களுக்கு தீராத குறை ஒன்று இருக்கிறது. அது குழந்தையின்மை. கடந்த 10 வருடமாக பார்க்காத வைத்தியம் இல்லை, போகாத கோயில்கள் இல்லை. எந்தக் குறையும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இதுவரை குழந்தை பாக்கியம் கைகூடவில்லை. கீர்த்தி நம்பிக்கையோடு இருக்கிறாள். சிவாவிற்குதான் கேட்பவர்களுக்கும் வீட்டுக்கும் பதில் சொல்லி மாளவில்லை.

கீர்த்திக்கு 35 வயதாகி விட்டது. தெளிவாகப் பேசுகிறாள். ‘‘கல்யாணமான ஒரு வருடம்தான் உன்னோடு காதலோடு கலந்தேன். அதன் பின் ஒவ்வொரு முறையும் பயமும்  பதற்றமும்தான். இந்த முறையாவது ஏதாவது நல்லது நடக்குமா என்ற  எதிர்பார்ப்புதான். ஒரே ரண வேதனை. அதை விட நான் சந்திக்கும் அவமானங்கள், ஏச்சு பேச்சுகள் தாங்கமுடியவில்லை. ‘கறக்காத மாட்டுக்கு  பருத்தி கொட்டை எதுக்கு’ என சாடை பேசும் உன் அக்கா, ரகசியமாக உனக்கு வேறு பெண் தேடும் உன் அம்மா, ஊரில் உள்ள சில ஆண்களின் பார்வைகள் என எல்லா வன்மத்தையும் நான் தாங்கிக் கொள்கிறேன்.

ஐ.வி.எப். போன்ற செயற்கை கருத்தரிப்பில் எனக்கு இஷ்டமில்லை. எந்த பிள்ளையையும் தத்து எடுக்கவும் மாட்டேன். எனக்கு எந்த உறவுமில்லை, நண்பர்களுமில்லை. நீதான் என் உலகம். உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னை விட நீ நல்லவன். அதிகம் படித்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், துரோகம் செய்யத் தயங்க மாட்டார்கள். நீ என்னையே ரதியென்று கிடக்கிறாய்.

எல்லோரும் எப்படிப் பிள்ளை பெற்றுக் கொள்கிறார்களோ, அதுபோல் இயற்கையாய் நானும் பிள்ளை பெற வேண்டும். இது நடக்கும். ஏதோ கடவுள் நம்மை சோதிக்கிறார். ஆனால், சீக்கிரமே நல்லது நடக்கும் என என் உள்மனசு சொல்கிறது. பிள்ளைக்கு பெயர் கூட யோசித்து வைத்துள்ளேன். அது ஆணாய்  இருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும் ஒரே பெயர்தான் ‘சிவ கீர்த்தி.’

இந்த முறை நீ விடுப்பில் வரும்போது உன் இஷ்டம்தான். உன்னை எதுவும் சொல்ல மாட்டேன். டாக்டர்  சொல்வதுபோல் நானும் உன்னைப்போல் ரொம்ப கூலாக இருக்கப்போகிறேன். வா, சீக்கிரம் வா…”  கீர்த்தி பேச பேச சிவநேசன் அந்தரத்தில் மிதப்பான்.

கேம்பில் மது விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. ஒரே சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஹவில்தார் வினய் யாதவ் ஜட்டியுடன் உட்கார்ந்து இருந்தான். கேம்பில் எப்போதும் அவன் ஜட்டியுடன் அலைவதால் அவனை எல்லோரும் ‘ஜட்டி யாதவ் என்றே அழைப்பார்கள்.

வினய் யாதவ் ஏழு அடி உயர மாமிச மலை. அவன் உடலில் துப்பாக்கி குண்டு கூட பாயாது. புரட்சி குழுவிற்கு சிம்ம சொப்பனம். உளவு தகவல் சேகரிப்பது, அதன்படி தாக்குதல் திட்டம் போடுவது என அவன்தான் 77வது பட்டாலியனின் பலம். வினய் யாதவால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. அவன் மூலம்தான் புரட்சிப் படையின் முகாம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கிராமத்து ஆட்களைக் கொண்டு வந்து கண்மூடித்தனமாகத் தாக்குவது, காட்டில் விறகு பொறுக்க வரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது என பட்டாலியனின் பலவீனமும் அவன்தான்.

மணிவர்மனை சத்தம் போட்டு கூப்பிட்டுக் கொண்டிருந்தான் வினய் யாதவ். மணிவர்மன் என்பவன் இப்போதுதான் பயிற்சி முடித்து வேலைக்கு சேர்ந்திருந்தான். எல்லோருக்கும் ஜூனியர். பாஸ்கெட் பால் பிளேயர். விளையாட்டுப்  போட்டிகள் எதுவும் இல்லாதபோது பட்டாலியனில் வந்து நார்மல்  டூட்டி பார்க்க வேண்டும்.

புதிதாய் வந்த மணிவர்மனுக்கு தீவிரவாதிகளிடம் கூட பயமில்லை, வினய் யாதவை  பார்த்தாலே பயம் வந்து விடுகிறது. ‘இப்போது எதுக்கு நம்மை கூப்பிடுகிறார்களோ’ என்ற பயத்தில் நடுங்கிக்கொண்டே எதிரே போய் நின்றான்.

ஒயர்லெஸ் தகவல் ஆட்கள் கொடுத்த ஒரு செய்தி கவரை கொடுத்து, அதை அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னார்கள். வினய் யாதவ் குடி போதையில் மணிவர்மனை முதுகில் ஒரு தட்டு தட்டினான். அது மணிக்கு யாரோ இரும்புத் தடி கொண்டு தாக்குவது போல் இருந்தது.

கவரை கொண்டுபோய் அதிகாரியிடம் கொடுத்தான். அவர் அதை  அவசரம் அவசரமாகப் பிரித்துப் படித்தார். உடனே தலையில் கையை வைத்துக் கொண்டு மேஜையில் கவிழ்ந்து கொண்டார். மணிவர்மனுக்கு அது ஏதோ ஒரு கேட்ட செய்தி என்று மட்டும் புரிந்தது.

அப்படி என்ன தகவல்தான் இருந்தது அந்த கடித செய்தியில்? நாளை பார்ப்போம்...

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT