நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள அந்தக் கடை வாசலில் ஏகப்பட்ட கூட்டம்! எப்பொழுதுமே காணப்படும் கூட்டம், பண்டிகை காலம் நெருங்குவதால் மேலும் அலை மோதிற்று! உயரத்தில் அமைந்துள்ள அந்தக் கடையின் முக்கிய வாசலுக்கு இரு புறமும் உள்ள படிக்கட்டுகள், பெரியவர்களுடனும், குழந்தை வைத்திருப்பவர்களுடனும் நிறைந்திருக்க, புதிதாக வருபவர்கள், கீழே நின்றபடியே, தியேட்டர்களில் நுழைந்தவுடன் மேலுள்ள சீட்களை நோட்டம் விடுவது போல, உட்காரக் காலியிடம் தேடி மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தினர்!
உள்ளேயும் மக்கள் வெள்ளமாகப் புகுந்திருக்க, அடிக்கடி திறந்து மூடும் கதவுகள் வழியே ஏசியின் குளிர்ந்த காற்று சாலைகளுக்கும் விசிட் அடிக்க, அதனை எதிர் பார்த்து சிலர் அமர்ந்திருந்தனர்!
அந்த வயதான தம்பதியினர் ஆட்டோவிலிருந்து இறங்கி வர, அவர் படிக்கட்டில் இடம் தேடினார். இரண்டாம் படியிலிருந்து ஒருவர் பைகளுடன், வெளியே வந்த மனைவியை மகிழ்வுடன் பார்த்தபடி அவசரமாக இறங்க, அந்த இடத்தை நோக்கி அவர் முன்னேறினார்!
“சீக்கிரம் போங்க! அங்கேயே உட்கார்ந்திருங்க! நான் எவ்வளவு விரைவா முடியுமோ அவ்வளவு விரைவா போய்ட்டு வந்திடறேன்!” என்று கூறியபடியே அந்தம்மா தன் கைப்பையுடன் உள்ளே செல்ல எத்தணித்தார்.
‘ம்! நீயாவது சீக்கிரமா வருவதாவது? எனக்கு ஒக்கார எடம் கெடைச்சிட்டுன்னு வேற தெரிஞ்சிக்கிட்ட! பொயிட்டு மெது வா! நானும் கொஞ்சம் ஒக்காந்து ஆசுவாசப் படுத்திக்கிறேன்!’ என்ற எண்ணியவாறு, ”ஒண்ணும் அவசரம் இல்ல மாலு! நாம பிளான் பண்ணியபடி எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு வந்திடு! நான் அங்கே ஒக்காந்திருக்கறேன்” என்று மனைவியிடம் கூறி விட்டு, அவர் அவசரமாகப் படியேறினார்.
அரை மணி நேரம், அங்குள்ளவர்களை வேடிக்கை பார்த்தபடி ஓட்டி விட்டார்! அப்புறமாய்த்தான் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றி, சில நிமிடங்களிலேயே எமர்ஜென்சி நிலைக்குக் கொண்டு சென்றது. இடத்தை விட்டு எழுந்து போய் விட்டால், மீண்டும் கிடைக்காதே என்ற பயம் வேறு. சிலருக்குப் பயம் வந்தால் சிறுநீர் வருமென்று கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் கேசோ ரிவர்ஸ்! அந்தச் சமயத்தில்தான் அவர் வயதையொத்த ஒருவர், மனைவியை உள்ளே அனுப்பி விட்டு இடம் தேட, இவரோ கைகளைக் காட்டி அவரைக் கூப்பிட்டார்! அவரும் சந்தோஷமாகப் படியேறி வந்து இவரை அணுகினார்!
“சார் வாங்க! இப்பிடி ஒக்காருங்க! நான் கொஞ்சம் உள்ளே உள்ள ரெஸ்ட் ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடறேன்!”
“அதுக்கென்ன சார்! தாராளமா போய் வாங்க! இந்தப் பையை வெச்சி உங்க இடத்தைத் தக்க வெச்சுக்கிடறேன்!” என்று கூறியபடி, கையில் பிடித்திருந்த கட்டைப் பையை, எழுந்து கொண்ட அவர் இடத்தில் வைத்தார்!
சில நிமிடங்களுக்குப் பிறகு ரிலாக்ஸ்டாகத் திரும்பிய அவர், புதிய நண்பரின் அருகில் வந்து அமர்ந்தார்!
“வாங்க சார்! ரொம்ப நேரமா ஒக்காந்திருந்தீங்களோ!” என்று பேச்சை ஆரம்பிக்க, ‘ஓகோ! இவர் கொஞ்சம் அதிகம் பேசுபவராக இருப்பார் போலும்!’ என்று எண்ணியபடியே, ”இல்ல சார்! அரை மணி நேரந்தான் இருக்கும் வந்து!” என்றவரை இடைமறித்தவர்,”அப்ப நாம இங்க ரொம்ப நேரம் இருக்கப் போறோம்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, லேசாகத் தூற்றல் விழ ஆரம்பிக்க, படிகளில் அமர்ந்திருந்தவர்கள் பரபரப்புடன் எழுந்து வேறு இடம் தேட ஆரம்பித்தார்கள்!
பையிலிருந்து சற்றே பெரிய குடையை எடுத்து விரித்தவர், ”இப்படி கொஞ்சம் நகர்ந்து உட்காருங்க! நனையாதீங்க!” என்று கூறிக் கொண்டே, ”ஓ! நான் யாருன்னே சொல்லலே இல்ல! என் பெயர் ராமன்! எங்க நகர் சங்கத் தலைவர் நாந்தான்! இங்க கூட நாம ஒரு சங்கம் ஆரம்பிச்சிடலாம்! அதாவது மனைவி, மக்களை ட்ரஸ் செலக்ட் செய்ய உள்ளே அனுப்பி விட்டு, நம்ம மாதிரி காத்திருப்போருக்கான சங்கம், அதாங்க காத்திருப்போர் சங்கம்னு ஒண்ணு ஆரம்பிச்சிடலாம்!”
“என்னது? காத்திருப்போர் சங்கமா?”
“என்ன சார் ஆச்சரியமா கேக்கறீங்க! மணிக் கணக்கில வெயில்லயும், மழையிலயும் நாம காத்துதானே கிடக்கிறோம்! எனவேதான் நமக்கொரு சங்கம்! காத்துக் கிடப்போர் சங்கம்! ஆரம்பிச்சிட்டோம்னா, அப்புறம் கொள்கை, சட்ட திட்டமெல்லாம் வகுத்திடலாம்! இப்பவே பாருங்க! மழை தூறினா நமக்குப் பாதுகாப்பு இல்ல. எனவே சங்கத்தின் மூலம் ஒரு கோரிக்கை வைக்கலாம்! படியில் அமர்ந்திருப்போருக்கும் கூரை வேண்டுமென்பதை நம் முதல் கோரிக்கையாக வைக்கலாம்! என்ன சொல்றீங்க!” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவர் மனைவி திரும்பி விட, ”அதோ என் மனைவி வந்துட்டாங்க! நாம இன்னொரு நாளைக்கு மீட் பண்ணுவோம்!” என்று கூறித் தப்பித்து வந்தாலும், ’மனைவி இவ்வளவு சீக்கிரம் எப்படி வந்தார்கள் வெளியே!' என்ற வியப்புடனே அவரை நெருங்க, ”நானும் ஒரு மணி நேரமாத் தேடியும் எனக்கு எதுவும் பிடிக்கலீங்க! நாம வேற ஒரு கடைக்குப் போய்ப் பார்க்கலாம்னு வந்துட்டேன்! அந்த ஆட்டோவைக் கூப்பிடுங்க! நாம அங்க போயிப் பார்ப்போம்!” என்றாள் அவள்!
‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்று நொந்தபடியே மேலே அவர் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்! அந்த சங்கத் தலைவர் தனது குடைக்குள் வேறு ஒருவரைச் சேர்த்துக் கொண்டிருந்தார்!