Kaliman Pillaiyar 
கல்கி

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

கல்கி டெஸ்க்

"நாளைக்குப் பிள்ளையார் சதுர்த்தி! களிமண் பிள்ளையாருக்கு இன்னும் கொஞ்ச காலமாவது டிமாண்ட் இருக்குமான்னு தெரியலை. கலர் கலரா பூசி விதவிதமாக பிள்ளையாரைச் செய்து விற்கிறாங்க. மூஞ்சூரு தான் பிள்ளையாருக்கு வாகனம்னு நெனச்சுக்கிட்டிருந்தா… இப்ப என்னென்னவோ வாகனத்தில பிள்ளையாரை உக்கார வைக்கிறாங்க. ஆனா, இன்னும் சில பேரு களிமண் பிள்ளையாரு வேணும்னு நெனச்சு மார்க்கெட் கூடுற இடத்திற்குத் தேடி வாராங்க. முன்னெல்லாம் குளத்தங்கரையல போய் விடிய விடிய மண் வெட்டி பக்குவமான களிமண்ணைத் தோண்டி எடுத்து விடியலில  மாட்டு வண்டில ஏத்திக்கிட்டு பக்கத்து டவுனுக்கு கொண்டு போவோம்...." தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார். 

தாத்தா  பிள்ளையார் செய்யக் களிமண்ணைக் குளத்திலிருந்து சேகரித்து பக்கத்து வீட்டில மாட்டு வண்டியக் கெஞ்சிக் கதறி வாங்கி வீடு கொண்டு வந்து சேர்த்திருந்தார். 

"நானு, உங்க பாட்டி; அப்புறம் உங்க அப்பா. பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல என்னோட வருவான். இப்ப பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உங்கப்பன் கொத்தனார் வேலைக்குப் போன பிறகு இப்பல்லாம் வர்றதில்லை. கூப்பிட்டாலும் வரமாட்டான். வா, நாம ரெண்டு பேரும் இன்னைக்குப் போயிட்டு வருவோம். இன்னைக்கு நல்லா வியாபாரமாவும். நீ காச மட்டும் வாங்கிப் போடு. இந்த மணியை எடுத்து பிள்ளையார் அச்சுல கண் வைத்துக் கொடுக்கணும். களிமண்ணை எடுத்து அச்சுல அடிச்சு சரியா பிள்ளையாரைச் செய்யற வேலையை நான் பார்த்துக்கறேன் வர்றியா சூசை…." தாத்தா மரிய சூசையைக் கேட்டார்.

“தாத்தா இந்த மாசம் காப்பரிச்சை வருது தாத்தா. லீவுல படிக்கணும். அப்ப தான் பத்தாவது பரிட்சையில நல்ல மார்க்கு வாங்க முடியும். நான் வரலை” 

“சூசை… அப்படில்லாம் சொல்லக்கூடாது இன்னைக்கு ஒரு பொழுது தான கூப்புடறேன். அப்பத்தாவுக்கு கண் ஆபரேசனுக்கு டவுனுக்குக் கூட்டிட்டுப் போகணும். ஆபரேசன் ஓசில செய்யறதாச் சொல்லியிருக்காங்க. கையில் நூறு, இருநூறு இருந்தா தெம்பா இருக்கும். உனக்கும் கைச்செலவுக்கு காசு தாரேன். பிடிச்சத வாங்கி சாப்புட்டுக்கோ. கூட்டாளிக கூட சினிமாவுக்குப் போ.”  தாத்தா கெஞ்சினார்.

கடைசியில் இந்த டீல் பிடித்திருந்தது.  

டவுனு பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஒரு டாட்டா ஏசைப் பிடிச்சுட்டு வந்தார். மாட்டு வண்டியெல்லாம் டவுனுக்குள்ள போயி மார்க்கெட்டில் இறக்கி விட முடியாது. டாட்டா ஏஸ் வண்டிக்காரர் கொறைஞ்சது ஆயிரத்து ஐநூறு வேணும்னு சொல்லிட்டாரு. அவரையும் தயநாத்து பண்ணி ஆயிரத்து இருநூறுக்கு ஒத்துக்க வச்சிட்டாரு.  தாத்தாவுக்கு மலைப்பா வந்துருச்சு. 200 பிள்யைாராவது செஞ்சு வித்தா தான் வண்டிக்குப் போக கொஞ்சம் கையில் காசு தேறும். ஒரு நாலஞ்சு மாசத்துக்கு கொஞ்சம் கவலையில்லாம, மகன் கைய எதிர்பார்க்காம தெகிரியமா இருக்கலாம். அதுவும் காலைல 6 மணியில இருந்து 12 மணி வரைக்கும் தான் வியாபாரம் ஜோரா இருக்கும். அதுக்குப் பின்னால யாராவது ஒண்ணு ரெண்டு பேரு தான் வருவாங்க. களிமண்ணும் பக்குவம் கெட்டுப்போகும். விரசா செய்யணும். மனசுக்குள்ளயே கூட்டிக் கழிச்சக் கணக்குப் பார்த்தாரு தாத்தா. சரி ஒரு மனசா புறப்படுவோம் என்று புறப்பட்டாச்சு. 

டவுனுல வழக்கமான போடுற மார்க்கெட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. கருக்கல்ல பொறப்பட்டு வந்ததால போலீசு தொந்தரவு இல்லை. பூக்கடைக்கார அக்கா தான் கொஞ்சம் கோவிச்சுக்கிச்சு. இப்படிப் போட்டா நான் என்ன வியாபாரத்தைப் பண்றது. கொஞ்சம் ஓரமாப் போடுங்க. சிடுசிடுன்னு வார்த்தைய விட்டது. தாத்தா, வண்டி டரைவரு, கணேசு மூணு பேரும் சேர்ந்து களிமண்ணை இறக்கி வைச்சாச்சு. 

இன்னொரு பக்கம் டீக்கடைக்காரர் வேற. ”ஐயா. கடையை மறைக்காமப் போடுங்க. எங்க வியாபாரத்தையும் பார்க்கணும்ல” என்றார். பூக்டைக்கார அக்காவையும் டீக்கடைக்கார அண்ணனையும் பகைச்சுக்காம பொத்தாம் பொதுவா, ஓரஞ்சாரமா உக்காந்தாச்சு. 

முதல் வியாபாரம் வந்தாச்சு. 

"ஐயா, பிள்ளையாரு எவ்வளவு?"  

மூணு அச்சையும் காண்பிச்சு ரகம் வாரியா விலை சொன்னாரு தாத்தா. "என்ன இது களிமண் பிள்ளையாருக்கு இவ்வளவு கிராக்கியா இருக்கு.  நானும் அடுத்த வருசத்தில இருந்து கலர் பிள்யைாருக்கு மாறிடலாம்னு இருக்கேன். எங்க அம்மா தான் இன்னும் களிமண் பிள்ளையாரு தான் வேணும்னு அடம் பிடிக்கிறாங்க. சரி… சரி… உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம். ஒரு எழுபது ரூபான்னு போட்டுக்குங்க" என்று பேரம் பேசினார். 

தாத்தாவும் முதல் போனியை விட வேணாம்னு, ”ஐயா, களிமண்ணுக்கா விலை சொல்றேன். வண்டி வாடகை, இரண்டாளு கூலி, வயித்துப் பிழப்புக்குத் தானே கேட்கறேன்” என்று பேசியவாறே களிமண்ணை அச்சில் அடித்து பிள்ளையாரை வார்க்கத் தொடங்கினார். 

"சூசை… பாத்துக் காச வாங்கிப்போடு" என்று கூறினார். சூசை, பவள மணி எடுத்துக் கண் வைத்துக் கொடுத்தான். கோல்டு கலர் ஜிகினாவை எடுத்து கிரீடத்திற்கு பதவிசாகத் தடவினான். எடுத்தவுடன் முதல் போனியா வந்தவரு ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.

சில்லரை இல்லையே என்று தலையைச் சொரிய.. வந்தவர், "நான் வேணும்னா மற்ற பூசை சாமான்லாம் வாங்கிட்டு வந்து தர்ரேனே" என்றார்.

'இருங்கண்ணே நான் சில்லரை மாத்திட்டு வர்றேன்'னு சொல்லி டீக்கடைக்காரரிடம் கொஞ்சம் நைசாப் பேசி சில்லரை வாங்கி வந்தாச்சு.

பத்து மணிக்குள் நல்ல வியாபாரம்.  நூறு, நூற்றைம்பது பிள்ளையாரு செஞ்சு வித்தாச்சு. தாத்தாவும் என்னிக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு ரொம்ப வெரசா வேலை பார்த்தாரு. இடையில ஒரு வாய் டீத்தண்ணி குடிக்கத் தான் நேரம் கிடைச்சது. 

பதினோரு மணிக்கு களிமண் இன்னும் ஒரு இருபது பிள்ளையாரு செய்யற அளவிற்கு மிச்சமிருந்தது. கால் மணி நேரத்துக்கு ஒருத்தரா வந்துக்கிட்டு இருந்தாங்க. 

பக்கத்தில ஒரு பந்தல்ல பெரிய பிள்ளையாரை வச்சு பூஜைலாம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. பெரிய ஸ்பீக்கருல 'ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்' என்று சத்தமா பாட்டுப் பாடுச்சு. பந்தல்ல கலர் கலரா கொடிலாம் கட்டிருந்துச்சு!  அப்போனு பக்கத்தில ஒரு பள்ளி வாசல்ல தொழுகை வேளையில ஓதுறது சத்தமா வந்துச்சு.

பிள்ளையார் பந்தல் ல இருந்து "ஏன்டா… ஒரு நாளும் கிழமையும் எங்க சாமியக்கும்பிட விட மாட்டீங்களா?" அப்படின்னு ஒரு குரல் வந்துச்சு. "பள்ளி வாசல்ல இருந்து இது நாங்க வழக்கமா போடற தொழுகை தான…நாங்க உங்கள பாட்டுப் போட வேண்டாம்னு சொன்னமா?" அப்படினு பதில் வந்துச்சு. போலீசு வந்து ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணுனாங்க…. எங்கிருந்தோ ஒரு கல் மசூதியை நோக்கியும், அந்தப் பக்கத்தில இருந்து ஒரு கல் பிள்ளையாரை நோக்கியும் பறந்துச்சு..

பொறவு… பயங்கர அமளி துமளி…. மார்க்கெட்டே கலகலத்துப் போச்சு. அப்படிப்பறந்த கல்லுல ஒண்ணு தாத்தா நெத்தியப் பதம் பாத்துருச்சு…. கையில இருந்த காசெல்லாம் ஒரு மஞ்சப்பையில போட்டுட்டு தாத்தாவின் நெத்தியில வழிஞ்ச இரத்தத்தைப் பார்த்து அழுதுட்டான். பக்கத்தில நின்ன போலீசுக்காரரும் பயந்து போயி ஒரு ஆட்டோவைப் பிடிச்சு தாத்தாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச்சொன்னரு. இரத்தம் நிக்கவேயில்லை. கவர்மண்ட் ஆஸ்பத்திரி பக்கத்தில இருக்கப்போயி அங்கே கொண்டு போயி அந்த ஆட்டோ காரரு இறக்கி விட்டாரு.  தாத்தாவுக்கு இரத்தம் ரொம்பப் போயிருச்சாம். சாப்பிடாம இருந்ததுல மயங்கிப் போயிருந்தாரு. டாக்டரு ரொம்ப நல்லவரு. எப்படியோ இரத்தம் கிடைச்சு ஏத்திட்டாரு. 

தாத்தா கண் விழிச்சுப் பார்த்தப்ப பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்சு மறுநாள் ஆயிருச்சு. அப்பாவுக்குப் போன் பண்ணி அவரும் வந்துட்டாரு. "இதுக்குத் தான் நான் அப்பவே இதெல்லாம் வேணாம்னு சொன்னேன். கேட்டியா. நீயும் உன் தாத்தாவோட சேர்ந்துக்கிட்டு வந்து சீரழிஞ்சுட்டீங்க." ஓங்கிய குரலில் அப்பா சத்தம் போட்டார். 

தாத்தாவை வீட்டுக்கு கூப்பிட்டுட்டுப் போகப் போறோம். ரெண்டு நாளா படிக்க முடியாமப் போச்சு. பாவம் தாத்தா. அப்பத்தாவுக்கு கண் ஆபரேசன் பண்ண காசு வேணும்னு வந்து இவரு கண்ணு தப்பிச்சதே போதும்னு ஆயிடுச்சு. அடுத்த வருசம் பிள்ளையார் விக்க வரவே மாட்டார்னு நினைக்கிறேன். 

எனக்கு மட்டும் ஒரு சந்தேகம். தாத்தாவுக்கு ஏத்தினது யாரு கொடுத்த ரத்தம்னு தெரியாது. அது அல்லா சாமிக்கூட்டத்தோடதா? ஏசு சாமிக் கூட்டத்தோடதா? பிள்ளையார் சாமி கூட்டத்தோடதா? எல்லாரு உடல்லயும் ஒரே கலரு ரத்தம் தான ஓடறது. ஏன் இப்படி அடிச்சுக்கிறாங்க? கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் தெரிஞ்சிருந்தாலும் யாரும் திருந்த மாட்டாங்க போல.

- மகாலிங்கம் இரெத்தினவேலு

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

80 வயதிலும் கண்பார்வை நன்றாகத் தெரிய இந்த காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT