வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரில் டாஸ்மாக் கடை வேண்டாம் என போராட்டம் செய்த பொது மக்களிடம் சப் கலெக்டர் சுபலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். 
கல்கி

டாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடிய குடியாத்தம் மக்கள்! வேறு வழியின்றி உத்தரவாதம் அளித்த சப் கலெக்டர்!

தா.சரவணா

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை தான். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் 6000க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு நூத்தி முப்பது ரூபாய் தொடங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரையில் மது விற்பனை செய்யப்படுகிறது. இப்போது தமிழக சூழலில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதில் மது கண்டிப்பாக பங்கு பெறுகிறது. ஒரு காலத்தில் மது அருந்தியவர்கள் அவ்வளவு போதையிலும், வெட்கத்துடன் யாரும் பார்த்து விடப் போகிறார்கள் என்ற அச்சத்தில் மறைந்து மறைந்து வீட்டுக்கு செல்வார்கள். ஆனால் இப்போது டாஸ்மாக் கடைக்கு செல்வதை பெருமையாக கருதுகின்றனர். இது தவிர்த்து, ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 600 கோடி 700 கோடி அளவுக்கு தமிழகம் முழுவதும் மது விற்பனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடை ஒரு இடத்தில் அமைய வேண்டும் என்றால் அங்கு பள்ளி இருக்க கூடாது, மத வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என அரசு விதி உள்ளது. ஆனாலும்... அரசு விதியை அதிகாரிகளே பல நேரம் மீறி வருகின்றனர்.

அதை பொதுமக்கள் வெற்றிகரமாக தடுத்தும் வருகின்றனர் என்பது பெருமிதத்துக்குரிய விஷயமாக உள்ளது. அப்படிப்பட்ட வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் டாஸ்மாக் கடை அமைவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் 4 நாட்கள் இரவு பகலாக போராடி சப் கலெக்டர் மூலமாக இந்த இடத்திற்கு கடை வராது என பதில் கிடைக்கப்பெற்றுள்ளனர்.

குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இதில் ஒரு கடையை இந்திரா நகருக்கு மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அங்கு ஒரு கடை தயார் செய்து மது பாட்டில்களை எடுத்துச் செல்லும்போது, அப்பகுதி மக்கள் எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம் திரும்பிச் செல்லுங்கள் என கடும் போராட்டம் நடத்தியதன் பயனாக டாஸ்மாக் அதிகாரிகள் அந்த திட்டத்தை கைவிட்டனர்.

இதன் பின்னர் ராஜகணபதி நகருக்கு டாஸ்மாக் கடை மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த வாரம் முடிவு எடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், எங்கள் பகுதியில் பள்ளி உள்ளது. மருத்துவமனை உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியாகவும் உள்ளது. அதனால் எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம் எனக் கூறி நான்கு நாட்கள் இரவு பகலாக, சாமியானா அமைத்து அதன் கீழே அமர்ந்து போராடினர். இதில் பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் போராட்டம் தொடர்பாக குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இப்படியாக நான்கு நாட்கள் கடந்த நிலையில் சப்கலெக்டர் சுபலட்சுமி, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் மக்கள் ஒரேடியாக, தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டவே வேண்டாம் என ஒற்றை காலில் நின்றனர்.

இதனால் வேறு வழியின்றி சப் கலெக்டர் சுபலட்சுமி, ஓகே இந்த பகுதிக்கு டாஸ்மாக் கடை வராது என உத்தரவாதம் கொடுத்தார். அதன் பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "டாஸ்மாக் கடை எங்கள் பகுதிக்கு வந்தால் எங்கள் பகுதியைச் சேர்ந்த குடிக்காதவர்கள் கூட குடிக்க செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் ரவுடிகள் போன்றோர் இங்கு சுற்றித் திரிவர். குடித்துவிட்டு பெண்களிடம் கிண்டல் கேலி செய்வார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தான் ஏற்படும். நாங்கள் இத்தனை நாட்களாக நிம்மதியாக இருந்து வருகிறோம். இதே நிம்மதியுடன் இருந்து விட்டு போகிறோம். எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை இப்போது மட்டுமல்ல எப்போதும் வேண்டவே வேண்டாம்." என்றனர்.

குடியாத்தம் மக்களின் விடா முயற்சியை, அவர்களின் மனதிடத்தை பாராட்டாமல் இருக்க முடியாதுதானே? ஒவ்வொரு ஊரிலும் இதே போல மக்கள் சத்யாகிரக முறையில் போராடினால் தமிழ்நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களில் டாஸ்மாக் அமைவதை தடுத்து நிறுத்திடலாம்.       

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT