JD vance - Tim walz debate 
கல்கி

US Election 2024: Part 10 - துணை அதிபர் நேர்முக விவாதம் அக்டோபர் 1- முடிவு எப்படி இருக்கும்? என்ன நடக்கும்?

ஒரு அரிசோனன்

சுடச் சுடச் செய்திகள்:

  • பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வராதோர் வாக்குச் சீட்டுகளை (absentee ballots) அனுப்பத் தொடங்கிவிட்டன. இந்த வாக்குகளை தபால் மூலமாக அனுப்பலாம். அல்லது, அதற்கான இடங்களில் உள்ள பெட்டிகளிலோ போடலாம். எனவே, வாக்களிப்பது தொடங்கியது. இந்த வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு முடிந்தவுடன் தொடங்கும்.

  • கமலா ஹாரிஸ் உக்ரேனுக்குத் தான் முழுமனதுடன் ஆதரவு கொடுப்பதாக அமெரிக்கா வந்திருக்கும் அதிபர் செலன்ஸ்கியிடம் தெரிவித்தார்.

  • “போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மறுக்கிறார்,” என்று உக்ரேனிய அதிபர் செலென்ஸ்கியைக் குறைகூறிய ட்ரம்ப், அவரைச் சந்தித்தார். ப்யூட்டினும், செலென்ஸ்கியும் தமக்கு நண்பர்கள் என்று அறிவித்ததுடன், தான் அதிபரானால் 24 மணி நேரத்துக்குள் போரை நிறுத்திவிடுவேன் என்றார்.  

  • முக்கிய மாநிலமான அரிசோனாவில், மெக்சிகோ எல்லையைப் பார்வையிட்ட கமலா ஹாரிஸ், தன் குடியேற்றத் திட்டத்தை எடுத்துரைத்தார்.  தான் கலிஃபோர்னியா மாநில முதன்மை வழக்கறிஞராக இருந்தபோது போதைப்பொருள், பாலியலுக்காகப் பெண்களைக் கடத்திய கும்பலைத் தடுத்து நிறுத்தியதை மேற்கோள் காட்டினார். அனுமதியில்லா நுழைவைத் தடுக்க இரு கட்சிகளும் ஒருமித்து நிறைவேற்ற முயன்ற மசோதாவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ட்ரம்ப் தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். ஒரு கோடிப் பேரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதாக ட்ரம்ப் பரப்புரை செய்வது நடக்காத ஒன்று என்றும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் 10000க்கும் மேற்பட்ட எல்லைக் காவலர்களையும், தஞ்சம் கேட்டும் வருபரின் வழக்குகளைப் பைசல் செய்ய அதிக நீதிபதிகளையும் நியமிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தார்.

  • தான் பெண்களின் பாதுகாப்பாளர் என்று ட்ரம்ப் உரையாற்றினார்.  

  • “மூன்று உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமித்து, பெண்களின் தன்னுரிமையைப் பறித்தவர், எப்படிப் பெண்களின் பாதுகாவலர் ஆகமுடியும்?” என்று கமலா கேள்வி விடுத்தார்.

  • பிட்ஸ்பர்க் நகரில் கமலா தன் பொருளாதாரத் திட்டத்தை விளக்கிப் பேசினார்.

  • அதிபர் பைடன் ஜார்ஜியா மாநிலத்தில் ரிபப்லிகன் ஆதரவு இருக்கும் பகுதியில் 32000 5100 மெகாவாட் சக்திவாய்ந்த கதிரவ மின் உற்பத்தி அமைப்பை (Solar Electric Power Project) நிறைவேற்றினார்.  இது மிகப்பெரிய ஹூவர் அணையின் மின் உற்பத்தி சக்தியைவிட இரண்டரை மடங்கு அதிகம்.  இருப்பினும், அங்கு கமலாவுக்கு ஆதரவு அதிகம் இல்லை.

  • ஐநூறு டாலர் (ரூ 41,850) விலையுள்ள கடிகாரங்களை தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ட்ரம்ப் லட்சம் டாலருக்கு (ரூ 83,67,000) விற்கிறார்..  இது தவிர், ட்ரம்ப்பின் மனைவி மெலானியா, தன் கணவரை ஆதரித்துப் பேசுவதற்குக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் டாலர் (ரூ 83,67,000) பெறுகிறார்.  இது இவர்களுடைய தனிப்பட்ட சேமிப்புக்குப் (தேர்தல் நிதி அல்ல) போகும்.

  • அரசு நீதித்துறையின் சிறப்பு ஆலோசகரும், வழக்குரைஞருமான ஜாக் ஸ்மித், வாஷிங்டன் நகர நீதிமன்றத்தில் 2020 தேர்தல் முடிவுகளில் ட்ரம்ப் குழப்பம் விளைவித்தது சட்டப்படி குற்றம் என்பதற்குப் புதிய சான்றுகளை சீல்வைத்த உறைகளில் நீதிபதி சுட்கனிடம் (Chutkan) சமர்ப்பித்துள்ளார்.  

  • கருச்சிதைவு தடைச் சட்டம் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைப் பாதிக்காது என்று ஒஹையோ மாநில ரிபப்லிகன் கட்சி செனட் வேட்பாளர் பேசியது அவருடைய ஆதரவைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.  இப்போது அவர் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளருக்குப் பின்தங்கித்தான் உள்ளார்.

கருத்துக் கணிப்புகள்:

  • நாட்டளவில் கமலா ஹாரிஸுக்கு சராசரியாக 2% அதிக ஆதரவு உள்ளது.

  • மதில்மேல் பூனை மாநிலங்களில் அங்கு போட்டியிடும் டெமாக்ரடிக் (கமலா ஹாரிஸ்) கட்சி செனட் வேட்பாளர்கள் எளிதில் வெல்வார்கள் எனக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.  ஆனால், அதிபர் தேர்தலில் ஆதரவு விகிதம் மிகவும் நெருக்கமாகக் கணிப்புப் பிழைக்குள் உள்ளது.

  • 2016, 2020 தேர்தல்களில் கருத்துக் கணிப்பை விட ட்ரம்ப் அதிகமாக வாக்குகள் பெற்றதால், இந்தமுறை அவர்தான் தேர்தலில் வெல்வார் என்று சில கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

  • ஆனால், 2022 இடைத் தேர்தல் கருத்துக் கணிப்பில் ரிபப்லிகன் கட்சியைவிட டெமாக்ரடிக் கட்சி அதிக வாக்குகள்  பெற்றதால், அதை வைத்து, கமலா தேர்தலில் வெல்வார் என மற்ற சில கணிப்பாளர்களும் சொல்கிறார்கள்.

  • எப்படி இருப்பினும், கடந்த நூறாண்டுகளில் இந்த அமெரிக்க அதிபர் தேர்தல்தான் கணிப்பதற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்று அனைவரும் ஒருமனதாகக் கூறுகின்றனர்.

  • மதில்மேல் பூனை மாநிலங்கள் கமலா ஹாரிஸ் நான்கிலும், ட்ரம்ப்பும் மூன்றிலும் முன்னணியில் இருக்கின்றனர். இப்பொழுது தேர்தல் நடந்தால் 276 (270 தேவை) எலெக்டோரல் வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸ் வெல்வார் என்ற கருத்துக் கணிப்பு கடந்த மூன்று வாரங்களாக மாறவில்லை.

இந்த வாரச் சராசரிக் கணிப்பு:

  • கமலா முந்தியிருப்பவை: மிஷிகன் – 1.7%; விஸ்கான்சின் – 1.0%; நிவாடா – 1.2%; பென்சில்வேனியா – 0.4%

  • ட்ரம்ப் முந்தியிருப்பவை: அரிசோனா –  2.0%; வடக்கு கரோலினா – 1.4% ஜார்ஜியா – 1.5%

வராதோர் வாக்குகளும் அனுப்பப்பட்டு அஞ்சல் வாக்களிப்பு தொடங்கிவிட்டது.  துணை அதிபர் நேர்முக விவாதம் அக்டோபர் 1, செவ்வாயில் நடக்கும்.  அதன் முடிவு எப்படி இருக்கும்?  அதன் பிறகு என்ன நடக்கும்?  திகில் படம் பார்ப்பது போன்று இருக்கும் இந்தத் தேர்தலைப் பற்றி அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்)

அரங்கனுக்கே டாக்டரா? யாரப்பா அது?

ஐஸ்கிரீமை கத்தி மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி சாப்பிடுறாங்களா? எங்கே?

Albinism: இந்த நோய் இவ்வளவு மோசமானதா?

News 5 – (07.10.2024) விமான சாகசம்: ‘பாதுகாப்பில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை’ - தவெக தலைவர் விஜய்!

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' - பாடலின் தத்துவ பொருள் என்ன?

SCROLL FOR NEXT