சுடச்சுடச் செய்திகள்:
ரிபப்லிகன் கட்சி அதிகமுள்ள ஜார்ஜியா மாநிலத் தேர்தல் குழுவினர் ஐந்து பேரில் மூவர் ஆதரித்ததால், வாக்குச் சீட்டுகள் ஒவ்வொன்றாக மனிதரால் எண்ணப்படவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் முடிவை உடனே வெளிவரவிடாமல் தடுக்க ரிபப்லிகன் கட்சியினரின் முயற்சி என்று நம்பப்படுகிறது.
ட்ரம்ப் ஆதரவாளரான எலான் மஸ்க், “யாரும் பைடன்/கமலாவைக் கொலைசெய்ய முயற்சிகூடச் செய்யவில்லை,” என தனது சமூக வலைத்தளத்தில் (ட்விட்டர் – எக்ஸ்) கிண்டலாக எழுதியுள்ளார். அந்த வலைத்தளத்தில் உள்ள 20 கோடி பேர்களை பைடன்/கமலாவுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட இச்செய்தி தூண்டுகிறது என்று அனைவரும் கண்டித்துள்ளனர்.
இது போதாது என்று பைடனும் கமலாவும் தன்னைப் பற்றிப் மோசமாகப் பேசியதால்தான் தன்மீது இருமுறை கொலைமுயற்சி நடந்துள்ளது என்று சான்றில்லாத குற்றச்சாட்டை ட்ரம்ப் பரப்பிவருகிறார். கடந்த தேர்தல்களில் வன்முறையைத் தூண்டும் வண்ணம் ட்ரம்ப் பலமுறை பேசியுள்ளார்.
அவரது துணை அதிபர் வேட்பாளர் வான்ஸ், “ட்ரம்ப்பைக் கொலைசெய்ய இரு முயற்சிகள் நடந்தும், எவரும் கமலாவைக் கொலை செய்ய முயற்சிக்கவில்லை,” என்று பேசியதும் பரபரப்பைத் தூண்டியிருக்கிறது.
கமலாவுடன் இனி நேர்முக விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆயினும் அக்டோபர் 23ம் தேதி சி.என்.என். ஊடகத்தில் நடக்கவிருக்கும் விவாதத்துக்குத் தான் வரப்போவதாகக் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்புக்கு ஆதரவானவரும், கருப்பரும் ஆன ராபின்சன் வட கரோலினாவில் ஆளுநர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தன்னை கருப்பு நாட்சி (ஹிட்லர் ஆதரவாளர்), அடிமை விரும்பி என்று புனைபெயரில் சமூக வலைத்தளங்களில் பதிந்தது வெளிவந்துள்ளது. இது ரிபப்லிகன் கட்சிக்குத் தலைவலியை உண்டாக்கியுள்ளது. இதனால் மக்கள் ஆதரவு அங்கு டெமாக்ரடிக் கட்சிக்கு அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற சயின்டிஃபிக் அமெரிக்கன் (Scientific American) என்ற அறிவிதழ், “விஞ்ஞானம், சுகாதாரம், சூழ்நிலையை மேம்படுத்தக் கமலாவுக்கு வாக்களியுங்கள்!” எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
எப்பொழுதும் டெமாக்ரடிக் கட்சியை ஆதரித்துவரும், அமெரிக்காவின் மிகப்பெரிய டீம்ஸ்டர்ஸ் (Teamsters) போக்குவரத்துத் தொழிலாளர் யூனியன் எவருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதில் பலர் தலைவர் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவிப்பதால் இந்த முடிவு என்று நம்பப்படுகிறது. ஆயினும் மேற்குப் பகுதி டீம்ஸ்டர் யூனியன் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கமலா தேர்தலில் வென்றால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ரிபப்லிகன் கட்சியினர் 46%உம், எதிர்த்துப் போராடுவோம் என 14% உம் தெரிவித்திருக்கின்றனர்; அதே சமயம் ட்ரம்ப் வென்றால் அதை ஏற்க மறுப்போம் என 14%ம், எதிர்த்துப் போராடுவோம் என 11% சொன்னார்கள் என ஒரு அறிக்கை வெளிவந்திருப்பது பலருக்கும் கவலை அளித்துள்ளது.
இன்னும் ஒஹையோ மாநில ஸ்பிரிங்ஃபீல்ட் ஊரில் கலவரம் அடங்கவில்லை. குண்டு வைத்திருப்பதான பயமுறுத்தலால் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்த மாநில ஆளுனர் பாதுகாப்புக்குக் போலீஸ் பந்தோபஸ்து கொடுத்துள்ளார். பிரச்சினையை ஊதிஊதிப் பெரிதாகக்க வேண்டாம் என ட்ரம்புக்கும், அவரது துணை அதிபர் வேட்பாளர் வான்ஸுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் செயற்கைக் கருத்தருப்புக்கு ஆதரவளிக்கும் மசோதாவை ரிபப்லிகன் செனட்டர்கள் தடுத்துள்ளனர்.
தேர்தலில் குழப்பத்தை விளைவிக்கவேண்டி, ரஷ்யக் கணிணிக் குறும்பர்கள் (computer hackers) பொய்யான காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்காணொளி இன்னும் எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளத்தில் உள்ளதாகவும், 15 லட்சம்பேர் அதைப் பார்த்ததாகவும் மைக்ரோசாஃப்ட் கூறுகிறது.
தேர்தலில் மோசடி நடக்கிறது என்ற ட்ரம்ப்பின் பரப்புரை, அமெரிக்க பிரதிநிதி சபையில் ரிபப்லிகன் கட்சியைப் பாதிக்கும் என நம்பப்படுகிறது.
மதில் மேல் பூனை மாநிலங்களில் தொழிற்சாலைகள் வர $50 பில்லியன் ($5 லட்சம் கோடி) அரசு மூலம் நிதி உதவி செய்தும், அதைப் பற்றி அங்கு கமலா பேசாமலிருக்கிறார்.
கருத்துக் கணிப்புகள்:
நாட்டளவில் கமலா ஹாரிஸுக்கு சராசரியாக 2% அதிக ஆதரவு உள்ளது.
மதில்மேல் பூனை மாநிலங்கள் ஆறில் கமலா ஹாரிஸ் நான்கிலும், ட்ரம்ப் மூன்றிலும் முன்னணியில் இருக்கின்றனர். கமலாவுக்கு மிஷிகனில் ஆதரவு சிறிது கூடியும், மற்ற மானிலங்களில் சிறிது குறைந்தும் உள்ளது. ட்ரம்ப்புக்கு அரிசோனாவிலும், ஜார்ஜியாவிலும் சிறிது கூடியுள்ளது. சென்ற வாரம் தேர்தல் நடந்தால் 276 (270 தேவை) எலெக்டோரல் வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸ் வெல்வார் என்ற கருத்துக் கணிப்பு இந்த வாரமும் மாறவில்லை.
இந்த வாரச் சராசரிக் கணிப்பு:
கமலா முந்தியிருப்பவை: மிஷிகன் – 1.7%; விஸ்கான்சின் – 1.0%; நிவாடா – 0.2%; பென்சில்வேனியா – 0.7%
ட்ரம்ப் முந்தியிருப்பவை: அரிசோனா – 1.6%; வடக்கு கரோலினா – 0.1% ஜார்ஜியா – 1.7%
தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த வாரம் வராதோர் வாக்குகளும் அனுப்பப்பட்டுவிடும். என்ன நடக்கும்?
(தொடரும்)