Vaazhai 
கல்கி

கதை சர்ச்சையில் சிக்கி  உள்ள 'வாழை' ! கதை திருட்டுக்கு 'ஈகோ'தான் காரணமா?

ராகவ்குமார்

ஒரு படம் வெற்றி அடைந்தாலோ, அல்லது மக்களிடையே பேசப்பட்டாலோ  அந்த படத்தின் 'கதை என்னுடையது' என்று சிலர் உரிமை கொண்டாடுவார்கள் . மீடியாக்களில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்படும். அதன் பின்பு இதை பற்றி எந்த  தகவலும் இருக்காது. இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் அடுத்த படம் வரும் பொது அடுத்த சர்ச்சை உருவாகும். கடந்த வாரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள 'வாழை'  திரைப்படம் கதை சர்ச்சையில் சிக்கி  உள்ளது.

இப்படம் வெளியான பின்பு சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் சோ. தர்மன் ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தர்மன் அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே 'வாழையடி' என்ற பெயரில் இதை கதையாக எழுதி விட்டதாகவும், வாழையடி வாழையாக குழந்தைகள் வாழை தார் சுமப்பதை குறிப்பிட இந்த தலைப்பை வைத்ததாகவும் சொல்லியிருந்தார். படம் பார்த்த போது தன் கதை அப்படியே படமாக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இன்னொரு வகையில் தன் கதை படமாக்கபட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியே என்றும் கூறியுள்ளார் தர்மன். தர்மனின் குற்றச்சாட்டுக்கு மாரி செல்வராஜ் தரப்பிலிருந்து இதுவரை எந்த வித பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 'கதை திருட்டு' பிரச்னை என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பேசப்படும் விஷயம். கடந்த 1996 ஆம் ஆண்டு அகத்தியன் அவர்கள் இயக்கத்தில் அஜித், தேவயானி  நடிப்பில் வெளியான காதல் கோட்டை படம் மாறுபட்ட விதத்தில் காதலை சொல்லியதற்காக மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான சில நாட்களில் பாலா சேகரன் (இவர் 1997ஆம் ஆண்டு விஜய்யை வைத்து லவ் டுடே  படத்தை இயக்கியவர் )  என்பவர் இந்த கதை என்னுடையது என்று பிரபல வார பத்திரிகையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் . இந்த குற்றச்சாட்டை அகத்தியன் மௌனமாக கடந்து போனார்.

சினிமாவில்  உதவி இயக்குநராக இருப்பவர்கள் தன் மனதில் இருக்கும் கதையை யாரிடமாவது ஆர்வத்தில் சொல்ல, அது அப்படியே பரவி ஒரு நாள் திரைப்படமாக வருகிறது. சம்மந்தப்பட்ட உதவி இயக்குனர் தியேட்டரில் படம் பார்க்கும் போதுதான் 'ஆஹா இது நம்ம கதையாச்சே' என்று ஆச்சரியப்படுகிறார்.

இந்த 'கதை கையாடலில்' அடிக்கடி அடிபடும் பெயர் டைரக்டர் ஏ. ஆர் முருகதாஸ். கடந்த 2016 ஆம் ஆண்டு முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்த கத்தி  படத்தின் கதை என்னுடையது என்று குரல் எழுப்பினார் கோபி நயினார். வழக்கம் போல கோடம்பாக்கத்தினர் இவரின் குரலை காதில் போட்டு கொள்ளவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோபி அறம் என்ற படத்தை எடுத்து திரும்பி பார்க்க வைத்தார்.

இதன் பிறகும் முருகதாஸ் மாறவில்லை. இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படம் நான் எழுதிய செங்கோல் படத்தின் அப்பட்டமான காப்பி என்று வருண் என்பவர்  நீதி மன்றத்தை அணுகினார். நீதி மன்றத்திற்கு வெளியிலேயே இதற்கு தீர்வு கண்டார் முருகதாஸ்.

2018ல் வெளியான 96 திரைப்படத்தின் கதை தன்னுடையது என்கிறார் பாரதி ராஜாவிடம் உதவியாளராக இருக்கும் சுரேஷ்.  பாரதி ராஜா அவர்கள் இந்த படத்தை 'பால பாண்டி பாரதி' என்ற பெயரில் தயாரிக்க இருந்ததாகவும், தன் நண்பர் ஒருவர் மூலமாக 96 படத்தின் டைரக்டர் பிரேம்குமாருக்கு இந்த கதை சென்றதாகவும் சொல்லி வருத்தபடுகிறார் சுரேஷ். இந்த ஆண்டு நித்திலன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மகாராஜா திரைப்படம், தான் இயக்கிய குறும்படத்தின் கதை என்கிறார் மருது என்பவர். தனக்கு நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாட போவதாக சொல்கிறார்.

சென்ற ஆண்டு வெளியான பிச்சைக்காரன் 2 படம் உட்பட பல்வேறு விஜய் ஆன்டனி படங்கள் இது போன்ற கதை சர்ச்சைகளில் சிக்கி கொள்கின்றன.

சென்ற ஆண்டு மத, மனித நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்பட்ட அயோத்தி திரைப்படத்தின் கதை எஸ். ராமகிருஷ்ணன் என்று படத்தில் இருந்தது. அனால் மாதவராஜ் என்பவர் அது தன்னுடைய 'தீராத பக்கங்கள்' கதை என்று தனது வலைதளத்தில் குரல் எழுப்பினார். அயோத்தி படத்தின் இயக்குனர்  இவரது கோரிக்கையே ஏற்று கொண்டு சமரசம் செய்தார் .

இந்த கோடம்பாக்க டைரக்டர்கள் கதையை மட்டும்  பிறரிடம் இருந்து எடுக்கவில்லை; ஏற்கனவே வெளியான பழைய படங்களில் இருந்து கதையை அப்படியே உரிமையுடன் எடுத்து கொள்கிறார்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை, தான் இயக்கிய இன்று போய் நாளை வா படத்தின் காப்பி என்று பாக்யராஜ் சொன்ன பிறகே படக்குழு பாக்கியராஜின் பெயரை டைட்டிலில் இடம் பெற செய்தது. திரைகதை மன்னன் பாக்யராஜிற்கே இந்த நிலைமை என்றால் கதை திருட்டால் பாதிக்கப்படும் சாமானியனின் நிலையை பற்றி சொல்லவா வேண்டும்.

Lathananth
இது போன்ற கதை திருட்டால் பாதிக்கபட்ட அனுபவத்தை சந்தித்துள்ளார் நமது கோகுலம் இதழில் ஆசிரியராக பணியாற்றிய லதானந்த் அவர்கள். அவருடைய நிலைப்பாடை குறித்து கேட்ட போது: "நமது கல்கி வார இதழில் குளுவான் என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினேன். வீட்டில் உள்ள எலி ஒன்று மிகுந்த சேட்டை செய்யும். வீட்டில் உள்ள பொருட்களை துவம்சம் செய்யும். இறுதியில் கூண்டுக்குள் சிக்கும். எலி ஈன்ற குட்டிகளை மனதில் வைத்து, எலியை வெளியே விட மனமில்லாமல் விடுதலை செய்து விடுவார்கள். நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த போது என் குளுவான் கதையை போன்றே இருந்தது. படத்தின் இறுதி காட்சியை காண்பிக்கவில்லை. நான் படத்தில் பணியாற்றியவர்களிடம் கேட்ட போது என் கதையின் முடிவை போலவே கிளைமாக்ஸ்ம் இருப்பதாக தெரிந்து கொண்டேன். படம் வெளியான பின்பு இது உறுதியானது. டைரக்டரிடம் இதை பற்றி கேட்ட போது எந்த வித பதிலும் முறையாக இல்லை. எனக்கு நியாயம் கிடைக்க நீதி மன்றதை நாடி உள்ளேன்." என்றார் எழுத்தாளர், கதாசிரியர் லதானந்த்.

வெளிநாட்டு படங்களையும் 'தழுவி' எடுப்பதில் வல்லவர்கள் நம் கோடம்பாக்கத்தினர். மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான நாயகன் இத்தாலி படமான தி  காட் பாதர் படத்தின் தழுவலே. ஏழாம் அறிவு, கஜினி, அவ்வை ஷண்முகி என இன்னும் சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் பல மேலை நாட்டு படங்களின் தழுவல்களே!.

இந்த நிலைமைக்கு என்ன கரணம்? தமிழ் சினிமாவில் வாசன், ஏ வி எம் , நாகி ரெட்டி போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தபோது கதை இலாகா  என்று தனியாக இருந்தது. அங்கே பல நல்ல கதை விவாதங்கள் நடந்தன. நல்ல கதைகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தன. இன்றும் மலையாள, கன்னட சினிமாவில் இது போன்ற கதை இலாகா உள்ளது. அங்கே நல்ல கதைகள் தேர்வு செய்யப்பட்டு எழுத்தாளர்களுக்கு நியாயமான தொகை கிடைக்க வழிவகை செய்கிறார்கள். இதனால் அங்கே நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வருகின்றன.

நம் தமிழ் சினிமாவில் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும், கதாசிரியர்கள் இடம் சென்று கதை கேட்பதை ஒரு ஈகோ விஷயமாக பார்க்கிறார்கள். திருட்டிலேயே மோசமான திருட்டு அறிவு திருட்டுதான். இதை இந்த படைப்பாளிகள் எந்த வித தயக்கமுமின்றி அரங்கேற்றுகிறார்கள். இதை கேள்வி கேட்க வேண்டிய திரைப்பட சங்கங்கள்  அரசியல்வாதிகள் நடத்தும் விழாக்களில் பங்கு பெறுவதிலேயே கவனம் செலுத்துகின்றன.

இந்த நிலை மாறுமா? மீண்டும் தமிழ் சினிமா கதைகளால் கம்பீரமாக எழுந்து நிற்கும் நிலை வருமா?

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT