கல்கி

கோயில் சுவற்றில் பெயரை எழுதிவைத்தால் NEETல் தேர்வாகலாம்!

வினோத்

இன்றைய 20k இளைஞர்களுக்கு நன்கு அறிமுகமான  நகரத்தின் பெயர்  ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டா. ஜெய்ப்பூரிலிருந்து 200 கி.மீ., தொலைவிலுள்ள இந்த நகரம் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும்  மாணவர்களால் நிரம்பி வழிகிறது. காரணம் இங்குள்ள  தனியார் JEE/NEET பயிற்சி கல்லூரிகள். 

 JEE/NEET தேர்வு  முடிவுகள் வெளியாகும் முதல் பக்க விளம்பரத்தில் இடம்பெறும் மாணவமணிகள் இங்குள்ள கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்கள். நகரில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். இந்த மாணவர்களுக்கு பேயிங் கெஸ்ட் முறையில் வீடுகளைக் கொடுப்பதில் வாடகைக்கு கொடுப்பதைவிட நல்ல பணம் கிடைக்கிறது. தமிழ் நாடு உள்பட அனைத்து மாநில உணவுகளை வழங்கும் மெஸ்கள் நிறைய உண்டு. இந்தியாவில் பல  நகரங்களில் கிளைகளுடன் இருக்கும் அனைத்து முன்னணி பயிற்சி கல்லூரிகள் உள்பட 150க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இங்கு இருக்கின்றன, ஒவ்வொன்றிலும் ஷிப்ட் முறையில் 1000 மாணவர்கள். 

இங்கு  வந்து தங்கிப்படிக்கும்  மாணவர்கள் நம்பும் ஒரு  முக்கியமான விஷயம், நகரில் உள்ள கோயில் சுவரில்  JEE/NEET தேர்வில் வெற்றிபெற வேண்டுமென எழுதினால் தங்களின் வேண்டுதல் நிறைவேறும்  என்பது. 

நகரின் நடுவே  தல்வண்டி பகுதியில் அமைந்துள்ள ராதா கிருஷ்ணன் கோயிலின் சுவரில் பலரும் ‘கிருஷ்ணா தயவு செய்து என்னை நீட் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யுங்கள்’, ‘எய்ம்ஸ் டெல்லியில் எனக்கு சீட் கிடைக்க வேண்டும்’, ‘ஐஐடி டெல்லியில் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்’ என தங்களின் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.   

இது குறித்து கோயில் பூசாரி ஒருவர் ‘‘2000ம் ஆண்டில் சில மாணவர்கள் இவ்வாறு கோயில் சுவரில் எழுதினர். அவர்கள்  அனைவரும்  தேர்ச்சி பெற்றதால் இது பிரபலமடைந்தது. ஆரம்பத்தில் கோயில் சுவரை பாழாக்குகின்றனர் என நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சுவரில் எழுதும் மாணவர்களை எச்சரித்தோம். ஆனால் நாளடைவில் இதன் மூலம் கோயில் பிரபலமடைந்தது.

இப்போது தினமும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரிசிக்க வருகின்றனர். இதனால் மாணவர்கள் எழுதும் சுவருக்கு ‘நம்பிக்கை சுவர்’ என பெயர் சூட்டி அவர்களுக்காகவே அந்த பகுதியை ஒதுக்கிவிட்டோம். மாணவர்கள் மட்டுமின்றி நம்பிக்கை கொண்ட அவர்களின் பெற்றோர்களும் வந்து எழுதிச் செல்வார்கள். வேண்டுதல் நிறைவேறிய பலரும் கோயிலுக்கு நன்கொடையும் தருகின்றனர். எனவே 2 மாதத்திற்கு ஒருமுறை சுவருக்கு பெயிண்ட் அடித்து புதுப்பிக்கிறோம்’’ என்கிறார்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT