ஓவியம்: வேதா 
மங்கையர் மலர்

சிறுகதை - காந்தா!

பிருந்தா நடராஜன்

ரியல் எஸ்டேட் விஷயமாக பக்கத்து ஊர் அட்வகேட்டை பார்த்து பேச வேண்டி இருந்ததால் காரில் பலத்த யோசனையில் அமர்ந்து இருந்தார் குமரன். டிரைவர் காரை நிறுத்தி கூட்டமாக நிற்பவர்களிடம் ஏதோ விசாரித்து கொண்டிருக்க, காரில் இருந்து தானும் இறங்கி "என்னப்பா ராஜா, என்ன பிரச்னை?" என்று கேட்டார் குமரன்.  

"ஒண்ணுமில்லங்க ஐயா… நாம போக வேண்டிய ஆபீஸ் பக்கம் ஏதோ கட்டட வேலை நடக்குதுன்னு ரூட்டை மாத்தி விட்டதால இந்த வழி வந்தேங்கய்யா. இது ஏதோ கருஞ்சோலை கிராமமாம். இங்கே ஒரு அம்மா படுத்த படுக்கையா இப்பவோ அப்பவோன்னு கிடக்கிறாங்களாம்.. மொத்த ஊரு சனமும் கூடிக்கிடக்கு‌. வாங்கய்யா. நாம வேற ரூட்ல போலாங்கய்யா" என்று காரில் ஏறி ஸ்டார்ட் செய்த டிரைவரிடம், "என்னது கருஞ்சோலை கிராமமா? இருப்பா… நா போய் பார்த்துட்டு வரேன்," என்று இறங்கி வேகமாக நடந்தவரின் மனம் பல வருடங்கள் பின்னோக்கி சென்றது.

ப்ளஸ் டூ வரை கிராமத்து அரசு பள்ளியில் படித்ததும் முடித்தபின் குடும்பத்தோடு நகரத்திற்குக் குடிபெயர்ந்ததும் மின்னல்போல மனதில் பளிச்சிட்டது. அது ஒரு கனாக்காலம்.

ப்ளஸ் டூ வரை தன்னுடன் படித்த காந்தாவை மறக்கமுடியுமா என்ன? படிப்பில் முதல் ரேங்க்; கவிதை கட்டுரை பேச்சுப் போட்டி எல்லாவற்றிலும் முதல் என்று ஆசிரியர்கள் அனைவரும் கொண்டாடும் காந்தா, குமரன் வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளிதான் குடி இருந்தாள்.

பள்ளிக் கடைசி நாள்…  ப்ளஸ் டூ பரீட்சை முடிந்து எப்போதும் தோழியுடன் சேர்ந்து வீடு திரும்பும் காந்தா அன்று தனியாக சென்றுகொண்டு இருந்தாள். பின்னால் சைக்கிளில் வந்த குமரன் "காந்தா.. கொஞ்சம் நில்லேன்," என்றதும் திரும்பியவளிடம் "நான் காலேஜ் படிக்க டவுனுக்கு பாட்டி வீட்டுக்குப் போறேன். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. படிச்சு முடிச்சு நல்ல வேலை கிடைச்சதும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்று கேட்ட கேள்விக்குக் கண்களில் பயத்துடன், "நீங்க படிச்சு முடிச்சு நல்ல வேலை கிடைச்சதும் எங்கப்பாகிட்ட பேசுங்க. இப்ப வேண்டாம்" என்று ஓடிவிட்டாள் சிறு புன்முறுவலுடன்.

ந்தக் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த பக்கத்து வீட்டு பெண்மணி காந்தாவின் பெற்றோரிடம் கூற இருவர் வீட்டிலும் வெடித்தது பூகம்பம்.. காந்தாவின் அப்பா கிராமத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்ததால் பஞ்சாயத்து கூட்டப்பட்டு குமரன் மேல் பழி சுமத்தப்பட்டு குடும்பமே ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டது. அவமானம் தாங்காமல் நகரத்துக்கு குடிபெயர்ந்தனர் குமரன் வீட்டார்.

படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைத்ததும் வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பிக்க கல்யாணம் என்றால் காந்தாவுடன்தான் என்று தீர்மானமாக குமரன் கூற அவமானப்படுத்திய அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் வைத்தால் தங்களை உயிருடன் பார்க்கமுடியாது என்று பெற்றோர் சொல்ல தனிமரமாகவே வாழ்ந்து விட்டான் குமரன். நடுவில் தன் நண்பன் மூலம் காந்தாவிடம் பேச முயற்சிக்க அது அடி தடி என போய் தோல்வியில் முடிந்தது.

நினைவலைகளை நிறுத்தியது "குமரா" என்று அழுதபடி கட்டித் தழுவிய குமரனின் பள்ளித் தோழன் ராமனின் கைகள். "என்னடா குமரா எத்தனை வருஷமாச்சு உன்னப் பார்த்து... டேய் குமரா உன் காந்தா சாகக் கிடக்கறாடா.  அடிக்கடி வந்திருக்கு நெஞ்சு வலி. யார் கிட்டேயும் சொல்லல போல. கடைசில ஏதோ வந்து கோமா நிலைக்குப் போயிட்டா டா.." என்று அழுத ராமனிடம் ஒற்றை வார்த்தையில் "நான் காந்தாவைப் பார்க்கணும்" என்று கூறியதும், காந்தா அப்பாவிடம் அழைத்து விவரம் சொல்ல, "தம்பி குமரா‌, காந்தாவை பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தர முடியுமான்னு கண்ணியமா கேட்ட உன்னை ஆள் வச்சு அடிச்ச பாவி பா நான்..வா..வந்து காந்தாவைப் பாரு" என்று வீட்டினுள் அழைத்துச் சென்றார்..

கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த காந்தாவிடம், "கண்ணம்மா... காந்தாம்மா… இங்க பாரு. குமரன் வந்திருக்கான்.  கண்ணைத் திறந்து பாரும்மா" என்று கதறியும் கண் திறக்கவில்லை காந்தா‌. " காந்தா" என்று கதறி அவள் கைகளை பிடித்து குமரன் அழுததும் மெதுவாக கண்களை திறந்து குமரனை கண்குளிர கண்டாள் காந்தா.

இறுகப் பிடித்த கைகளுடன்" காந்தா..உன்ன இந்த நிலைமையிலா நான் பார்க்கணும்" என்று காந்தாவின் கண்களைப் பார்த்து கேட்க, குமரனை காண காத்திருந்த கண்கள் அவனைக் கண்டதும் மெதுவாக மூடிக்கொண்டன. இறுகப் பிடித்த அவள் கைகளை தன் கைகளால் பிரிக்க முடியாது சில்லிட்டு போக " என்னை விட்டு ஒரேயடியாக போயிட்டியே காந்தா" என்று கதறிய குமரன் குரல் ஊர் முழுக்க ஒலித்தது. ஊரே அழுதது‌‌.

இன்று இணைந்த கைகள் அன்று இணைந்து இருந்தால் இரு மனங்கள் இணைந்திருக்கும். இது வெறும் கவர்ச்சியால் கவரப்பட்ட காமம் கலந்த காதல் அல்ல கண்ணியமானது என்று அந்த இரு மனங்களுக்கு மட்டுமே தெரியும்…  

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 2

தொல்காப்பியர் கூறும் ஆறறிவுகள் பற்றித் தெரிந்து கொள்வோமா குட்டிஸ்!

மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட சிவன் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?

நீங்க எல்லாரும் புரதத்தை தவறான நேரத்தில் சாப்பிடுறீங்க! 

முத்தான 10 பயனுள்ள சமையல் டிப்ஸ்!

SCROLL FOR NEXT