- கவிதா
சமீப காலமாக சமூக வலைதளங்கள் திரைப்படத்துறையில் அதீத ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒரு சில நடிகர்-நடிகைகள் தங்களின் அன்றாட நிகழ்வு, படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் விஷயங்கள், உடற்பயிற்சி, சுற்றுலா என பல விஷயங்களையும், கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள்.
அந்தக் காலத்தில் நடிகர்-நடிகைகள் தங்கள் முகங்களை பொது இடங்களில் அதிகமாக காண்பிக்க மாட்டார்கள். அவர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும். பார்த்தாலும் அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் வசதி அப்போது இல்லை. ஆனால் இன்றைய நடிகர்-நடிகைகள் எந்த நேரமும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அடிக்கடி பார்க்கவும், பேசவும், அவர்களுடன் செல்பி எடுக்கவும் முடிகிறது.
சமூக வலைதளங்கள் இன்றைய நடிகர்-நடிகைகளுக்கு எந்த அளவுக்கு பயன் அளிக்கிறதோ அதே அளவு தீமையும் செய்கின்றன. ஒரு சில நடிகைகள் உடற்பயிற்சி செய்வது, கவர்ச்சி உடையில் அழகு காட்டுவது, நீச்சல் உடையில் இருப்பது போன்ற கவர்ச்சி புகைப்படங்களையோ, சமூகத்துக்கு அறிவுரை சொல்லும் கருத்துகளையோ பதிவு செய்கின்றனர். இவர்களின் புகைப்படம் மற்றும் கருத்துக்கு ஒருபக்கம் ஆதரவும் வரவேற்பும் கிடைத்தாலும், இன்னொரு பக்கம் இவர்களை வரைமுறை இல்லாமல் சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி வசைமொழி பாடுகிறவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். தற்போது ஆதரவு அளிப்பவர்களை விட ஆபாச வார்த்தைகளால் வசைபாடுபவர்கள்தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட நடிகர்-நடிகைகளின் மோசமான நடிப்புதான் என வார்த்தைகளில் வறுத்தெடுக்கிறார்கள். நயன்தாரா காதல் தோல்வி, வாடகைத்தாய், படம் தோல்வி, உருவக்கேலி போன்ற விமர்சனங்களில் சிக்கினார். சமந்தாவும், நயன்தாராவும் சமீபத்தில் மருத்துவ ஆலோசனைகளை சொல்லி கடும் விமர்சனங்களை சந்தித்தனர். குஷ்பு, அமலாபால், சுருதிஹாசன், ராஷ்மிகா மந்தனா, ஹன்சிகா என்று பல முன்னணி நடிகைகள் வெறுப்பு பதிவுகளை எதிர்கொண்டவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.
சமீப காலமாக நெப்போலியன் மகன் திருமணம் சமூக வலைதளத்தில் பெரும் பேசும் பொருளாகவும், எதிர்ப்புகளையும், கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அதேபோல் தற்போது நயன்தாரா - தனுஷ் இடையே நடக்கும் மோதலுக்கு சமூக வலைலைதளத்தில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி உள்ளது.
சில நடிகைகள் வெளியிடும் வீடியோக்களை பார்த்து எலும்பும் தோலுமாக இருக்கிறீர்கள், குண்டாகி விட்டீர்கள், அழகாக இல்லை, நடிக்கவே தெரியல என்றெல்லாம் கேலியும், விமர்சனமும் செய்கிறார்கள். அனுஷ்காவை எடை கூடி விட்டதாகவும், நித்யாமேனன் குள்ளமாக குண்டாக இருப்பதாகவும் உருவக்கேலி செய்தனர். சாய்பல்லவி முகத்தில் பருக்கள், உதடு, மூக்கு சரியில்லை என்பது போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த வெறுப்பு பதிவுகளை தாக்கு பிடிக்க முடியாமல் சில நடிகைகள் வலைதளத்தை விட்டே வெளியேறிய சம்பவங்களும் நடந்துள்ளன. வெறுப்பு விமர்சனங்களால் நடிகர்-நடிகைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையோ, காயப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்பதையோ விமர்சனங்களை பதிவு செய்பவர்கள் உணர்வது இல்லை. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் செல்பி எடுக்க உடன்படாத நடிகர்-நடிகைகளும் வசைமொழியை எதிர்கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் கண்ணியமான கருத்துக்களை பதிவிட்ட மக்கள் தற்போது தங்கள் மனதில் உள்ள வக்கிரத்தை பதிவிடும் இடமாக கருதுகின்றனர். பொது இடத்தில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் இப்போது எவருக்கும் இருப்பதில்லை.
சமூக வலைதளங்கள் சினிமா நட்சத்திரங்கள் பற்றிய செய்திகளை அறியவும், உணர்வுகளை பரிமாறுவதற்கும் பயன்படும்போது அது கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்குமான பாலமாக செயல்படுகிறது.
சமூக வலைதளம் என்பது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பொதுவான இடம். இந்த இடத்தில் சுதந்திரமாக செயல்படுவதாக நினைத்து கொண்டு மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை கொட்டாமல் கண்ணியமாக நடந்த கொண்டால் அனைவருக்கும் நல்லது.