Woman walk out from court 
மங்கையர் மலர்

சிறுகதை: ஆணென்ன? பெண்ணென்ன?

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

எவ்வளவு நாள் இந்தக் கொடுமையைத் தாங்குவது? கிட்ட தட்ட அஞ்சு வருடம் பொறுத்தாகிவிட்டது.

குழந்தை பாதுகாப்பு, மற்றும், சட்டத்தின் கீழ் உள்ள  அமைப்புகள் மூலம் அணுகியும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வில்லை.

'இனி கடைசி வழி உயர்நீதி மன்றத்தை அணுகுவது தான்' என்று எண்ணி, தான் கொடுத்திருந்த புகார் மனு விசாரணைக்கு வந்த போது, ஆஜராகி இருந்தாள் விஜி என்னும் விஜயலக்ஷ்மி, சந்தீப் மனைவி.

நீதிபதி விஜியிடம், ”உங்கள் கணவர் மீதும், அவர்கள் பெற்றோர் மீதும் நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு வித்தியாசமா தெரியுது. ஆனாலும் இந்தக் காலத்தில், உங்களுக்கு ஏற்பட்ட இப்படியொரு பிரச்சனையும், அதன் தொடர்பான புகாரும் இந்த மன்றத்துக்குக் கொஞ்சம் புதுசுதான். இந்தச் செய்தியும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு.”

“ஆமாம் யுவர் ஆனர்! இது கொஞ்சம் வித்தியாசமான புகாராகத் தான் தெரியும். நானே இந்த வழக்கில் என் கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.

“ஒரு பெண் பொறுமையாகப் போனது அந்தக் காலம். இப்ப அப்படி இல்லை. எனக்குக் கல்யாணம் 2018ல் நடந்தது. வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த குடும்பம். கணவர் பெயர் சந்தீப். பெற்றோருடன் சொந்த பிசினஸ். நிறையச் சொத்து உள்ள குடும்பம்.

“தன் மகன் திருமணத்துக்கு, ஏழைப் பெண், அதுவும் அதிகம் படிக்காத பெண்ணின் அறியாமையைப் பயன்படுத்தித் தாங்கள் இழுத்த இழுப்புக்கு, அந்தப் பெண்ணைக் கொண்டு வரலாம் என நினைத்து, அனாதையான என்னைத் தேடி பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள்.

“கல்யாணம் நடந்த அன்று, முதலிரவுக்குப் போகுமுன், ஒரு வெள்ளைதாளில் முதலிரவு அன்று நான் எப்படி நடக்க வேண்டும்; எந்த நேரத்தில் எப்படி நான் உடலுறவு கொள்ள வேண்டும், எப்படிச் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும், என்று அறிவுறுத்தி, அப்படி அவர்கள் கொடுக்கும் அந்தக் காகிதத்தில் உள்ளபடி நடந்து கொண்டால், ஆண் குழந்தை, அழகாக அதுவும் புத்திசாலி தனமான பிள்ளை பிறக்கும் என்று சொல்லிவிட்டு, ஒரு நீண்ட கட்டுரை மாதிரி சில அந்தரங்க செய்கைகள் பற்றி அந்தத் தாளில் குறிப்புகள் இருந்தன.

“அப்படி அந்தத் தாளை தயார் செய்து கொடுத்தது மாமியார், மாமனார் மற்றும் என் கணவர். 'அதில் உள்ள படி தான் நீ நடக்க வேண்டும்' என்று கடுமையாக வேறு எச்சரித்து அனுப்பினார்கள்.

“அந்தரங்க விஷயங்களைப் பட்டியலிட்டு அதன்படி நடக்கக் கட்டாயபடுத்தி முதலிரவு அறைக்குள் அனுப்புவது பாவம் என்று இவர்களுக்குத் தெரியாதா? 'என்ன இது விசித்திரமானதும், முட்டாள்தனமான பழக்கமாக இருக்கே?' என்று நான் திருப்பிக் கேட்டதற்கு, 'குடும்பத்தின் சொத்துக்கள் ஒரு ஆண் பிள்ளை பிறந்தால் மட்டுமே பாதுகாக்கபடும். பெண் குழந்தை பிறக்க கூடாது. பெண் குழந்தைகளின் மூலம் பணம் விரைய செலவு தான் ஆகும். நாளைக்குக் கல்யாணம், பிள்ளைப் பேறுனு ஏகப்பட்ட செலவு வரும். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் ஜோசியர் சொன்ன அறிவுரைகள்படி செய்கிறோம்' என்றார்கள்.

“பெண் குழந்தையைப் பற்றி இப்படிக் கேவலமாகப் பேசும் இவர்கள் ஒரு பெண் இல்லாமல் எப்படி வந்தார்கள்? குழந்தை பாக்கியம் கிடைப்பதே கடவுளின் செயல்; அதில் ஆணென்ன பெண்ணென்ன என்றேன்.

“பத்தாவது மாதம் ஆண் குழந்தை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போய் நான் பெற்றது அழகான பெண் குழந்தை. வீட்டுக்கு மஹாலக்ஷ்மி பிறந்துள்ளாள் என்று வாதிட்ட போதும், கணவனும் அவர் பெற்றோர்களும் குழந்தையைக் கொஞ்சவில்லை. தொடர்ந்து  துன்புறுத்தல் தான்.

“கள்ளிப்பால் கொடுத்து குழந்தையைக் கொன்று விடுவார்களோ? என்று ஒரு கட்டத்தில் பயந்தேன். குழந்தை பிறந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்று என்னை மறுபடியும் முதலிரவு அன்று எப்படி என்னிடம் கட்டாய அறிவுரைகள் சொல்லி அனுப்பினார்களோ அது மீண்டும் தொடர்ந்தது.

“என்ன மனிதர்கள் இவர்கள்? வெறுப்பின் உச்சிக்கு போன நான் ஒரு கட்டத்தில் அந்த வீட்டை விட்டு வெளிய வந்தேன். குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து மனு கொடுத்து அஞ்சு வருடம் ஆகிறது! எந்த முறையில் தள்ளி போக வைக்க முடியுமோ அப்படிச் செயல்பட்டார்கள் அவர்கள்.

“விவகாரத்து ஆனால் தான், ஜீவனாம்சம் என்று சொல்லி கொடுக்க மறுக்கிறார். அது கூட எனக்கல்ல; என் குழந்தையை வளர்க்க பணம் வேண்டுமே. அதற்காகத்தான்.

“எனக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கூட வாதிட்டேன். ஒங்க எதிர்பார்ப்பும் நடக்கலாம் அல்லவா என்றேன்.

“இல்லை! அது சாத்திய மில்லை! ஜோசியர் அறிவுரைபடி என் ஜாதகப்படி மட்டுமே அந்தப் பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கணவர் தினமும் நான் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்துத் தொந்தரவு தருகிறார். இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண், அதுவும் ஒற்றைப் பெற்றோர் ஆக இருப்பது எவ்வளவு கடினம். பாதுகாப்பற்ற சமூகம் இது.

“இராமன் தன் மனைவியைச் சந்தேகிக்கிறான். தீயில் இறங்கி தான் பத்தினி என்பதைச் சீதா சொல்கிறாள். அதையும் நம்பாமல் , ஊராரின் சந்தேகத்தைக் காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை, வனத்தில் தள்ளுகிறார் ராமன்; அங்கேயே குழந்தைகள் பெற்றுக் குழந்தைகள் வளர்நத பின் சீதா மடிகிறாள்.

*இது ராமாயணம்*

"ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக்கிழவன் செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியைப் பார்த்து 'நான் இவளோடு கூட வேண்டு' மென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்குக் கூலியாகத் தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறாள். தன் கணவனைத் தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.

*இது நளாயினி கதை*

"ராமாயணக் கதை, நளாயினி கதை மாதிரி நான் அவர்களுக்கு அடிமை மாதிரி இருக்க வேண்டும் என்று என்னைக் கொடுமைப் படுத்துகிறார்கள். நான் தமிழ் நாட்டில் பிறந்தவள். தன் கணவனைச் செய்யாத குற்றத்திற்காகக் கொலை செய்து விட்ட அரசை, தன் கோபதீயால் மதுரை நகரத்தையே எரித்தாள், கண்ணகி.

*இது சிலப்பதிகாரம் கதை*

"தன் கணவன் தன்னைக் கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான் என்று தெரிந்து, 'நீ என்னைக் கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்தக் கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு' என்று சொல்கிறாள்.

'அட அதனாலென்ன? தாராளமாகச் சுற்றி வா' என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.

*இது குண்டலகேசி*

“அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதைப் போதிப்பதுதான் தமிழ் இலக்கிய நாயகியின் வரலாறு. பெண்கள் வீரமானவர்கள்,உயர்ந்தவர்கள், எனப் பெண்ணியம் பாடாத பேசாத ஆண் வர்க்கம் உண்டோ?

“இருந்தும் ஏன் சில ஆணின் மனம் பெண்ணின் கண்ணியத்தைப் பறிக்கத் துணிகிறது? உதட்டளவில் பேசும் இவர்கள் மன உறுதி இல்லாதவர்கள். இவர்கள் உள்ளம், குழம்பிய ஒரு கடலுக்குச் சமம். மிருகங்களும் பறவைகளும் பிற ஜாதி மிருகங்களை அடிமை படுத்துவதில்லை. சிங்கதுக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது; ஒரு நாயோ கழுதையோ, நரியோ பன்றியோ கூட அடிமையில்லை என்கிற பொழுது, நான் மட்டும் இவருக்கு அடிமையாக இருக்கவேண்டுமா, தினமும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு? அது ஏன்?”

"இனி தேம்புவதில் பயனில்லை, தேம்பி தேம்பி இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவிலுள்ளீர்" என்கிற பாரதி பாட்டு எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. செயலில் இறங்கினேன்.

“எனவே தான் இங்குப் புகார் மனு தாக்கல் செய்தேன். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். யுவர் ஆனர். அவர்கள்  முதலிரவு அன்று எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை காகிதத்தில் எழுதிக் கொடுத்த கடிதம்  இதோ ஒங்க பார்வைக்கு."

ல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, அந்த கடிதத்தின் சாராம்சத்தை படித்தவர் “இந்தப் பெண்ணின் நிலைமை மிகவும் பரிதாப நிலையில் தான் உள்ளது. இதற்கு ஒங்க பதில் என்ன?" என்று சந்தீப்பை கேட்டபொழுது, அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. தன் அம்மா  மற்றும் ஜோசியர் பேச்சை கேட்டு தான் இப்படி நடந்து கொண்டதாக சொல்லவும், 

நீதிபதி, "இது மாதிரியான புகார் மனு இந்த மன்றத்தில் இது வரை வரவில்லை . இந்தப் புகார் Pre Conception and Prenatal Diagnostic Techniques PC and PNDT ACT இல் வருவதால் மாநில அரசு மற்றும் மத்திய அரசாங்கத்தின் கருத்துக்களைக் கேட்டவுடன் தீர்ப்பு வழங்கப்படும்..."

காலத் தாமதம் ஆனாலும் தகுந்த ஆதாரம் இருப்பதால் நிச்சயம் இந்தக் குற்றம் நிரூபிக்கப்படும். சந்தீப்புக்கும் அவன் பெற்றோர்களுக்கும், நிச்சயம் தண்டனை கிடைப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற ஆண் வர்க்கத்துக்கு ஒரு படிப்பினை ஆகப் போவது நிச்சயம் என்ற எண்ணத்தில் கோர்ட்டை விட்டு வெளியே கம்பீரமாக வந்தாள் விஜி தன் பெண்ணுடன்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT