Tamil Short Story 
மங்கையர் மலர்

சிறுகதை: தேநீர் இடைவேளை!

பாரதிமணியன்

வழக்கம்போல, காலை நேரத்து வேலைகளை பரபரப்பாக முடித்துவிட்டு, முன் அறையில் இருந்த சாய்வு நாற்காலியில் அசதியாக அமர்ந்தாள் மிருதுளா.

இந்த அபார்ட்மென்ட்க்கு அவள் குடிவந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. 13 தளங்கள் கொண்ட அந்தக் குடியிருப்பில், அவள் இருப்பது 10வது மாடி, இங்கே அவளுக்கு வாசலில் கோலம் போடும் வேலை ஒன்று மட்டும் இல்லை.

மற்றபடி காலையில் படுக்கையை, வீட்டை ஒழுங்கு படுத்தி, வாசிங் மெஷினில் அழுக்கு துணிகளைப் போட்டு, காலை டிபன் செய்து, மகனை ஸ்கூலுக்கும், கணவனை ஆபிசுக்கும் தயார் செய்து, மதிய உணவையும் அவர்களுக்கு சமைத்து கொடுத்து அனுப்பி விட்டு, பின்பு இரவு டிபனுக்கு மாவு அரைக்க தானியங்களை ஊறவைத்து விட்டு ...

“ஸ்ஸ்…ப்...ப்பா”

அவளுக்கு இப்பொழுது சூடா ஒரு கப் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

தினமும் காலையில் இந்த முதல்கட்ட வேலைகளைச் செய்துமுடித்ததும், ஒரு கப் காபியை குடித்துவிட்டு, அந்தச் சுவையை நாக்கில் நிற்கும் வரைக்கும்… சாய்வு நாற்காலியில் சற்று கண்கள் மூடி அயர்ந்து உட்கார்ந்திருப்பாள். அவள் இப்படி ஒரு தேநீர் இடைவேளையை எடுத்துக்கொள்வது தினசரி பழக்கமாகவே மாறி விட்டிருந்தது.

அவள் மெதுவாக எழுந்து சென்று, சமையல் மேடையில் இருந்த பால் பாத்திரத்தை எடுத்து, பாலை சூடு பண்ண பார்த்தாள். ஆனால், பால் கொஞ்சமாகதான் இருந்தது. அதில் ஆடையும் அதிகமாக இருந்தது.

இந்த பால் காபிக்கு ஆகாது என்று, பால் ஆடையை தனியே வடித்து, வெண்ணைக்கு எடுத்து வைத்துவிட்டு, வடிகட்டிய பாலை தயிருக்கு ஊற்றி வைத்தாள்.

நேற்று டிபார்ட்மென்ட் ஸ்டோர் போனபோது, பால் பாக்கெட் தீர்ந்துவிட, கணவரிடம் சொல்லி மாலையில் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவள், மறந்து விட்டாள்.

இங்கே அபார்ட்மெண்டில் இன்னும் பால், மளிகை சாமான் ‘டோர் டெலிவரி’ செய்ய யாரையும் அவள் ஏற்பாடு செய்துகொள்ளவில்லை.

'இப்பொழுது காபியோ அல்லது ஒரு டீயோ வைத்து, குடித்து ஆக வேண்டும்' என்று அவள் மனது நினைத்தது.

'அடடா... கொஞ்சமாக இருந்த அந்தப் பாலை தயிருக்கு ஊற்றாமல், கூட தண்ணீர் சேர்த்து, ஏலக்காய் தட்டி போட்டு டீ தயாரித்து இருக்கலாமே' என்று அவளுக்கு தாமதமாக தோணியது.

லேசாக அவளே தன் முன் நெற்றியில் தலையில் தட்டி, ‘ட்யூப் லைட்' என்று தன்னைதானே திட்டிக்கொண்டாள்.

இனி பால் வாங்க போகணும் என்றால், பத்து மாடி லிப்டில் கீழே பயணம் செய்து, பிறகு அவளுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, ஒரு தெரு தாண்டி போய்... அங்கிருக்கிற டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வாங்கி வர வேண்டும்.

'வேறு வழியில்லை' என்ற நினைப்போடு சட்டென நைட்டியில் இருந்து சுடிதாருக்கு மாறினாள். கலைந்து இருந்த தலைமுடியை சற்று ஒழுங்கு படுத்திவிட்டு, ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டு எடுத்து முன் நெற்றியில் பொருத்தி, கை பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வீட்டுக்கதவை நன்றாக சார்த்திவிட்டோமா என்று உறுதி செய்துகொண்டு, லிப்டில் இறங்கி, அவளுடைய ஸ்கூட்டி நிற்கும் இடத்துக்கு வந்தாள்.

தரை தளத்தில் 'கார்டன்' பகுதிக்கு போகும் பாதையிலிருந்து ‘குட்மார்னிங்’ என்று ஆலய மணி ஓசை போல ஒரு குரல் அவளை வரவேற்றது.

அந்தக் குடியிருப்பில், மிடில் கிளாஸ் ஸ்டுடன்ஸ்க்கு’ மேத்ஸ்’ டியூசன் எடுக்கும் மாதவி மேடத்தின் குரல்தான். ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை, நான்காவது மாடியில் குடி இருக்கிறார்கள்.

"குட்மார்னிங். என்ன மேடம் இப்பதான் மார்னிங் வாக்கிங்கா..!”

“ஆமா, என்னப்பா செய்றது. காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை டியூசன். அப்புறம் 8.30 மணி வரை வீட்டு வேலை முடிக்க சரியா இருக்கு. இப்படி எல்லா வேலையையும் முடித்த பிறகு ‘வாக்கிங்’ போறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. மனசுக்கும் ரிலாக்ஸா இருக்கு.!

'அவளுக்கு தேநீர் இடைவேளைபோல, அவங்களுக்கு நடை பயிற்சி.! எல்லா பெண்களும் இப்படி ஏதாவது ஒரு வழியில, அவங்க மன அழுத்தத்தை போக்கிக்க வேண்டி இருக்கிறது' என்று அவள் நினைத்துக்கொண்டாள்.

"நீங்க இத்தனை வருஷம் ஓடி ஓடி உழைச்சது போதுமே.! ரிடையர்மென்ட் ஆனபிறகும் ஏன் இந்த டியூசன், வீட்டு வேலையின்னு இழுத்து போட்டுக்கிட்டு சிரமப்படறீங்க."

"நம்ம மாதிரி குடும்பமே உலகமுன்னு இருக்கிற பெண்களுக்கு, இந்த ஓய்வு ஆபீஸ் வேலைக்குத்தானே ஒழிய அடுப்படிக்கு இல்லப்பா! அதுவுமில்லாம சும்மா இருந்தா... ஏதேதோ நினைப்புகள் வந்து, மனசுல கவலைகள் சேர்ந்துக்குது. இந்த டியூசன் எடுக்கறது கூட, பணம் சம்பாதிக்க இல்ல. அது என் மனசுக்கு பிடிச்ச வேலை. மனசு நல்லா இருந்தாதானே உடல் நிலையும் நல்லா இருக்கும்."

“ரொம்ப சரியா சொன்னிங்க மேடம். நானும் குடும்பமே உலகமுன்னு இருக்கிற ஆள்தான். குடும்பத்தில இருக்கிறவங்களுக்குன்னு எல்லா வேலையையும் முடிச்சிட்டு, எனக்குன்னு ஆசைப்பட்டு ரிலாக்ஸா ஒரு காபி...டீ குடிக்கலாமுன்னா, முடியலை.! பால் தீர்ந்துருச்சு. அதான் மளிகை கடைக்கு போறேன்.“

மிருதுளா சலிப்பாக வருத்தத்தோடு பேசிவிட்டு நகர ...

"இரும்மா… இந்த வயசுலயே இப்படி புலம்பி வருத்தப்படாத.! எப்பவும், எல்லா நேரமும் நமக்கு சாதகமா அமையாது. ஆனா, நம்ம மனநிலை சோர்வடையாம இருந்தா... எந்தச் சூழ்நிலையிலும் நமக்குச் சாதகமான ஒரு வழியோ வாய்ப்போ கிடைக்கும். மனம் இருந்தா மார்க்கம் உண்டு. புரியுதா?" என்று சொல்லி விட்டு கலகலவென சிரித்த மாதவி மேடத்தை பிரமிப்போடு பார்த்து, மிருதுளா புன்னகைத்தாள்.

"சரிங்க மேடம். வரேன் "

மிருதுளா அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழைந்து, பால் பாக்கெட் வைத்து இருக்கும் இடத்தைப் பார்த்தாள் . அங்கே பால் பாக்கெட் எதுவும் இல்லை.

அங்கே வேலை பார்க்கிற பெண்ணிடம் கேட்டால்…

“ஆமாம்மா, எல்லாம் காலி ஆயிடுச்சும்மா… இன்னைக்கும் பால் பாக்கெட் கம்மியாகத்தான் வந்தது. அடுத்த லோடு இன்னைக்கு சாயந்திரமாதான் வரும்.”.

"அடக் கடவுளே... இவ்வளவு தூரம் வந்தும், எனக்கு ஒரு பால் பாக்கெட் கூட கிடைக்கலையே. என்ன இது?! இன்னக்கி இப்படி ஒரே ஏமாற்றமா இருக்கே.?! எனக்கு இன்னைக்கு ஒரு டீ காபி குடிக்க கூட கொடுப்பினை இல்லயா..."

அவள் மனசும் உடலும் நொந்து... சோர்வோடு சுற்றிலும் பார்த்தாள்.

வந்ததுக்கு ஒரு பிரட் பாக்கெட்டும்..பழங்களும் வாங்கிட்டுப்போகலாம் என்று நினைத்தாள். அவள் மெல்ல நகர்ந்து பழங்களை எடுக்க போன பொழுது.. அவள் மனசுக்குள் ஒரு பல்பு எரிந்தது.

எப்பவும், எல்லா நேரமும் நமக்கு சாதகமா அமையாது. ஆனா, நம்ம மனநிலை சோர்வடையாம இருந்தா... எந்தச் சூழ்நிலையிலும் நமக்குச் சாதகமான ஒரு வழியோ வாய்ப்போ கிடைக்கும். மனம் இருந்தா மார்க்கம் உண்டு.

மாதவி மேடம் சொன்ன வார்த்தைகள், அவள் ஞாபகத்திற்கு வந்தது.

பிறகு அவள் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு, திரும்ப அவளுடைய அபார்ட்மென்ட்க்கு வந்தாள்.

அங்கேயிருந்த கார்டன் பகுதிக்கு முன்பு, சிமெண்ட் பெஞ்சில் மாதவி மேடம் சாய்ந்து உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவாறே போய் ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு, உற்சாகமாக நடந்து போனாள்.

அவள் அப்படி சந்தோசமாக நடந்துபோவதை, மாதவி மேடம் வியப்பாக பார்க்க… அவள் புன்னகையோடு கையசைத்து விட்டு, லிப்டை நோக்கி போனாள்.

அடுத்த சில நிமிடங்களில், மிருதுளா கொஞ்சம் சூடு நீரில் டீத்தூளை போட்டு கொதிக்க வைத்து.. தேவையான சர்க்கரை சேர்த்து... பால் சேர்க்காத ‘பிளாக் டீ’ தயாரித்தாள். பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து பாதியாக அறுத்து.. அதிலிருந்து சில சொட்டுகளை அந்த தேநீரில் விட்டாள்.

இப்போது மணமான மற்றும் உடலுக்கு நலமான 'லெமன் டீ' என்கிற எலுமிச்சை சேர்த்த தேநீரை… ஒரு கோப்பையில் எடுத்துக்கொண்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள்.

ஆவி பறக்கும் தேநீரை மெல்ல உறிஞ்சி ருசித்த பின்பு... அதன் சுவையை கண்கள் மூடி ரசித்தாள். அவள் மனதில் எதையோ ஒரு சாதித்த திருப்தி தெரிந்தது.

(குறிப்பு: இந்த கதைதேநீருக்கு சொல்லப்பட்டதாக எடுத்துக்கொள்வதைவிட… நம்மனநிலையை பாதிக்கும் சூழ்நிலை எதுவாகினும், சோர்வடையாமல் சிந்தித்தால், சாதகமான மாற்று வழிகள் பிறக்கும் என்ற வகையில் எடுத்துக்கொள்ளலாமே!")

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT