மங்கையர் மலர் என் வாழ்வில் வந்த தருணத்தை மறக்க முடியாது. நான் எழுதிய முதல் குறிப்பு ஒன்று 27 வருடங்களுக்கு முன்பு மங்கையர் மலர் பத்திரிகையில் வெளிவந்தவுடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதோடு அதற்காக ஒரு மங்கையர் மலர் இதழும், 25 ரூபாய் மணியார்டரும் வந்தது. பிறகு என்ன கேட்கவா வேண்டும்? தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு தடவை வாசகர்களுக்கு வைத்த போட்டியில் நடுவராகப் பங்கேற்றது வாழ்வில் மறக்க முடியாதது. அப்போது மஞ்சுளா ரமேஷ் அவர்கள் ஆசிரியராக இருந்தார். மதுரை ஹோட்டல் ஆர்த்தியில் வைத்து வாசகிகள் எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பார்த்துத் தேர்வு செய்தோம்.
பிறகு நிறையப் போட்டிகளில் பங்கு பெற்றுப் பட்டுப் புடவைகள், சமையல் போட்டியில் வெற்றி பெற்று மேஸ்ட்ரோ குக்கர்... இப்படி நிறையப் பரிசுகள் வாங்கி இருக்கிறேன். மணியார்டர் மூலமாகவும் பணத் தொகை பெற்று இருக்கிறேன். இன்னும் பெறுவேன்.
சமீபத்தில் பாலம் சில்க்ஸ் உடன் இணைந்து நடத்திய போட்டியில் 5000 ரூபாய்க்கான பரிசுக் கூப்பன் பெற்றது வாழ்வில் மறக்கவே முடியாத ஒன்று.