National Science Day
National Science Day 
செய்திகள்

2024 தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்!

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

தேசிய அறிவியல் தினம் நேற்று, (28.2.2024) நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இது பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களிலும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கோளரங்கம் போன்ற அரசாங்கத்தின் அறிவியல் நிறுவனங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் அறிவியல் கருத்தரங்குகள், அறிவியல் பட்டறைகள், மற்றும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

நேற்று நடந்த, தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டத்தில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முனைவர் ஜீதேந்தர் சிங், அறிவியல் முனைப்புகளுக்கு பல்வேறு திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லமையை உலகம் இன்று ஏற்றுக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். புதுத்தொழில்களுக்கான சூழல் இந்தியாவில் நன்றாக உள்ளது என்றும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான புதுத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்றும் கூறினார்.

கரியமில வாயு புகை இல்லாத இந்தியாவிற்கான இலக்காக 2070 ஆம் ஆண்டு உள்ளது என்றார். மருத்துவம், உயிரியல் தொழில்நுட்பம், விண்வெளி, உழவுத் தொழில் போன்றவற்றில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளன எனக் குறிப்பிட்டார்.

பின்னர், பேசிய இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், உழவுத் தொழில், நெசவுத் தொழில், உணவு கையாளுதல் துறைகளில், உள்நாட்டு தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைக் குறிப்பிட்டார்.

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணி...

சர். சந்திரசேகர வெங்கடராமன் (சர். சி.வி. ராமன்) பிப்ரவரி 28, 1928 ஆம் ஆண்டு, ராமன் விளைவினைக் கண்டறிந்தார். ராமன் விளைவு என்பது ஒளி , ஒரு ஊடுருவும் ஊடகத்தின் ஊடாக செல்லும்போது, அதன் அலைநீளம் மற்றும் ஆற்றலில் மாறுபாடுகள் உண்டாகின்றன என்பதை விளக்குகிறது.

1986 ஆம் ஆண்டு, தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பு கழகம்(National Council for Science and Technology Communication (NCSTC)), ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாளினை, தேசிய அறிவியல் தினமாகக்(National Science Day) கொண்டாட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்தது. அதனை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. 1987 பிப்ரவரி 28 ஆம் தேதி, முதன் முறையாக தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல், ஆண்டுதோறும் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் அறிவியல் சிந்தனை மற்றும் புத்தாக்கத்தில் மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தவும், ராமன் விளைவை கண்டுபிடித்ததை கொண்டாடும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வருடா வருடம், ஒரு கருத்தாக்கம்(theme) தேசிய அறிவியல் தினத்திற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருத்தாக்கம்: வளர்ந்த இந்தியாவிற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள். உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக இந்த கருத்தாக்கம் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT