செய்திகள்

56,000 தலைக்கவசங்களை தானம் அளித்த தலைக்கவச கொடைவள்ளல்!

ஜெ.ராகவன்

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி வரும் ராகவேந்திர குமார் என்பவர், ஆக்ரா-லக்னெள விரைவுச்சாலையில் தலைக்கவசம் அணியாமல் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் இரண்டுசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறார்.

“இந்தியாவின் தலைக்கவச மனிதர்” என்று செல்லமாக அழைக்கப்படும் ராகவேந்திர குமார், விரைவுச்சாலையில் காரில் செல்லும்போது, தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டும் நபர்களை வழிமறித்து நிறுத்தி அவர்களுக்கு புதிய தலைகவசத்தை வழங்கி சாலை விதிகளை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பான விடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாக வெளியாகியுள்ளது. அதில் ராகவேந்திர குமார், தலைக்கவசம் அணிந்து கொண்டு கார் ஓட்டுகிறார். சாலையில் தலைக்கவசம் இல்லாமல் அதிவேகத்தில் செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளை பார்த்தால், கையில் தலைக்கவசத்தை வைத்துக்கொண்டு சிக்னல் செய்து அவர்களை தடுத்து நிறுத்துகிறார். அவர்களிடம் “நான் உங்களை நீண்ட தூரத்திலிருந்தே கண்காணித்து வருகிறேன். நீங்கள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள். சாலை விதிகளை பின்பற்றாமல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது” என்று கூறி அவர்களிடம் ஒரு புது தலைக்கவசத்தை கொடுத்து அதை அணிந்து கொண்டு பயணிக்குமாறு வலியுறுத்துகிறார். மேலும் தனது காரின் பின்புற கண்ணாடியில் எழுதியிருக்கும் வாசகத்தை படித்தீர்களா என்றும் கேட்கிறார். காரின் பின்புற கண்ணாடியில், “தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்வது யமராஜனுக்கு விடுக்கும் அழைப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைக்கவசத்தை பெற்றுக்கொண்ட நபர் தமது பெயர் நிகில் திவாரி என்றும் எடாவாவை சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தலைக்கவசத்தை கொடுத்து உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார். அப்போது குமார் அவரிடம் “நமது பாதுகாப்பு நம் கையில்தான் உள்ளது” என்று கூறுகிறார்.

அந்த விடியோவின் கீழ் “லக்னெள விரைவுச்சாலையில் நான் 100 கி.மீ. வேகத்துக்கு மேல் கார் ஓட்டிச் செல்லமாட்டேன். என்னை ஒருவர் ஓவர்டேக் செய்யும்போது அந்த மனிதர் தலைவக்கவசம் அணியாமல் சென்றதை கவனித்தேன். உடனே வேறுவழியில்லாமல் காரின் வேகத்தை அதிகப்படுத்தி இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்தேன். அவரிடம் தலைக்கவசத்தை கொடுத்து சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகவேந்திர குமாரின் விடியோவை பார்த்த மும்பை போக்குவரத்து போலீஸாரும் அவரின் முயற்சியை பாராட்டியுள்ளனர்.

“நீங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய சேவை செய்து வருகிறீர்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தங்கள் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

“ராகவேந்திர குமாரின் செயல் எனது மனதை கவர்ந்துவிட்டது. அநேகமாக பலரையும் இது கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன்” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

டெயில்பீஸ்: ராகவேந்திர குமார், இதுவரை இந்தியா முழுவதும் 56,000 தலைக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 30 பேரை சாலைவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் தொடர்ந்து எடுத்துக்கூறி வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலைவிபத்தில் என் உயிர் நண்பனை இழந்தேன். உண்மை என்னவெனில் தலைக்கவசம் அணிந்து சென்றிருந்தால் அவரது உயிர் காப்பற்றப்பட்டிருக்கும். இதுதான் எனது சமூக சேவைக்கு தூண்டுதலாக இருந்த்து என்கிறார் ராகவேந்திர குமார்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT