செய்திகள்

நாட்டாண்மையின் தீர்ப்பினால் ஊரைவிட்டு ஓதுக்கிவைக்கப்பட்ட 4 குடும்பங்கள்: போலீஸில் புகார்!

சேலம் சுபா

“நாட்டாண்மை தீர்ப்பை மாற்றிச் சொல்லு” எனும் புகழ்பெற்ற நகைச்சுவை வசனத்தைக் கேட்டுள்ளோம். உண்மையில் நாட்டாண்மையின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்கள் தீர்ப்பை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கு தெரியுமா ?

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன எட்டிப்பட்டு மலை கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் முத்து பொன்னுசாமி மற்றும் உறவினர்கள் என நான்கு குடும்பங்களும் உண்டு. இந்த நிலையில் கடந்த  2018 ல் சின்னசாமி என்பவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் முத்து, பொன்னுசாமி ஆகிய இருவரையும் வேப்பங்குப்பம் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் நீதிமன்றத்தால் அவர்கள் விடுதலையும்  செய்யப்பட்டனர்.

எனினும் சிறைக்குச் சென்று வந்ததால் சின்ன எட்டுப்பட்டி கிராமத்தின் ‘ஊரான்’ என அழைக்கப்படும் நாட்டாமை பழனி என்பவர் முத்து, பொன்னுசாமி ஆகியோர் அவரின் குடும்பத்தினருக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் என அனைத்து உறவினர்கள் என நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மலை கிராம மக்களின் வழக்கப்படி அவரது உத்தரவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நடைமுறைப்படுத்துவது வழக்கம். இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நான்கு குடும்பத்தினரும் வயல் காட்டில் ஒதுங்கி பொதுமக்களுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் வனவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னுசாமியின் மகனுக்கு திருமணம் செய்த முயன்றபோது ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் தடை ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரில் தங்களை சேர்த்துக் கொள்வதற்காக நாட்டண்மையிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு போய் கேட்டுள்ளனர். அப்போது உங்கள் நான்கு குடும்பங்களையும் ஊரில் சேர்த்துக் கொள்ள குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் விதம் ரூபாய் 6 லட்சம் கட்ட வேண்டும் என அவர் நிபந்தனை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு  கண்ணீர் மல்க வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் நீதிமன்றமே குற்றவாளி அல்ல என தீர்ப்பு கூறிவிட்டது. ஆனாலும் செய்யாத குற்றத்திற்காக எங்கள் நான்கு குடும்பத்தையும்  கடந்த ஆறு ஆண்டுகளாக ஊரை விட்டு ஊரான் ஒதுக்கி வைத்துள்ளார். அதனால் கைக்குழந்தைகளுடன் வயக்காட்டில் கடும் சிரமப்பட்டு வருகிறோம். 6 லட்சம் கொடுத்தால் மட்டுமே ஊருக்குள் வரவேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

விளை நிலங்கள் வழியாக நடந்து சென்றால் முள்வேலி போட்டு பாதையை அடைத்து விடுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்வது கூட சிரமமாக உள்ளது. எனவே நாட்டாமை ஊரான் பழனியை கைது செய்து எங்களுக்கு ஒரு விடிவு காலத்தை காட்ட வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதன் பேரில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். இங்குள்ள 84 கிராமங்களில் முதன்முறையாக நாட்டாண்மை மீது இவர்கள் புகார் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டாண்மை தீர்ப்பு மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

கவிதை: அவளுக்கென்று ஒரு மனம்!

பித்தப்பை கற்கள் உருவாவதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

SCROLL FOR NEXT