Jammu And Kashmir Election Img Credit: Moneycontrol
செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் 60% ஓட்டுப்பதிவு: அமைதியாக நடந்த தேர்தல்!

தா.சரவணா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370 வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. பின் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுகள் கழித்து ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 8 நடக்கிறது. 24 தொகுதிகளுக்கான ஓட்டு பதிவு நேற்று நடந்தது.

காஷ்மீரில் 16 தொகுதிகள், ஜம்முவில் எட்டு தொகுதிகள் இதில் அடங்கும். இந்த 24 தொகுதிகளில் மொத்தம் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 3,276 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 14,000 பேர் தேர்தல் பணிகள் ஈடுபட்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்பதிவு செய்தனர். ஜம்மு - காஷ்மீரில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் மக்கள் மிக உற்சாகமாக ஓட்டளித்தனர். முதல் கட்ட தேர்தலில் புலம் பெயர்ந்த காஷ்மீர் பாண்டியன் சமூகத்தினர் 35,500 பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக ஜம்முவில் 19 உதம் பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தலை பாகிஸ்தான் ஆதரவுடன் சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டுப்பதிவு நடந்த 24 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிகளில் போலீசார் உடன் துணை ராணுவ படையினரும் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி முதல் கட்ட தேர்தலில் 60% பதிவாகி இருந்தன. கடுமையான குளிர் நிலவி வரும் சூழலில், எவ்வித சர்ச்சையும், பிரச்சனையும் இல்லாமல் ஓட்டுப்பதிவு நடந்ததாக யூனியன் பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடப்பது முன்னிட்டு நேற்று காலை எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, 'ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிக அளவில் ஓட்டளித்து, ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள், தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு வரும் 25ஆம் தேதி நடக்கிறது. அதனால் இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் கமிஷன் முழு வீச்சில் செய்து வருகிறது. முதல் கட்ட தேர்தலில் காணப்பட்ட சிறு, சிறு குறைபாடுகள் களையப்பட்டு, 2 மற்றும் 3 கட்ட தேர்தலில் எவ்வித குறைபாடு இல்லாமல் நடத்தவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சரி செய்ய முடியாத குறைபாடு என்னவெனில், இங்கு காணப்படும் கடும் குளிராகும். இது இயற்கையானது என்பதால், அந்த மக்களுக்கு அது பழகி போனதும் என்பதால் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் தேர்தல் பணிக்காக பிற இடங்களில் இருந்து இங்கு வந்துள்ள அரசு ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இருந்த போதிலும், ஓட்டுச் சாவடிக்கு வரும் முதல் முறை வாக்காளர்களை வரவேற்று, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தேர்தல் அதிகாரிகள் நடந்து கொள்வது முதல் முறை வாக்காளர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT