தனது தொலைந்து போன ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிக்க தானே ஒரு டிடெக்டிவாக மாறியுள்ளார் ஒரு தமிழர். அவர் என்ன செய்தார்? எப்படி தனது தொலைந்து போன ஸ்மார்ட்போனைக் கண்டுபிடித்தார் என்பது பற்றிய சுவாரசிய பதிவுதான் இது. குறிப்பாக ஸ்மார்ட்போன் பயனர்கள் கட்டாயம் இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
நாம் எங்கேயாவது வெளியில் செல்லும்போது, நாம் எடுத்துச் செல்லும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம். என்னதான் நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும், திருடர்கள் நம்மை ஏமாற்றி கணப்பொழுதில் நமது பொருட்களை திருடி விடுவார்கள். அப்படிதான் ரயிலில் பயணித்த நபரின் உடைமைகள் மற்றும் ஸ்மார்ட்போன் திறப்பட்டுள்ளது. இவர் நாகர்கோவிலில் இருந்து திருச்சி வரும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
நம்முடைய பொருள் ஏதாவது தொலைந்து போனாலே அது மோசமான அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் இந்த நபர் சற்றும் மனம் தளராமல், போனில் இருக்கும் கூகுள் மேப் உதவியுடன், டிடெக்டிவாக மாறி தனது ஸ்மார்ட் போனைக் கண்டுபிடித்துள்ளார்.
சமீபத்தில் ராஜ் பகத் என்பவரின் தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு பயணித்துள்ளார். அப்போது நள்ளிரவு மூன்று மணி அளவில் அவரது உடைமைகள் திருடப்பட்டுள்ளது. ரயில் முழுவதும் தேடிப் பார்த்தும் எதுவும் கிடைக்காததால், உடனடியாக தன் மகன் ராஜ் பகத்தை அருகில் இருந்த பயணியின் மொபைல் எண்ணிலிருந்து அழைத்து விபரங்களைக் கூறியிருக்கிறார். ராஜ் பாகத்தும் உடனே ஸ்மார்ட் போனில் இருக்கும் ‘பைண்ட் மை டிவைஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி அதைக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா என முயற்சித்துள்ளார்.
அச்சமயத்தில் ராஜ் பகத் தந்தையின் ஃபோனில் லொகேஷன் ஷேரிங் ஆன் செய்யப்பட்டிருந்ததால், ஸ்மார்ட் போன் தற்போது எங்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் மற்றொரு ரயிலில் ஸ்மார்ட்போன் இருப்பதை கூகுள் மேப் தெளிவாகக் காட்டியது.
உடனடியாக ராஜ் பகத் அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளை அழித்துக் கொண்டு உடனடியாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்குச் சென்றார். கூகுள் மேப் செல்போன் இருக்கும் இடத்தை தெளிவாகக் காண்பித்தாலும், ரயில் நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நபர்களில் யாரிடம் ஃபோன் உள்ளது என்பதை இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் அவர்கள் பொறுமையாக கண்காணித்ததில் ஸ்மார்ட்போன் லொகேஷன் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் நோக்கி நகர்வதைத் தெரிந்து கொண்டனர். உடனடியாக பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்கு சந்தேகப்படும்படி யார் இருக்கிறார்கள் என டிடெக்டிவ் போல நோட்டமிட்டதில், தனக்கு இரண்டடியில் அந்த ஸ்மார்ட்போன் இருப்பதாக லொகேஷன் ஷேரிங்கில் காட்டப்பட்டுள்ளது. அப்போது ராஜ் பகத் CITU லோகோ பொறிக்கப்பட்ட தனது தந்தையின் பையை ஒருவர் எடுத்துச் செல்வதைப் பார்த்தார்.
கூகுள் மேப்பும் அந்த நபர் இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டியதால், பையை எடுத்துச் சென்ற நபரை வளைத்துப் பிடித்து, ராஜ் பகத்தின் தந்தை ரயிலில் தவறவிட்ட பொருட்களை பேருந்து நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர்.