பால் உற்பத்தி குறைவு காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். தற்போது பால் தட்டுப்பாட்டை சரிசெய்து விட்டோம், என தூத்துக்குடியில் ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் நாசர் கூறினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 38 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில் கடந்த ஒரு வாரமாக 28 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே வினியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பல பகுதிகளில் காலதாமதமாகவே பால் இறக்குமதி செய்யப்பட்டு காலை 9 மணிக்கு பிறகு வினியோகம் நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது. இது பொது மக்களிடையே பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார்.தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் அமைச்சர் நாசர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.அவர் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்தினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன், பொது மேலாளர்கள் ராஜ்குமார் (தூத்துக்குடி), தியானேஷ் பாபு (நெல்லை) மற்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பால் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் பால் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், பால் உற்பத்தி குறைவு காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிவித்தார். பால் தட்டுப்பாடு பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்தில் ஏற்பட்ட சிறிய மாற்றங்களால் சில இடங்களில் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகு பால் வினியோகம் செய்யப்படுவதால் பால் அளவு குறைவாக இருப்பது என்று சொல்வது தவறான தகவல். கலப்படம் இன்றி பால் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் சேவைக்காக ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறதே தவிர, லாபத்திற்காக அல்ல என தெரிவித்தார் .