செய்திகள்

உள்வாங்கிய கடல்; மீட்கப்பட்ட சிலைகள்!

கல்கி டெஸ்க்

முருகப்பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியாக முருகன் அருள்புரியும் கடலை ஒட்டி அமைந்த திருத்தலம் இது. வருடம் முழுக்க இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இங்கே வருகை தருகின்றனர். இம்மாதம் 5ம் தேதி இக்கோயிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நவமி தினத்தை முன்னிட்டு இந்தக் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது மதியம் 12 மணி அளவில் கடல் திடீரென 25 அடி தொலைவுக்கு உள் வாங்கியது. ஆனாலும், பக்தர்கள் எந்தவித பயமோ, பதற்றமோ இன்றி கடலில் புனித நீராடினர். கடல் உள் வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள் தெளிவாகத் தெரியத் தொடங்கின. அப்போது பக்தர்கள் சிலர் அந்தப் பாறைகளின் இடையே கிடந்த சங்கு மற்றும் சிப்பிகளை சேகரித்து மகிழ்ந்தனர்.

அது மட்டுமின்றி, சிதிலமடைந்த சிலைகளை கோயில்களிலோ வீடுகளிலோ வைத்திருக்கக் கூடாது என்பது ஐதீகம். அதுபோன்ற சேதமடைந்த சிலைகளை கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பக்தர்கள் விட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று திருச்செந்தூர் கடல் உள் வாங்கியதால் கடலில் போடப்பட்டிருந்த சிதிலமுற்ற பைரவர் மற்றும் நந்தி பகவான் சிலைகள் வெளியே தெரிந்தன. அவற்றை பக்தர்கள் கொண்டு வந்து கரையில் வைத்து வணங்கினர்.

வழக்கமாக, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். அதேபோல்தான் நேற்று நவமியை முன்னிட்டு கடல் உள் வாங்கி இருக்கலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு கடல் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியது. கடல் அலைகள் மீண்டும் கரையைத் தொட்டுச் சென்றன.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT