இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து, கனடாவிலும் அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் டிக் டாக் செயலிகு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது நிச்சயம். இந்நாடுகளின் வியாபார சந்தைகள் என்பது மிகப் பெரியது.
பெருவாரியான மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட சமூக வலைத்தளங்களில் டிக் டாக் செயலிலும் மிக முக்கியமான ஒன்று. இந்தியாவில் மிக பிரபலமாக இருந்த இந்த டிக்டாக் செயலி அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி இந்தியா, பாக்கிஸ்தான், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு உலக மக்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் செல்போன்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் டிக் டாக் செயலி மூலம் தனி மனித சுதந்திரத்தின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் களமாகவும், அநாகரீகமான, ஆபாசமான நிகழ்வுகளை சின்ன ,சின்ன வீடியோக்களாக பதிவேற்றம் செய்து பிரபலமாக்கும் தளமாகவும் இருந்து வருவதாக பல குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.
தற்போது இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களிலும் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்தது கனடா அரசு. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக சில உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சி.என்.என். வெளியிட்டுள்ள அறிக்கையில் ,டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்குவதாகவும், டிக்டாக் செயலிக்கான தடை இன்று (28.02.23) முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கனடா அரசு செயலகத்தின் கருவூல வாரிய தலைவர் மோனா ஃபோர்டியர் கூறுகையில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்குவதில் இருந்து தடுக்கப்படும். பயன்பாட்டின் தற்போதைய நிறுவல்கள் அகற்றப்படும். “தனியுரிமை பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை டிக்டாக் செயலி அளிக்கிறது” என்று கனடாவின் தலைமை தகவல் அதிகாரி தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார்.