பிரபல நடிகை நக்மாவிடம் ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பறித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த மெகா மோசடியில் நடிகை நக்மாவும் சிக்கி கொண்டதாக தெரிகிறது. தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் பிரபல நடிகை நக்மா.
தற்போது ஆன்லைன் மோசடியில் பிரபல நடிகை நக்மா சிக்கி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருக்கும் தகவல் வெளியானது. இதுகுறித்து நக்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நக்மாவின் செல்போனுக்கு வங்கியின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு ஒரு மெசேஜ் லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை க்ளிக் செய்தபோது, அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கியிலிருந்து பேசுவதாகவும், கே.ஒய்.சி விவரங்களை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனே மோசடிப் பேர்வழி நக்மாவின் போனை ஹேக் செய்து அவரது இன்டர்நெட் பேங்கிங் கணக்கைத் திறந்து அதிலிருந்து 99,998 ரூபாயை வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றி விட்டார். அந்த நபரிடம் நக்மா எந்த விவரத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், பணம் பறி போனதாக நக்மா தெரிவித்துள்ளார்.
மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதனை நம்பிய வாடிக்கையாளர்களும் லிங்கை கிளிக் செய்ய, அடுத்தக் கணமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது போல் குறுஞ்செய்திகள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. மூன்று நாட்களுக்குள் லட்சக்கணக்கான ரூபாய் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் குவிந்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாணையைத் தீவிரப்படுத்தினர். வங்கிகள் பெயரில் வரும் போலி லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.