செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு - தி.மு.க. MP ஆ.ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

கல்கி டெஸ்க்

திமுகவை சேர்ந்தவர்  ஆ.ராசா.  இவர் 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சராக இருந்தவர். தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற திமுக உறுப்பினராக இருப்பவர்.  

சென்னை: கோவையில் உள்ள ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் பினாமி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததையடுத்து, அவர் மீது 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூரில் ஆ.ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி, ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமது பதவியையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கடந்த 2015 ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், லஞ்சமாகப் பெற்ற பணத்தை ஆ.ராசா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் தொடங்கிய பினாமி நிறுவனம் மூலம் வருமானமாக கணக்கு காட்டியதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனம் ஆரம்பத்தில் இருந்து எந்த ஒரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிறுவனத்தில் பெறப்பட்ட முழு பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் இருந்து லஞ்சமாக பெறப்பட்டது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குபதிவு செய்து, விசாரணையை நடத்தியது. 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, குருகிராமில் உள்ள இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை ஆ.ராசா வழங்கியதும், அதற்காக அந்நிறுவனம் ஆ.ராசாவுக்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

 அப்போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

 அதன்படி, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT