நேர்காணலில் மூன்று சுற்றுகளிலும் தகுதி பெற்றும் இளம் பெண் ஒருவர் அற்ப காரணத்திற்காக நிராகரிக்கப் பட்டுள்ளார். அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, நமது சமூகத்தில் நேர்காணலில் நடக்கும் பல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
தற்போதிருக்கும் காலத்தில் ஒருவர் முறையாகப் படித்து முடித்து வெளியே வந்து, வேலை தேடி அலையும் இளவயதினரின் கஷ்டங்கள் பற்றி யாரும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. கல்லூரிப் படிப்பை முடித்த பல லட்சம் இளைஞர்கள் வேலையின்றி சுற்றித் திரிகிறார்கள். தினசரி, இன்று நமக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்கள். இதில் நேர்காணலை சந்திக்கும் இளைஞர்கள் பலர், அற்ப காரணங்களுக்காகவும், சம்பந்தமே இல்லாத கேள்வியைக் கேட்டு நிராகரிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற பல நிகழ்வுகளை நாம் கேள்விப் பட்டிருப்போம், அல்லது நாமேகூட அந்த சூழ்நிலையில் இருந்திருப்போம்.
இதே போலத்தான் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, நேர்காணலை வெற்றிகரமாக முடித்தும் முரண்பாடான காரணத்தைச் சொல்லி ஒரு நிறுவனம் நிராகரித்திருக்கிறது. அவர்கள் நிராகரித்தது கூட பிரச்சனையில்லை, ஆனால் அவர்கள் கூறிய காரணம் அந்தப் பெண்ணின் நிறத்தைப் பற்றியதாக இருப்பதால், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பிரதிக்ஷா என்ற இளம் பெண் கடந்த வாரம் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் நேர்காணலுக்குச் சென்றுள்ளார். அந்த நிறுவனம் நடத்திய மூன்று சுற்று நேர்காணலிலும் சிறப்பாக செயல்பட்டு தகுதி பெற்று, அவர்கள் கொடுத்த அசைன்மென்ட்டை மிகச்சரியாக செய்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தனக்கு ஈமெயிலில் ஆஃபர் லெட்டர் வரும் என காத்திருந்த அப்பெண்ணுக்கு நீங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டீர்கள் என்ற இமெயில் வந்து அதிர்ச்சியளித்திருக்கிறது.
அவர் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டார் என்ற காரணத்தைப் படித்ததும், உடனடியாக தனது LinkedIn பக்கத்தில் அதைப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "என்னுடைய நேர்காணலில் மூன்று சுற்றுகளிலும் வெற்றிபெற்று இறுதியில் நான் நிராகரிக்கப்பட்டேன். அவர்கள் கொடுத்த அசைன்மென்ட்டை சரியாக செய்தும் அந்தப் பணி எனக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், நான் வேலை செய்யப்போகும் டீமில் இருக்கும் நபர்களை விட எனது நிறம் அழகாக இருக்கிறதாம். எனவே அந்த டீமில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது என்பதால் என்னை நிராகரித்துவிட்டனர். இந்தக் காரணம் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. நாம் எப்படிப்பட்ட உலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது. நமது நாட்டில் நிலைத்தன்மை, சம உரிமை, பன்முகத்தன்மை பற்றி எல்லாம் பேசுகிறோம். ஆனால் மதம், நிறம், அவர்களின் நம்பிக்கை அடிப்படையில் மக்களை மதிப்பிடுகிறோம். இந்த உலகம் பல விஷயங்களில் தற்போது முன்னேறிவிட்டது. இந்தப் பதிவை படிப்பவர்கள் தகுதியும் திறமையும் உடையவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உங்களது கலாச்சாரத்தை மாற்ற முயற்சியுங்கள். இங்கு சிறந்து விளங்கும் பல நிறுவனங்கள் திறமையான தலைவர்களால் உருவாக்கப்படுவதில்லை. இனம், மதம், மொழி, பின்புலம், கலாச்சாரம், போட்டி ஆகியவற்றைக் கடந்து திறமையால் உழைக்கும் ஊழியர்களாலேயே உருவாக்கப்படுகிறது" என அந்தப் பெண் பதிவிட்டுள்ளார்.
இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நமது சமூகத்தில் இருக்கும் பிரிவினைவாதத்தை தோலுரிக்கும் வகையில் இவரின் பதிவு அமைந்திருக்கிறது.