கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இன்று (ஏப்ரல் 13) வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பாஜக 23 வேட்பாளர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர் நாகராஜா சாபி கல்கத்கி தொகுதியில் போட்டியிடுகிறார். “கோலார் தங்கவயல்” பாஜக வேட்பாளராக அஷ்வினி சம்பங்கி களமிறங்கினார்.
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
எனினும் ஆளும் பாஜகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நிலை நீடித்தன. வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பாஜகவின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக பாஜகவின் 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். மேலும், 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை கர்நாடக பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. இதைத்தவிர இன்னும் 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.