ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் உட்கட்சி மோதல் ஒரு பக்கம் இருக்க, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற அளித்த உத்தரவின் பேரில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வமும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு பாஜக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே ஒற்றை வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிவந்த அண்ணாமலை அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருவரையும் தனித்தனியாக அழைத்து பேசினார். முடிவு எட்டப்படாத நிலையில் இடைத்தேர்தல் குறித்த தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.
தற்போது உச்சநீதி மன்றம் அளித்த உத்தரவுப்படி இபிஎஸ் வேட்பாளர் தென்னரசுவுக்கு 90 சதவிகிதம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிருபித்த இபிஎஸ், தங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில் நிற்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும், திரு.கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி, தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி, இனி வரும் தேர்தல் வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய வேண்டும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரிகள் வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் போட்டியிடும் தென்னரசு அவர்களுக்கு நல்வாழ்த்துகளையும், பாஜகவின் நல்லாதரவையும், தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.