தமிழகத்துக்கு காவிரியில் இருந்து மாதாமாதம் குறிப்பிட் அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அதன்படி கடந்த கடந்த 9ம் தேதி வரை 37.9 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்க கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை கர்நாடக அரசு வெறும் 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம், மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாடுக்கு வழங்க வேண்டிய 38 டிஎம்சி தண்ணீரை உடனே கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, இந்தத் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
முன்னதாக, இந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, "தமிழ்நாட்டில் கடந்த 9ம் தேதி நிலவரப்படி 37.9 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த விஷயத்தை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்திலும், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்ததால்தான் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்" என்றார்.