செய்திகள்

‘இளைய நிலா’ பாடலுக்கு கிட்டார் வாசித்த சந்திரசேகர் மறைவு!

கல்கி டெஸ்க்

1982ம் ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படம், ‘பயணங்கள் முடிவதில்லை.’ இந்தப் படத்தில் நடிகர் மோகனும் நடிகை பூர்ணிமாவும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற, ‘இளைய நிலா பொழிகிறதே’ என்ற பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இருந்தார். அந்தப் பாடலில் எஸ்.பி.பி.யின் குரலுக்கு நிகராக கிட்டார் வாசித்து பெரும் புகழ் பெற்றார் கிட்டாரிஸ்ட் சந்திரசேகர். அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 79. இந்தப் பாடல் மட்டுமின்றி, தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கும் இவர் கிட்டாரிஸ்டாகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இசைக் குழுவில் இடம் பெற்றிருந்த சந்திரசேகர், அதற்கு முன்பு இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் ஆகியோரிடமும் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார். மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரஜினி ஆகியோர் இணைந்து நடித்த, 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த 'வசந்த கால நதிகளிலே…' பாடலில் மௌத் ஆர்கன் வாசித்து பிரபலமானவர் சந்திரசேகர்.

தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் பட இசையமைப்புகளில் கூட இவர் பணியாற்றி உள்ளார். பிரபல இந்தி இசையமைப்பாளர்கள் ஆர்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் மற்றும் பப்பி லஹரி போன்றோருக்கு மிகவும் பிடித்தமான இசைக் கலைஞர் சந்திரசேகர். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று மறைந்தது திரைத்துறையினரை மட்டுமின்றி, இசை ஆர்வலர்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைக்கு பலரும் தங்களது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT