செய்திகள்

சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கான சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

கல்கி டெஸ்க்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கான சுத்திகரிப்பு ஆலையை 187.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் .

இந்நிகழ்ச்சியில் திரு. டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ச. கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருமதி எ. சுந்தரவல்லி இ.ஆ.ப., செயல் இயக்குநர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் உடனடியாக தொடங்கிட ஏதுவாக தொழில் வாய்ப்புள்ள பகுதிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை ஏற்படுத்தி, பராமரித்து வருகிறது.

இந்நிறுவனம் இதுநாள் வரை 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற் பூங்காக்களை, மொத்தம் 38 ஆயிரத்து 538 ஏக்கரில் ஏற்படுத்தி உள்ளது. இத்தொழிற் பூங்காக்களில் தற்போது வரை 3 ஆயிரத்து 142 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு செய்து, 7 இலட்சத்து 56 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கான சுத்திகரிப்பு ஆலை (TTRO Plant) நிறுவும் இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் 15 மாதங்களில் நிறைவு பெற உள்ளது . இத்திட்டத்தின் மூலம் 2092 ஏக்கரில் அமைந்துள்ள ஒசூர் சிப்காட் தொழிற்பூங்கா, 989 ஏக்கரில் அமைந்துள்ள சூளகிரி சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் ஓசூர் மண்டலத்தில் 1800 ஏக்கரில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பயன்பெறும். இதனால், இப்பகுதியில் நிலத்தடிநீரும், மேற்பரப்பு நீரும் பாதுகாக்கப்படும்.

மேலும், இதன்மூலம், இத்தொழிற் பூங்காக்களில் புதிய தொழிற்சாலைகள் அமைந்திட வாய்ப்பு ஏற்பட்டு, கூடுதலாக 6,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வழிவகை ஏற்படும்.

சிப்காட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து திருவண்ணாமலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 537 பள்ளிகளுக்கு பலசெயல்பாட்டு அச்சுப்பொறிகளை (Multi Functional Printers) கொள்முதல் செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை வர்த்தகத் துறை அமைச்சர் திரு டி.ஆர்.பி. ராஜா அவர்கள் வழங்கினார்.

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT