சீனர்கள் பல புதிய விஷயங்களை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சமீபத்தில் அவர்கள் கண்டுபிடித்த புதிய விஷயம் பலருக்கு ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.
தற்போது உலகில் வரும் மாற்றங்கள் மிகவும் வேகமாகவே இருக்கிறது. குறிப்பாக குடும்ப முறையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடும்ப முறையுடன் ஒப்பிடும்போது, தற்போது நாம் முற்றிலும் வேறுபட்டதாக வாழ்ந்து கொண்டிருக் கிறோம். அதிலும் இந்தியாவைக் காட்டிலும் பல உலக நாடுகளில் இது வித்தியாசமாகவே மாறிவிட்டது. அதிலும் சிங்கிள் பெற்றோர் எனப்படும் ஆண்களின் துணையின்றி பெண்களே குழந்தையை வளர்க்கும் முறை, பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சிங்கிள் பெற்றோரை குறிவைத்து சீனாவில் ஒரு புதிய பிசினஸ் மாடல் உருவாகியுள்ளது. அதுதான் வாடகைத் தந்தை பிசினஸ்.
முன்பெல்லாம் வீடுகள் மட்டுமே வாடகைக்கு கிடைக்கும். ஆனால் இப்போது கார், பைக், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே வாடகைக்கு கிடைக்கிறது. ஆனால் சீனாவில் இந்த வாடகை கான்செப்ட் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது. அதாவது அவர்கள் அப்பாக்களையே வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். சிங்கிள் மதராக இருந்து குழந்தையை வளர்க்கும் பெண்களுக்கு உதவும் வகையிலேயே, இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிங்கிள் பெற்றோராக இருப்பவர்கள் எல்லா நேரமும் குழந்தையைப் பார்த்துக் கொள்வது கஷ்டமாக இருக்கும். இதிலிருந்து அவர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கவே இந்த வாடகைத் தந்தை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாக்கள் தங்களுக்குப் பிடித்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், இந்தச் சேவையை பெற சிறுவர்களுக்கு வயது வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப் படவில்லை. அதே நேரம் வாடகைத் தந்தையாக வருபவர்கள் ஏதாவது பயிற்சி பெற்றுள்ளனரா என்ற தகவலும் இதில் இல்லை. இருப்பினும் இதை அங்கே பெரும்பாலானவர்கள் வரவேற்கின்றனர். சிங்கிள் தாய்மார்களும் கொஞ்ச நேரம் அவர்களுக்குப் பிடித்தபடி நேரத்தை செலவிடுவதற்கு இந்த திட்டம் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு தரப்பினர், இந்த முறையை முற்றிலுமாக வெறுக்கின்றனர். ஏனென்றால், யாரென்று தெரியாத நபர்களை நம்பி எப்படி குழந்தைகளை விட்டுச்செல்ல முடியும் என்பதுதான் அவர்களின் சந்தேகமாக இருக்கிறது. இருப்பினும் இந்த வித்தியாசமான பிசினஸ் முறையைப் பற்றி கேட்கும்போது, நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை.