செய்திகள்

கோவையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு - 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

கல்கி டெஸ்க்

மதுரை சிறை வார்டர் ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் அபுதாகீர். இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அபுதாகீர்(42). இவர், கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மதுரை சிறை வார்டர் ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அபுதாகீருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அபுதாகீர் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலை பெற்றார். மற்றொரு வழக்கான மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு முடக்குவாதம் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறைத்துறை சார்பில் அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அபுதாகிரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அவருக்கு நிரந்தர பரோல் அளிக்கப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவருடைய உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் இருந்து அபுதாகிரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வின்சென்ட் சாலை, குட்ஷெட் சாலை, புரூக் பாண்ட் ரோடு வழியாக பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் பள்ளி வாசல் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு இருக்கும் கபர்ஸ்தானில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அபுதாகிரின் உடல் ஆம்புலன்சில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டபோது, அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.  

இதையொட்டி கோவையில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, வருகிற 14-ந் தேதி கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தினம் என்பதாலும், ஆயுள்தண்டனை கைதி பரோலில் இருக்கும்போது உயிரிழந்த காரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும் 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றனர்.

 

இந்தியாவின் பாரம்பரிய புடவை கட்டும் முறைகள்!

சிறுகதை - ‘ஹாய்’?

ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துதா? இத செஞ்சா ஸ்பீடு சும்மா அள்ளும்!

ஈஸி & டேஸ்டி ஜவ்வரிசி வெஜிடபிள் கிச்சடி!

சிறுகதை - எதிர்வீட்டு ஜன்னல்!

SCROLL FOR NEXT