இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்து புதிய அதிபர் பொறுப்பேற்ற நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்ற செய்திகள் வந்துள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் கட்சி வெற்றிபெற்றது. இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச பிடித்தார். மற்றும் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்தைப் பிடித்தார்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2வது முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே இரண்டாவது முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.
இதனையடுத்துதான் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றிபெற்றது உறுதியானது. இவர் பதிவியேற்ற நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகினார். பிரதமர் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் அமைச்சர் பதவியை விட்டு விலகினர். புதிய அதிபருக்கு நெருக்கமானோர் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்தன.
இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை வரலாற்றிலேயே மூன்றாவது பெண் பிரதமராவார். ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முன்னிலையில் ஹரிணி அமரசூரியா பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து தற்போது இலங்கை நாடாளுமன்றம் அதிபரால் கலைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நவ.14ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் மூலம், தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான கட்சியை கட்டமைக்கவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபர் அநுர குமார திசாநாயக நேற்று (செப். 24) கையொப்பமிட்டார். மேலும் நவ.14-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாகவும், நாடாளுமன்ற முதல் கூட்டம் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில், இலங்கை அதிபர் முன்கூட்டிய கலைத்து தேர்தல் நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.