தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு நடிகர் மற்றும் அரசியல் பிரபலம் என்றால் அது விஜயகாந்த் தான். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் பல வருடங்களாகவே உடல் நிலை மோசமாகி வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஆண்டுதோறும் அவரின் பிறந்த நாளன்று ரசிகர்களை சந்திப்பார்.
இந்த நிலையில், மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு இந்த மாதம் 12ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து கையசைத்தார்.
இந்நிலையில், அவர் மீண்டும் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்த தொண்டர்கள் மீண்டும் அவருக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு தேமுதிக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.