‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று வலியுறுத்தி திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் ‘மணிப்பூர் கலவரத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சியினர் தொடர் வலியுறுத்தலை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மாநிலங்களவையிலும், மக்களவையிலும் தொடர் கூச்சல் குழப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படும் நிகழ்வுகளும் வாடிக்கையாகவே உள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், ‘தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்’ என்று கேட்டு திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் ஒன்றை வழங்கி உள்ளார்.
அந்த நோட்டீசில், ‘தமிழ்நாடு ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் மக்களவையில் வழக்கமான அலுவல் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.