செய்திகள்

போலி விமான டிக்கெட்... போலீசில் சிக்கிய நபர்!

கிரி கணபதி

மும்பை விமான நிலையத்தில், போலி விமான டிக்கெட்டுடன் வந்த நபரைக் கண்டு பயணிகள் அஞ்சிய நிலையில், அவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தற்போதெல்லாம் சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடக்கத் தொடங்கிவிட்டது. அதாவது போலி டிக்கெட்டைப் பயன்படுத்தி ஹீரோ வெளி நாடுகளுக்குப் பரப்பது, வில்லனைப் பிடிப்பதற்கு மாறுவேடத்தில் விஸ்வரூபம் எடுத்து ஏமாற்றுவது போன்ற காட்சிகளில் நடிப்பதை பார்த்திருப்போம். அவர்கள் நடிப்பதை அந்த நேரத்தில் பார்த்து கைதட்டிவிட்டு, அடுத்த வேலையை நாம் பார்க்க சென்றுவிடுவோம். 

ஆனால் சிலர் திரைப்படங்களில் வரும் காட்சிகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, நிஜ வாழ்க்கையிலும் அதை முயற்சித்து போலீசில் மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது மும்பை விமான நிலையத்தில் நடந்துள்ளது. மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் என்ற நபர் கையில் ஒரு விமான டிக்கெட்டை வைத்துக்கொண்டு, மும்பை விமான நிலையத்துக்குள் நுழைந்தார். அப்போது அவரது டிக்கெட்டை ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்தபோது அது போலியான டிக்கெட் என்பது தெரிய வந்தது. 

இதனால் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்த CISF அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தனர். அந்த சமயத்தில் அவர் தப்பிக்க முயன்றதால், அருகே இருந்த சக விமான பயணிகள் பயத்தில் தெரித்து ஓடினர். இருப்பினும் அவரைப் பிடித்த அதிகாரிகள், மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் கடந்த வாரம் டெல்லியிலிருந்து மும்பைக்கு வந்துள்ளது தெரியவந்தது. அப்போது விமான நிலையத்தில் தனது செல்போனை தவற விட்டிருக்கிறார், போன் தொலைந்த சம்பவம் வீட்டிற்கு சென்று பிறகுதான் அவருக்கே தெரிந்திருக்கிறது. எனவே மீண்டும் விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் டிக்கெட் வேண்டும். எனவே அவரிடம் ஏற்கனவே இருந்த டிக்கெட்டை போலியாக மறு உருவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். 

தனது லேப்டாப்பைப் பயன்படுத்தி பழைய டிக்கெட்டில் டெல்லி - மும்பை என்பதை மும்பை - டெல்லி எனவும், அந்த டிக்கெட்டின் தேதியையும் மாற்றியுள்ளார். இதை வைத்து விமான நிலையத்திற்குள் நுழைந்து, அங்கே சிசிடிவி-யைப் பயன்படுத்தி தனது செல்போனைக் கண்டு பிடித்துவிடலாம் என்பது தான் அவருடைய திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. 

இருப்பினும் இவர் கொடுத்த வாக்குமூலத்தை போலீசார் நம்பாததால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைவாசம் விதிக்கப்படலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT