செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல்: துணை முதல்வரான அஜித் பவார் - மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த ரகசிய சந்திப்பு!

ஜெ. ராம்கி

மறுபடியும் மகராஷ்டிரா அரசியல் தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. இம்முறையும் அஜித் பவார், அதிரடி நாயகனாக உருவெடுத்திருக்கிறார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கிடைத்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், பா.ஜ.கவை எதிர்த்து நம்பிக்கையோடு களமிறங்கி பாட்னாவில் ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சிகளையும் மகராஷ்டிரா அரசியல் நகர்வுகள் மிரள வைத்திருக்கின்றன.

அஜித் பவார், கடந்த ஆறு மாதங்களாகவே தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கையை பற்றி யோசித்து வந்திருக்கிறார் என்கிறார்கள் அவரது நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அவரது அரசியல் நகர்வுகள் இம்முறை ஷிண்டேவுக்கு எதிராக பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருக்கும் என்று மும்பை வட்டாரத்து செய்திகள் தெரிவித்து வந்தன.

அதிரடி அரசியலுக்கு பேர் போன அஜித் பவார், மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரே இரவில் கூட்டணி அமைத்து, அதிகாலை 5 மணிக்கு துணை முதல்வராக பதவியேற்றவர். 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.கவுக்கு தோல்வி கிடைத்தது. ஆனாலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அஜித்பவார், பா.ஜ.க கூட்டணியோடு சேர்ந்தார். ஆனால், 3 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிட்டது.

கட்சியை உடைத்துவிட்டு வெளியேறி, துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டதை உலகமே பார்த்தாலும் கட்சி உடையவில்லை என்று அவரது கட்சியைச் சேர்ந்த முக்கியமான தலைவர்களெல்லாம் மறுத்தார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறவில்லை. சரத்பவாரின் ஆசியுடன்தான் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தார் என்றும் பேசப்பட்டது. அதுதான் உண்மை என்று பா.ஜ.கவினரும் இன்று வரை பேசி வருகிறார்கள்.

தன்னுடைய கட்டளையை மீறி கட்சிக்குள் அஜித்பவார் கலகம் செய்ததாகவும் பின்னர் அவரை மன்னித்து கட்சியில் சேர்த்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக்கியதாக சரத்பவார் தரப்பு விளக்கமளித்தது. 2019ல் தவறவிட்டதை, 2023ல் அஜித்பவார் செய்ய நினைப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன.

சிவசேனாவின் ஷிண்டேவால் முடிந்ததை தன்னாலும் செய்ய முடியும் என்று அஜித்பவார் நினைப்பதாக பா.ஜ.கவுக்கு செய்தி அனுப்பினார்கள். சென்ற முறை போல் இதற்கும் சரத்பவார் ஆதரவளிப்பாரா அல்லது அஜித்பவாரை கட்சியிலிருந்து விலக்குவாரா என்கிற கேள்வியும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அஜித் பவார், திரைமறைவில் ஏதோ செய்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் காட்சிகளும் அரங்கேறின.

ஒருமுறை மாலை நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரான அஜித் பவார், அரசு வாகனங்களை திருப்பி அனுப்பிவிட்டு தனியார் வாகனத்தில் எங்கேயோ கிளம்பிச் சென்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் அஜித் பவார் வசமிருப்பதாகவும், சரத் பவார் தலைமையில் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து புதிய தேசியவாத கட்சியை உருவாக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்து புதிய அரசை அமைக்கவிருப்பதாகவும் பட்னாவிஸ் முதல்வர் என்றும் அஜித் பவார் துணை முதல்வராக இருப்பதாகவும் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மறுநாள் தன்னுடைய மனைவியுடன் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அஜித்பவார் அத்தனை செய்திகளையும் மறுத்தார்.

ஓய்வெடுக்க சென்றதாகவும், தன்னைப் பற்றி தேவையில்லாத வதந்திகள் பரவி வருவதாகவும் விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவருக்கான புரோட்டோகாலை பின்பற்றாமல், தன்னுடைய எந்தவொரு கட்சித் தலைவரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சென்று ஷிண்டே மற்றும் பா.ஜ.க பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருக்கு வந்துதானே ஆகவேண்டும்!

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT