அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 1999ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு இவர் அதிமுகவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, இவர் தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்து, ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தியபோது, அவருக்கு ஆதரவாக இருந்து வந்தார் மைத்ரேயன். அதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதலின்போது எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். அந்த அணியில் அவருக்கு எந்த முக்கியமான பொறுப்புகளும் கொடுக்கப்படாத சூழலில், மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத் திரும்பி வந்தார். அதையடுத்து, டாக்டர் மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியிலும் இல்லாமல், ஓ.பன்னீர்செல்வம் அணியின் பக்கமும் ஓட்டாமல், அரசியலில் ஈடுபாடு காட்டாது ஒதுங்கியே இருந்து வந்தார் மைத்ரேயன். அதையடுத்து, மீண்டும் பாஜகவிலேயே தன்னை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்தான் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் மறுபடியும் தாய் வீடான பாஜகவிலேயே தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறார்.