செய்திகள்

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு!

ஜெ.ராகவன்

பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வர் பதவி வகித்தவரும் அகால் தக்த் அமைப்பின் ஆதரவாளருமான பிரகாஷ் சிங் பாதல் (95), செவ்வாய்க்கிழமை, மொஹாலியில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

முதுமை காரணமான மூச்சுவிடுவதில் சிரம்ம் ஏற்பட்டதால் அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என மருத்துவமனையின் இயக்குநர் அபிஹிஜித் சிங் தெரிவித்தார்.

பிரகாஷ் சிங் பாதல், பஞ்சாபில், ராஜஸ்தான் எல்லையை ஒட்டிய அபுல் குரானா என்னுமிடத்தில் பிறந்தவர். லாகூரில் உள்ள ஃபோர்மன் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தார்.

கிராமப் பஞ்சாயத்து தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பிரகாஷ்சிங் பாதல், 1957 ஆம் ஆண்டு தனது 30-வது வயதில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் இளம் வயதில் அதாவது 43 வயதில் முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தவர் பிரகாஷ் சிங் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 70 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் இரண்டு முறை தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார். 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் தோல்வியையும், பின்னர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் மாநில தேர்தலில் இரண்டாவது முறையாவும் அவர் தோல்வியை சந்தித்தார்.

அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் ஒளிந்திருந்த தீவிரவாதிகளை பிடிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ராணுவம் “ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்” நடவடிக்கையை எடுத்தபோது பாதல் கைது செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு புதிய வேளாண் கொள்கை சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அகாலிதளம் கட்சித் தலைவரான பாதல், பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொண்டார். 2015 ஆம் ஆண்டு தமக்கு அளிக்கப்பட்ட உயரிய விருதான பத்ம விபூஷண் விருதையும் அவர் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

சட்லெஜ் யமுனை இணைப்பு கால்வாய் நீரை பக்கத்து மாநிலமான ஹரியானாவுடன் பகிர்ந்து கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது தலைமையில்தான் மாநில அரசு சர்ச்சைக்கிடமான சட்லஜ் யமுனை இணைப்புக் கால்வாய் திட்ட மசோதாவை 2016 இல் நிறைவேற்றியது.

“இந்திய அரசியலில் மிகப் பெரிய தலைவராக பிரகாஷ் சிங் பாதல் திகழ்ந்தார். நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றிய சிறந்த அரசியல் தலைவர். பஞ்சாப் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்தவர். அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பாகும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பாதல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT