இந்தியாவில் நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது. நேற்று, உலக வங்கியின் கணிப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகின. அதில் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டு ஆரம்பமாகி, நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து ஏராளமான கணிப்புகள் வெளிவர ஆரம்பத்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பொருளாதார வளர்ச்சி பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது. சென்ற காலாண்டில் வெளியான கணிப்புகளில் நடப்பாண்டில் 6.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தது. இது பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் சோர்வை தந்திருக்கிறது.
அதிகரித்து வரும் கடன் சுமை, தனி நபர் வருமானத்தில் மந்தமான வளர்ச்சி ஆகியவற்றால் மக்களின் வாங்கும் திறன் குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்களும் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டிருப்பதால் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்.
கொரானா தாக்கத்திலிருந்து விடுபட்டு, இந்தியா கொரானாவுக்கு முந்தைய காலகட்டத்தை எட்ட ஆரம்பித்திருப்பதால் பொருளாதார வளர்ச்சியும் தற்போதைய நிலையை விட நடப்பாண்டில் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், பணவீக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி கணித்திருப்பதால் இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுவதற்கு வாய்ப்புண்டு என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.
தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி இ 2.2 சதவீதம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. வரும் நிதியாண்டில் இன்னும் குறைந்து 1.9 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி மட்டுமல்ல ஆசிய வளர்ச்சி வங்கியும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி, ஏற்கனவே 7.2 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது. தற்போது அதை வெகுவாக குறைத்து 6.4 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
உலகளாவிய சூழல் எப்படி இருந்தாலும் அதை சமாளித்து, முன்னேறிச் செல்வதற்கு இந்தியாவால் முடியும் என்பதை இரு சர்வதேச வங்கிகளும் குறிப்பிட்டுள்ளன. வெளியுலக அழுத்தங்களை சமாளிக்கும் திறன், இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று உலக வங்கியின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்கள்.
கொரானா தொற்று, உக்ரைன் யுத்தம் போன்ற பதட்டமான சூழலில் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உறுதியாக, ஏறுமுகத்தில் இருந்திருக்கிறது. அண்டை நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியா, எவரையும் சார்ந்திராமல் தன்னிறைவு பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.