கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் உற்பத்தியாகும் தேனுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மேலும் மயிலாடி கல் சிற்பத்துக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மொத்தம் மார்த்தாண்டம் தேன் உட்பட 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற ஒரே மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
புவிசார் குறியீடு சட்டம் கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் மட்டும் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழகத்திற்கு மட்டும் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை முறையில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அம்மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம், தமிழகத்தின் தேன் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.
இங்கு தேன் உற்பத்திக்கு அச்சாரமிட்டது 1920-ம் ஆண்டு ஆகும். மார்த்தாண்டத்தில் ரப்பர் மரத்தில் கூடுகளை பயன்படுத்தி தேன் சேகரிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். அன்று முதல் முழுநேர, பகுதி நேர தொழிலாக பலர் இந்த தேன் உற்பத்தியை நடத்தி வருகிறார்கள். இங்கு ரப்பர் சார்ந்த தொழிலாக தேனீ உற்பத்தி செய்யப்படுவதும் தனித்தன்மை வாய்ந்தது.
மற்ற இடங்களில் உற்பத்தி செய்யும் தேனை விட மார்த்தாண்டம் தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. இங்கு தேன் சுகாதாரத்தோடு சேகரிக்கப்படுவதால் தரமானதாகவும் இருக்கிறது. எனவே இதனை அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள்.
இது தவிர மார்த்தாண்டம் தேனில் குளுக்கோஸ் அதிகம் இருப்பதாக தேன் உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக மார்த்தாண்டத்தை தமிழகத்தின் தேன் கிண்ணம் என்று சொன்னால் மிகையில்லை. இதுபோன்ற சிறப்புகளால் தான் மார்த்தாண்டம் தேனுக்கு ஒரு மகுடமாக தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
மார்த்தாண்டம் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள காப்புகாடு, குழித்துறை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு, அருமனை, களியல், கடையாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே குமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.