மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெள்ளை அங்கி அணிந்து 'சரக் சபத்' உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியிலும் இதே உறுதிமொழி எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பின்னர் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். மேலும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் ஹிப்போகிரெடிக் உறுதிமொழி மட்டுமே எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் பொதுவாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எடுக்கும் உறுதிமொழி என்ன என்பது குறித்து அமெரிக்காவில் புற்றுநோயியல் வல்லுனராக பணியாற்றும் டாக்டர் உஷா வைத்தியநாதனிடம் கேட்டோம். அவர் விளக்கியதாவது;
''உலகம் முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது மருத்துவ படிப்பை தொடங்கும் போது, முதன்முதலாக வெள்ளை அங்கி அணிந்து உறுதிமொழி எடுப்பார்கள். பொதுவாக இந்தியா உட்பட பல நாடுகளில் ஹிப்போகிரெடிக் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
அதாவது கிரேக்கத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹிப்போகிரெடிக் என்ற மருத்துவரின் உரையே இந்த உறுதிமொழி ஆகும். அதில் கிரேக்க கடவுளான அப்போலோ ஹீலர் மற்றும் அனைத்து கடவுளர் பேரிலும் சத்தியம் செய்கிறேன் என்று தொடங்கப்படும். கடந்த 1948-ம் ஆண்டு இந்த உரை மாற்றி அமைக்கப்பட்டு உலக மருத்துவ சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த உறுதிமொழியில் ''நான் ஒரு புதிய மருத்துவராக நோயாளிகளைக் கவனித்துக் கொள்வேன். என்னால் இயன்றவரை மனித குலத்திற்கு சேவை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ பயிற்சி என்பது கணிசமான பொறுப்பைக் கொண்ட ஒரு சிறப்புரிமை என்பதை நான் அங்கீகரிக்கிறேன். மேலும் எனது பதவியை நான் தவறாக பயன்படுத்த மாட்டேன். நோயாளியின் ரகசியத்தன்மையை நிலைநிறுத்துவேன். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் மருத்துவ அறிவை மேம்படுத்த முயற்சிப்பேன்''
'' இதுதான் ஹிப்போகிரெடிக் உறூதிமொழியின் சாராம்சம். ஆனால் அமெரிக்காவில் ஆஸ்டியோபதிக் என்ற உறுதிமொழியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எடுக்கின்றனர். சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் வெவ்வேறு உறுதிமொழிகள் கடைபிடிக்கப் படுகின்றன.'' என்றார், டாக்டர் உஷா வைத்தியநாதன்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய கூட்டத்தில் புதிய மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து 10 குறிப்புரைகள் வழங்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஹிப்போகிரெடிக் உறுதிமொழிக்கு பதிலாக 'மகரிஷி சரக் சபத்' உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என்பதுதான்! இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன 'மகரிஷி சரக் சபத்' உறுதிமொழி?
இது குறித்து, சம்ஸ்கிருத வல்லுனரும் குடல்நோய் நிபுணருமான டாக்டர் ஹரிஹரன் என்பவரிடம் கேட்டோம். அவர் விளக்கினார்..
மகரிஷி சரகர் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவர். அவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய 'இந்திய மருத்துவ முறைகள்' என்ற நூலிலிருந்து 'மஹரிஷி சரக் சபத்' உறுதிமொழி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. அதில் '' நான் மருத்துவ படிப்பு படிக்கும் காலத்தில் எனது ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்களுடன் ஒழுக்கமாக வாழ்வேன். ஒரு மருத்துவராக, என் அறிவை மனித குலத்தின் நலனுக்காக பயன்படுத்துவேன். பணத்திற்காக அல்லது சுயநலத்திற்காக எந்த நோயாளிக்கும் தீங்கு செய்ய மாட்டேன். இந்த துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிந்துகொள்ள தொடர்ந்து முயற்சிப்பேன். பெண் நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் முன்னிலையில் சிகிச்சை அளிப்பேன். எந்தவொரு நோயாளி அல்லது அவரது குடும்பம் தொடர்பான ரகசியங்களை வெளியிடமாட்டேன்'' என்பது சாராம்சம்.
இந்திய மருத்துவக் கல்லூரிகளில் ஹிப்போகிரெடிக் உறுதிமொழிக்கு பதிலாக இதை நடைமுறைப் படுத்துவதற்கு
மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகியவற்றில் சில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் மான்சுக் மான்டவ்யா பதிலளிக்கையில், ''மகரிஷி சரக் சபத் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது தேசிய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரை! ஆனால் அது கட்டாயம் அல்ல'' என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில்தான் மதுரை மருத்துவ கல்லூரி மற்றும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மகரிஷி சரக் சபத்தின் சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்றது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.'' என்று விளக்கமாக சொல்லி முடித்தார் டாக்டர். ஹரிஹரன்.