செய்திகள்

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் பூங்காவில் வேலை - சென்னை மாநகராட்சி!

ஜெ. ராம்கி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிய வேண்டும் என்று புதிய விதிகளை மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இது தவிர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பூங்காக்களிலும் பல தடாலடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை மாநகரம் முழுவதுமுள்ள பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தரும் பணிகள் சென்ற ஆண்டு ஆரம்பமானது. பூங்காக்களில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை நியமிக்கும் மசோதா சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதையெடுத்து டெண்டர் விடும் பணிகள் ஆரம்பமாகின. சென்ற மாதம் டெண்டர்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. இதைத்தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை தனியார் நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை ஏறக்குறைய 786 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 145 பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளை சென்னை மாநகராட்சியே மேற்கொண்டு வருகிறது. மீதமுள்ள 584 பூங்காக்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வட இந்திய தொழிலாளர்களாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

தனியார் நிறுவனங்களின் பராமரிப்பில் உள்ள ஊழியர்கள், பிற மாநிலங்களிலிருந்து வரவிருப்பதால் தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்கவேண்டும் என்கிற நிபந்தனையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் முன்வைத்திருக்கிறது. உள்ளூர்வாசிகளுடன் நல்ல தொடர்பில் இருப்பதற்கு தமிழ் தெரிந்திருக்கவேண்டும் என்பதால் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பூங்காக்களில் பணியாற்றும் ஊழியர்கள் சீருடை அணிந்தாக வேண்டும். 18 வயது முதல் 58 வயது வரையிலான ஆரோக்கியமான ஊழியர்களே நியமிக்கப்படவேண்டும். பூங்காக்களின் பராமரிப்பு பணிக்காக முழு நேரமும் அங்கே பணியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 5 மணிக்கு புல்வெளிகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். நடைபாதைகள், உட்காரும் இடங்களை தூய்மையாக பேண வேண்டும். நடைபாதை டைல்ஸ் உடைந்து போனால் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். குழந்தைகள் விளையாடும் இடங்கள், கடல் மண்ணால்

நிரப்பப்படவேண்டும். காய்ந்த இலைகள், குப்பைகள் உடனே அகற்றப்படவேண்டும். புல்வெளிகள் மாதத்திற்கு இருமுறை சீராக வெட்டிவிடப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிய மரங்கள் நடப்படவேண்டும்.

பூங்காக்களில் உள்ள மோட்டார்கள், பராமரிப்பு பணிக்கான இயந்திரங்கள், மின்சார சாதனங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க காவலாளிகள் காலை 5 மணி முதல் மாலை 9 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் தோட்டக்கலை தொடர்பான பணிகளில் பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். இது குறித்த சான்றிதழை காண்ட்ராக்டர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு 10 பணியாளர்களுக்கும் ஒரு சூப்பர்வைசர் நியமிக்கப்படவேண்டும். சூப்பர்வைசர்களாக நியமிக்கப்படுபவர்கள் தோட்டக்கலை சம்பந்தப்பட்ட படிப்பில் குறைந்தபட்சம் டிப்ளோமோ பெற்றிருகக வேண்டும். பூங்காவின் பெயர், திறந்திருக்கும் நேரம், மூடப்படும் நேரம், பராமரிப்புப் பணியில் உள்ள ஊழியர்களின் தொடர்பு எண் உள்ளிட்டவை பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டு, பூங்காவின் முகப்பில் வைக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க வசதியாக 1913 என்னும் உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கண்டிஷன்கள் அசத்தலாகத்தான் இருக்கின்றன. நடைமுறையில் சாத்தியமாகுமா என்று சென்னை வாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள். பார்க்கலாம்!

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT