நீரிழிவு நோய் பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மனிதர்களுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்.
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் இருக்கும் கார்போஹைட்ரேட்டை உடைத்து குளுக்கோஸாக மாற்றுகிறது நமது உடல். ரத்தத்தில் கலக்கும் இந்த குளுக்கோஸை செல்களுக்கு நகர்த்தி, உடல் மிகச் சீராக இயங்க உதவக்கூடியது இன்சுலின் என்ற ஹார்மோன்.
இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி ஆகாத நேரத்தில், ரத்த ஓட்டத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவையே நீரிழிவு நோய் என்கிறது மருத்துவ உலகம். இதில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகைகள் உண்டு. டைப் 1 என்பது 12-ல் ஒருவருக்கு உள்ளது. அவர்கள் இன்சுலின் போட்டபடி வாழ்நாளை கடத்த வேண்டும். இது எப்படி தோன்றுகிறது என்பதே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் டைப் 2 நீரிழிவுக்கு பரம்பரை, உணவு பழக்க வழக்கம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பல பத்தாண்டுகளுக்கு முன்பு பணக்காரர்களின் நோய் என்று கூறப்பட்ட இந்த நீரிழிவு நோய், இப்போது ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடும் இன்றி பரவிக் கிடக்கிறது.
2021ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, உலக அளவில், சுமார் 54 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலையில், இந்த பட்டியலில் 14 கோடி நோயாளிகளுடன் முதலிடம் பிடித்திருப்பது சீனாதான். இரண்டாவது இடத்தில் இருப்பது 7 கோடியே 42 கோடி நீரிழிவு நோயாளிகளுடன் இருக்கும் நமது இந்தியா.
இதில், மக்கள் தொகை அடிப்படையில், 26.4 சதவீத நீரிழிவு நோயாளிகளுடன் முதலிடத்தில் இருப்பது கோவா மாநிலம். ஆனால், எண்ணிக்கை என்று பார்த்தால் ஒரு கோடி நோயாளிகளுடன் முதலிடத்தில் இருப்பது நமது தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகள் 14.4 சதவீதம் பேர், அதாவது நூற்றில் 14 பேர் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகள்.
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் ஏற்படும் விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் சராசரியாக 8 சதவீதம் வரையிலும் இருப்பதாக கூறுகின்றன ஆய்வு முடிவுகள். இந்த புள்ளி விவரங்கள் அனைத்துமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டவை மட்டுமே.