மத்திய கிழக்குப் பகுதிக்கு அருகே உள்ள ஆர்மேனியா நாட்டுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆசியாவின் மத்திய கிழக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள நாடுகள்தான் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா. அருகருகே இருக்கும் இந்நாடுகளுக்கு இடையே கடந்த சில காலமாக அங்குள்ள காராபாத் பிராந்தியத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற விவகாரத்தில் கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2020ல் கூட இரு தரப்பினரும் 45 நாட்கள் போர் நடத்தினர். அந்த சமயத்தில் அந்தப் போரில் ரஷ்யா தலையிட்ட பிறகுதான் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் காரணமாக கடந்த ஆண்டு வரை சண்டை எதுவும் நடக்காமல் இருந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'பினக்கா மல்டி பேரல்' ராக்கெட் லாஞ்சர்கள் ஆர்மேனியா நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது அஜர்பைஜான் நாட்டுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர்கள் முதலில் ஈரானில் நுழைந்து அதன் எல்லை வழியாக ஆமேனியாவுக்குள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆயுதங்களை எடுத்துச் செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க இதற்காகவே புதிய வாகனம் வடிவமைக்கப்பட்டு ஆயுதங்கள் அனுப்பப் பட்டுள்ளதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. அது தொடர்பான காணொளி ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து ஆர்மேனியாவுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்ட செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, அஜர்பைஜான் அதிபரின் வெளிஉருவுக் கொள்கை ஆலோசகர் அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரை சந்தித்தார். ஆர்மேனியா நாட்டுக்கு இந்தியா ஆயுதங்கள் அனுப்பிய காணொளியை அவரிடம் காட்டி இது தங்களின் நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் ஆர்மேனியா நாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் துருக்கி மற்றும் பாகிஸ்தானின் நட்பு நாடாக அஜர்பைஜான் இருப்பதால் அந்த நாடுகளிடமிருந்து, அஜர்பைஜான் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நிலையில், ஆர்மேனியாவுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது.