ஒரே நாளில் 6 முறை மாரடைப்பு ஏற்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயது இந்திய வம்சாவளி மாணவரை பிரிட்டன் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டல் நகரில் வசித்து வருபவர் அஜய். இவர் அங்கேயே மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீவித்யா கணித பேராசிரியராக உள்ளார். இவர்களின் மகனான அதுல் ராவ் டெக்ஸாஸில் மருத்துவத்தில் இளநிலை பட்டப் படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் படிப்பு சம்பந்தமாக பிரிட்டன் இம்பீரியல் கல்லூரிக்கு சென்றபோது அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்து மாணவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதுலுக்கு நுரையீரலில் ரத்தக்கட்டி ஏற்பட்டிருந்ததையும், இதனால் இதயத்துக்கான ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததையும் கண்டறிந்தனர். அப்போது இவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் புனித தாமஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து அவருடைய அடைப்பை நீக்கும் மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமடையத் தொடங்கினார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக ஒரே நாளில் 6 முறை மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் முழுமையாக குணமடைந்த அதுல் அமெரிக்கா திரும்பிய நிலையில், அண்மையில் மீண்டும் தனது பெற்றோருடன் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டு, அவருக்கு சிகிச்சை அளித்த இரு மருத்துவமனைகளுக்கும் சென்று தனக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்களை சந்தித்து நன்றி கூறினார்.
பின்னர் அதுல் ராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லூயித் தாக்குரியா கூறுகையில், "20 வயதான நபருக்கு மாரடைப்பு வருவது அரிதானதாகும். அதிலும் ஒரே நாளில் ஆறு முறை மாரடைப்பு ஏற்பட்ட நபர் குணமடைவதெல்லாம் அரிதிலும் அரிதான அதிசயம். இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல குழுக்கள் ஒன்றாக இணைந்து பலரும் உதவினார்கள். இவரது உயிரை காக்கும் முயற்சியில் நானும் ஒருவனாக இருந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.